சஹ்ரானின் சகாக்கள் தொடர்ந்தும், பிடிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் - அபயதிஸ்ஸ தேரர்
நல்லாட்சிக் குழுவுக்கு வெளியே வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் ஒருவருடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக இணைந்து செயற்படவுள்ளதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசியரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவாளிகள் கழகம் எனப்படும் ஜாதிக வியத் பவுர அமைப்பின் ஊடக சந்திப்பொன்று இன்று நுகேகொடையில் உள்ள பெப்பிலியான சுனேத்ராதேவி விகாரையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர்,
தேசிய பிக்குமார் புத்திஜீவிகள் அமைப்பு என்ற வகையில் கடந்த காலங்களில் நாங்கள் புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக மட்டத்திலிருந்தும் பெற்றுக் கொண்ட கருத்துக்களை உள்ளடக்கி பத்துக் கட்டளைகள் சட்டமொன்றை முன்வைத்தோம்.
அதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவே வியத் பவுர அமைப்பை உருவாககியுள்ளோம்.
எங்களது தேசிய செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பொருத்தமான அரசியல் தலைமை தேவை. நாட்டில் நிலவும் மத பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளது.
அவர்களால் அதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
சஹ்ரானின் சகாக்கள் தொடர்ந்தும் பிடிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மறுபுறத்தில் இப்பிரச்சினையை மையமாக வைத்து அமெரிக்கா எமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவதற்காக நல்லாட்சிக்கு வெளியே பொருத்தமான தலைமைத்துவம் ஒன்றுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment