ரணிலினால் ஓரம்கட்டப்பட்ட சஜித் - அன்று பிரேமதாசவுக்கு ஜே.ஆர் செய்த வழியை பின்பற்றினார்
ரணசிங்க பிரேமதாசவை 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விரும்பவில்லை.
ஜே.ஆர் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தபோது பிரதமராகப் பிரேமதாச இருந்தார். ஆனாலும் பிரதமருக்குரிய மரியாதையுடன் பிரேமதாச ஜே.ஆரினால் நடத்தப்படவேயில்லை.
கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற ரீதியிலும் பிரேமதாசவிடம் அன்று இருந்து சண்டித்தன அரசியலுக்கும் அஞ்சியே ஜே.ஆர் பிரேமதாசவை அன்று பிரதமராக ஒப்பாசாரத்துக்கு நியமித்திருந்தார்.
1988 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரேமதாசவின் சண்டித்தனத்துக்கு அஞ்சியே அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஜே.ஆர் விருப்பமில்லாமல் அருவருப்புடன் நியமித்திருந்தார்.
அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும், பிரேமதாச தோல்வியடைவாரெனவும் அன்று ஜே.ஆர் நம்பியிருந்தார். (ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் தேர்தலில் வாக்களிக்கவேயில்லை.)
உண்மையில் அந்தத் தேர்தல் நீதியாக நடைபெற்றிருந்தால் சிறிமாவோ பண்டாரநாக்கவே வெற்றி பெற்றிருப்பார். (வெற்றிபெற்றது சிறிமாதான் என்றும் சொல்லாம்)
பிரேமதாசவின் சண்டித்தனமும் அரசியல் பலமும் அவரை வெற்றிபெறச் செய்துள்ளது. ஆக ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில், அதாவது 50 தசம் ஒரு வீதத்தில் பிரேமதாச வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.
சாதியை மையமாகக் கொண்டே பிரேமதாசவை அன்று ஜே.ஆர் ஒதுக்கினார் என்பது வெளிப்படை. இன்று அவருடைய மகன் சஜித் பிரேமதாசவும் அதே காரணத்திற்காகவே ஒதுக்கப்பட்டார் என்பது கண்கூடு.
ஆனால் அன்று பிரேமதாசவிடம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த சண்டித்தனம், அரசியல் பலம், இன்று சஜித் பிரேமதாசவிடம் இல்லை. (தந்தையைப் போலன்றி மிகவும் மென் போக்காகவே சஜித் கட்சிக்குள் செயற்படுகிறார்)
இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க மிகவும் இலகுவாக சஜித் பிரேமதாசவை ஓரம்கட்ட முடிந்தது. ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய அறிவிக்கப்பட்டார்.
- Amirthanayagam Nixon -
Post a Comment