Header Ads



சாண் ஏறி முழம் சறுக்கும், தமிழ் - முஸ்லிம் உறவு

எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)

உரலுக்கு ஒரு பக்கம் அடி தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி என்று கிராமங்களில் பழமொழியொன்று கூறப்படுவது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்கமும் மாறி மாறி அடி விழுவது இலங்கை முஸ்லிம் சமூகத்தின தொடர் கதையாக மாறிவிட்டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயம் சிங்கள பேரினவாத சக்திகளாலும் தமிழ் குறுந்தேசியவாதிகளாலும் சுதந்திர வரலாற்றிலிருந்து இற்றைவரை இன நெருக்குவாரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இலங்கையில் வரலாற்றுக் காலம் முதல் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளது. தற்போதைய இன முறுகல்கள் சுமார் 19 ஆம்  நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஆரம்பித்துள்ளது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற கூற்றும், அதனைத் தொடர்ந்த முஸ்லிம் - சிங்கள இனக் கலவரம் என்பவற்றில் முஸ்லிம்களுக்கெதிரான அவரின் நிலைப்பாட்டுடன் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஆரம்பித்துள்ளமையும் எமது அவதானிப்புக்குறியது. தவிர, 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம் அனைத்தும் தமிழ்-சிங்கள உறவை மாத்திரமன்றி தமிழ்-முஸ்லிம் உறவையும் பாதித்தது.

இலங்கை முஸ்லிம்களை பொருத்தமட்டில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றனர். குறிப்பாக மூன்றில் இரண்டு பகுதியினர் வடகிழக்கில் வாழ்கின்றனர். சிங்களப்  பேரினத்திற்கும் தமிழ் சமூகத்திற்குமிடையிலான சாத்வீக வழிப் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது முஸ்லிம்கள் இடையில் அகப்பட்டு நசுக்கப்பட்டனர். இவ்வாறு நீண்ட கால கசப்பான வரலாற்றைக் கொண்ட இரண்டு சமூகங்களின் உறவு மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் இரண்டு தரப்புக்களாலும் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று தாசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் இன நல்லுறவு என்ற எண்ணக்கரு அனைவரினதும் கரிசனை பெற்ற ஒரு பிரதான விடயமாக திகழ்கிறது. அந்தவகையில் இலங்கை சிறுபான்மை சமூகங்கள் என்றடிப்படையில் தமிழ் - முஸ்லிம் உறவு எவ்வாறு காணப்பட்டது என்பதை கண்டறிவது அவசியமாகும்.

தமிழ் - முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களிடையே அரசியல், பொருளாதார, சமூக, சமய, கலாசார, கல்வி போன்ற சகல துறைகளிலும் நல்லுறவு பேணப்பட்டுள்ளது. அந்நல்லுறவுக்கு இரு இனங்களின் தாய்மொழியாக தமிழ் மொழி காணப்பட்டமை, அயல் கிராம வாழ்க்கை முறைமை போன்றன அடிப்படை உறவுப் பாலமாக திகழ்ந்துள்ளன. இன்றைய சூழ்நிலையில் பழைய இன நல்லுறவை மீண்டும் நினைவுபடுத்துவதும், தமிழ் - முஸ்லிம் உறவில் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்துவதும் கட்டாயமாகும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, தமிழர், முஸ்லிம்களின் உறவுக்குப் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’, ‘நகமும் சதையும்’ ஆகியவை உதாரணங்களாக எடுத்துக் காட்டப்படுவதுண்டு. அந்தளவுக்கு புவியியல், கலாசார, பண்பாட்டு அடிப்படையில் பின்னிப் பிணைந்த சமூகமாக, முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்ந்துள்ளார்கள்.

தமிழ் முஸ்லிம்களுக்கிடையேயான உறவு என்பது பாரம்பரியமிக்கது. சிங்களச் சமூகம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தபோதெல்லாம் தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். தந்தை செல்வாவின் பெடரல் கட்சியுடன் முஸ்லிம்கள் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தனர். இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வட கிழக்கிற்கு வெளியே வாழ்ந்ததால் தேசிய சிங்களக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என தேசிய அரசியலில் இணைந்து அவர்கள் ஈடுபட்ட போதும் வட கிழக்கில் தமிழ் கட்சிகளுடனே ஓரளவு புரிந்துணர்வுடன் முஸ்லிம்கள் இணைந்து செயல்பட்டனர். இன்னும் சொல்லப்போனால் சுயாட்சிக்கான போராட்டம் ஆரம்பமானபோது தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களோடு முஸ்லிம் இளைஞர்களும் தம்மை இணைத்துக் கொண்டனர்.

காலப்போக்கில் தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்களின் பக்கம் தங்களது துப்பாக்கிகளை திருப்பியபோதுதான் இரு சமூகத்திற்கிடையே இடைவெளி உருவானது. அந்த இடை வெளியை ஏற்படுத்தியது தமிழின போராட்ட ஆயுத குழுக்கள்தான். முஸ்லிம்களை "தமிழ் பேசும் சமூகம்' அல்லது "தமிழர்கள்' என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்று போராளி அமைப்புகளால் ஆயுத பாஷையில் முஸ்லிம்களுக்கு புரியவைத்து இடைவெளி ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்த் தாயகத்தில் முஸ்லிம்கள் வந்தேறிகள் என்ற சொல்லாக்கம் வரலாறு நெடுகிலும் தமிழ் ஆயுத்தாரிகளால் சொல்லப்பட்டது. இதன் அடுத்தடுத்த கட்டங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான இடைவெளியை அதிகப்படுத்தியது. வடகிழக்கில் முஸ்லிம்க்ள இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். ஒரே இரவில் 5 மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடியில் பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140 க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் , கொலை வெறியாட்டங்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று ஏற்பட்ட பாதிப்பு 30 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்பது துரதிஷ்டவசமாகும்.

