Header Ads



குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளி கோத்தபாய, நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளதுடன், மகிந்த ராஜபக்ச தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச என உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிரும் புதிருமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டதாவது,

கோத்தபாய ராஜபக்சவின் வெள்ளைவான் அராஜகம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.

மகிந்த ராஜபக்ச எதிர்கட்சியில் பதவி வகித்த கடந்த நான்கு வருட காலப்பகுதியில் எந்த பாடத்தையும் கற்கவில்லை, அவர் தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார் என்பதை உணரவில்லை, தான் நாட்டை அதிகளவிற்கு பயமுறுத்தினேன் என்பதை உணரவில்லை, தான் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தினேன் என கவலையடையவில்லை.

பிரகீத் எக்னலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை குறித்தும் லசந்தவிக்கிரமதுங்கபடுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ச கவலைப்படவில்லை.

இதேவேளை, தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கியதேசிய கட்சி கோத்தபாயராஜபக்சவை தோற்கடிக்கும்.

இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொருநாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டவராகவும் ஐக்கிய தேசிய கட்சியினாலும் அதன் கூட்டணிகளாலும் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்டவராகவும் காணப்படுவார் என்றார்.

No comments

Powered by Blogger.