பங்காளிகளுடனான ஐ.தே.கவின் உடன்படிக்கை, நிகழ்வு ஒத்திவைப்பு
தேசிய ஜனநாயக முன்னணியை அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வை எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவிருந்த நிலையில் கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்துக்கமைய அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றதால் கட்சியின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
ஐ.தே.கவின் தலைமையில் ‘தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற புதிய கூட்டணியை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறார். தற்போதைய ஐ.தே.க. அரசின் பங்காளிக் கட்சிகளை இணைத்து இந்தக் கூட்டணியை அமைக்க அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்கான உடன்படிக்கையை எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கைச்சாத்திடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணியின் யாப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறித்த யாப்பின் பிரகாரம் ஐ.தே.கவின் பலம் குறைவாக உள்ளதாக கட்சியின் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். அத்துடன், கூட்டணியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகள் ஐ.தே.க வசமே இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். அத்துடன், 5ஆம் திகதி நடைபெறும் நிகழ்வை ஒத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையடுத்து யாப்புக்கான திருத்தங்களை முன்வைக்குமாறு பிரதமர் பணித்திருந்தார். இவ்வாறான பின்புலத்திலேயே மேற்படி நிகழ்வை ஒத்திவைக்க ஐ.தே.கவின் உயர்பீடம் நேற்று தீர்மானித்துள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
Post a Comment