இஸ்ரேலின் மொசாத் மற்றும் இந்தியாவின் "ரா' அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்ப் போராளிகள் முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக மாறிப்போயினர். இந்த இரு நாடுகளும் வட கிழக்கில் முஸ்லிம்கள் இருக்கும் வரை தமிழ்த் தாயகம் என்கிற இலட்சியத்திற்கு தடை என்பதை தமிழ்ப் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தன. இந்த இரு நாடுகளின் சுய நலன்களுக்காக முஸ்லிம்களை நோக்கி தமிழ் ஆயுததாரிகள் தங்களது துப்பாக்கிகளை திருப்பிய கசப்பான உண்மையை தமிழ் சமூகம் இன்றும் புரிந்ததாக தெரியவில்லை.

தமிழ் இனத்தின் நியாயமான சுயாட்சிக்கான போராட்டம் யுத்தத்தின் மூலம் நசுக்கப்பட்ட தற்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் தனித்துவத்தை, உரிமைகளை, தமிழினம் மறுத்து சிங்கள இனவாதத்தைப் போன்றே தமிழினவாதத்தை தமிழ்ப் போராளிகள் ஆயுத முனையில் முஸ்லிம்கள் மீது திணித்தமையை யாராலும் மறுக்கமுடியாது. இந்த
சூழ்நிலையை உருவாக்கியதில் தமிழ்ப் போராளிகளின் பங்களிப்பு மிக அதிகம்.
அந்தவகையில் தமிழ்ப் போராளி அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை, அங்கீகாரத்தை தமிழ்க் கட்சிகள் தர முன்வர வேண்டும்.

ஆனால் துரதிஷ்டவசமாக இன்று தமிழ் அரசியல்வாதிகள் சிலர் முஸ்லிம்களுக்கெதிரான அரசியல் இனவாத பிரசாரங்களை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்; நிலத்தைப் பறிக்கின்றனர்; வியாபாரத்தைக் கைப்பற்றுகின்றனர்; மதம் மாற்றுகின்றனர்; தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கின்றனர்; அரசியல் அதிகாரத்தை விட்டுத் தருகின்றார்கள் இல்லை; முஸ்லிம்களுக்குள் அடிப்படைவாதம் ஊடுருவி இருக்கின்றது என்ற பிரசாரங்களோடு தமது முஸ்லிம்களுக்கெதிரான இனவாத பிரசாரங்களை முடிக்கிவிட்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது.

இந்தியாவில் இருந்து வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் ஊடுருவியுள்ள இந்துத்துவா அமைப்பும் இதன் பின்னணியில் செயற்படுவதாக கூறப்படுகிறது. பௌத்த- இந்து உறவுப்பாலம் என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களுக்குள்ளேயே சமய முரண்பாடுகளை தோற்றுவிப்பதே இந்துத்துவா அமைப்பின் நோக்கம் என்று ஏலவே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. பௌத்த- இந்து என்ற அடிப்படையில் ஒற்றுமை ஒன்றைக் கட்டியெழுப்ப பௌத்த பிக்குமாரும் சில தமிழ் சைவக் குருக்களும் ஒன்றினைந்துள்ளனர். அதற்கு ஆதரவாக தமிழ்க் கிறிஸ்தவ குருமாரையும் இவர்கள் அழைத்துள்ளனர்.

தமிழ் மக்களுடன் தங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றும் போர்க்காலத்தில் சில தவறுகள் நடத்ததாகவும் ஆனாலும் அதனை மறந்து தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி பௌத்த- இந்துசமய உறவை வளர்க்க வேண்டுமென்றும் கூறி பௌத்த பிக்குமார் சிலர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு, அங்கு பௌத்த பிக்குமார் விகாரைகளைக் நிர்மாணித்து வருகின்றனர். புத்தர் சிலைகளை வைக்கின்றனர். தமிழர் பகுதிகளில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்ற்ங்கள் இடம்பெருகின்றன. இவற்றை எதிர்க்காத பௌத்த பிக்குமார், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்காக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நகைப்புக்கிடமானதாகும்.

மீண்டுமொரு தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கமாக திகழ்கிறது. அதன் முதல் நடவடிக்கையே இந்த பெளத்த- தமிழ் உறவு காதல் பிரகடனம் என்பது வெள்ளிடமலை.

வடகிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களின் சமூக உறவை திட்டமிட்ட ரீதியில் பிரிப்பதற்கு சில இனவாதிகள் அரசியல்ரீதியாக முயற்சி செய்கின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்த தேவைகளை அடைந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் – தமிழ் உறவு குறித்து அவ்வப்போது பலரும் சாதக பாதகமாக விவாதிப்பதுண்டு. இவ்வாறான விவாதங்களை எடுத்து நோக்கினால், இவ்வகை விவாதங்கள் அனைத்தும் அவ்வப்போது மேலேழும் அரசியல் போக்கில் நிலைகொண்டிருப்பதை காணலாம்.துரதிஷ்டவசமாக இலங்கையில் காணப்படும் அரசியல் கட்சிகள் அனேகமானவை இனச்சார்பு கட்சிகளாகவே காணப்படுகின்றன. இனங்களுக்கிடையிலான துவேசக் கருத்துக்கள் தேர்தல் காலங்களிலேயே அதிகம் பகிரப்படுகிறது. அதுவும் அரசியல் வாதிகளினாலேயே அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் சிறுபான்மை சமூக சிவில் அமைப்புக்கள், மத தலைவர்கள் அரசியல் இலாபங்களுக்கப்பால் பொதுவான இலக்குகளை வரையறுத்து இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது மிக முக்கியமானது.

No comments

Powered by Blogger.