முஸ்லிம் சட்ட திருத்தம் சிபாரிசுகள் வெளியாகியது, அரசியல்வாதிகள் அங்கீகரித்து, தலதாவிடம் கையளிப்பு
நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருந்த முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த சிபாரிசுகளுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் நேற்று இறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை நேற்று அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 11 ஆம் திகதி அங்கீகரித்திருந்த சிபாரிசுகளில் ‘பெண் காதி நியமனம்’ தவிர்ந்த ஏனையவற்றுக்கு நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஹஜ் கடமைக்காக நேற்று மாலை மக்கா நோக்கிப் பயணமானதால் அவர் நாடு திரும்பியதும் நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சர் தலதா அத்துகோரளவும், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் இணைந்து சட்டவரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்றுக் காலை பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவருமான ஏ.எச்.எம்.பௌசியின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திலே இச்சிபார்சுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு தனது திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை கடந்த வருடம் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் வழங்கியது. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்த சிபாரிசு குழு இரண்டாகப் பிளவுபட்டு நீதியமைச்சரிடம் இரு வேறு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது. இதனால் அமைச்சர் தலதா அத்துகோரளவினால் இறுதியான தீர்மானம் ஒன்றினை எடுக்க இயலாத நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட சிபாரிசுகளாவன:-
· திருமண வயதெல்லை – முஸ்லிம் ஆண், பெண்களுக்கு 18
· திருமண பதிவும், நிக்காஹ்வும் திருமணத்தை வலிதாக்கும்.
· மத்தாஹ் (நஷ்ட ஈடு), தலாக், குலா மற்றும் பஸ்ஹ் விவாகரத்தின்போது வழங்கப்பட வேண்டும். கணவன் தான் மத்தாஹ் வழங்க வேண்டியேற்படும் என்பதற்காக மனைவியை பஸ்ஹ் விவாகரத்து பெற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்தித்ததாக உறுதி செய்யப்பட்டாலே பஸ்ஹ் விவாகரத்தின் போது மத்தாஹ் வழங்கப்படும்.
· மத்ஹப்கள் – முஸ்லிம் விவாகத்தில் தரப்பினர் இரு வேறுபட்ட மத்ஹப்களைச் சேர்ந்தவர்களாயின் அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட மத்ஹபினால் ஆளப்படுவதற்கு இணக்கப்பாட்டினைத் தெரிவிக்க வேண்டும்.
· ஒரு தரப்பு அல்லது இரு தரப்பினரும் முஸ்லிம் விவாகத்தில் எந்த மத்ஹபைச் சார்ந்தவர்களாகவும் இல்லாதிருந்தால் அல்லது அவர்களது திருமணம் இருவேறு மத்ஹபுகளுக்கு உட்பட்டதாக இருந்து அவர்கள் மத்ஹப் தொடர்பில் இணக்கப்பாடொன்றினை எட்டாதவிடத்து அவர்களது திருமணம் தொடர்பான அனைத்து விடயங்களும் இஸ்லாமிய சட்ட விதிகளுக்கு அமையவே கையாளப்படுமே தவிர எந்தவொரு மத்ஹபின் அடிப்படையிலும் கையாளப்பட மாட்டது.
· காதி நீதிபதிகளின் தகைமையும் காதி நீதிமன்றங்களும்
காதி நீதிமன்றங்களின் தரம் மேம்படுத்தப்படும். இலங்கை நீதித்துறைக்கு அமைவாக காதி நீதிபதிகளின் பதவி மேம்படுத்தப்படும். காதிநீதிபதிகள் நிரந்தர முழுநேர நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள். அவர்களது தரம், வகுப்பு என்பன நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்படும்.
காதி நீதிபதிகளாக இஸ்லாமிய சட்ட அறிவுடன் கூடிய சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவர்.
· காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராக இடமளிக்கப்பட மாட்டாது.
· பலதார திருமணம் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். பின்வரும் விடயங்களில் காதி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும்.
மனைவியர்களை போதுமானளவு பராமரித்தல், பிள்ளைகளை போதுமானளவு கவனித்தல், மனைவியர்களை பராமரிக்க போதிய நிதிநிலைமை இருத்தல், தற்போதைய மனைவிக்கும் எதிர்கால மனைவிக்கும் திருமணம் தொடர்பில் அறிவித்தல். காதி நீதிபதியின் அனுமதி பெறாமல் செய்து கொள்ளும் பலதார மணம் தண்டனைக்குரிய குற்றமாகும்.
காதியின் அனுமதியில்லாமல் நடைபெறும் திருமணப்பதிவு வலிதற்றதாகும்.
· திருமண அத்தாட்சிப் பத்திரத்தில் ‘வொலி’ கையொப்பமிடுவதுடன் மணமகளும் கையொப்பமிட வேண்டும்.
· கைக்கூலியை திருப்பிப் பெற்றுக் கொள்ளுவது போன்று அசையாத சொத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
· முஸ்லிம் விவாக விவாகரத்து ஆலோசனை சபை மற்றும் காதிகள் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படும். பெண்கள் விவாக பதிவாளர்களாக நியமிக்கப்படுவர்.
· தாபரிப்பு தொடர்பான சட்ட அதிகாரம் காதி நீதிமன்றத்திடமிருந்து மாவட்ட நீதிமன்றுக்கு வழங்கப்படும்.
vidivelli
Most of these amendments are need of the hour. I see these as blessings in disguise.
ReplyDeleteதிருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட்டது வரவேற்க வேண்டிய விடயம்.
ReplyDeletealhamdhulillah
ReplyDeleteஅப்போ பள்ளிவாயிலில் நடைபெறும் நிகாஹ் வைபவத்தின் போது மணமகளும் சமூகமளிக்க வேண்டி வருமே ..... கையொப்பமிட.......
ReplyDeleteஅப்போது ஆண்_பெண் கலப்பு தவிர்க்க முடியாததாகி விடும்.......
எதிர் காலத்தில் நிகாஹ் வைபவங்களுக்கு பள்ளிவாசலை புறக்கணிக்க வேண்டிய நிலை வரலாம்...
பலதாரா திருமனச் சட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும். காதி நீதிபயின் அனுமதி இல்லாமல் செய்துகொள்ளும் பலதார திருமணதிட்கு என்ன தண்டனை?
ReplyDelete