புதிய கூட்டணி, நட்பு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்த சஜித்
கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்கின்றார்கள். அத்துடன் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப (அமைச்சரவை அந்தஸ்து அற்ற) அமைச்சரான அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
இதனைவிடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிலும் சரி, மத்திய செயற்குழுவிலும் சரி சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் முன்மொழியப்படவே இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். சஜித் பிரேமதாசவின் பெயர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு பேசப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்குவதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் கொண்டிருக்காத, எதிர்மறையான நிலைப்பாடுகளை வெளியிடும் சிலர் கட்சியினுள் உள்ளார்கள். அத்தகைய சிலராலே சஜித் பிரேமதாச மீது சேறுபூசம் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார், அனைவரின் ஆதரவையும் பெறுவார் என்பதை தெரிந்துகொண்டும் அவரைப் பெயரிடுவதில் தாமதங்கள் நிலவுகின்றன.
கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்பேச்சுக்கள் முன்னேற்றகரமாகவே இருக்கின்றன.
ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடப்படுவதோடு, சஜித் பிரேமதாசவுக்கும், கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டணிக்கான கைச்சாத்து இடம்பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக உள்ளது.
சஜித் பிரேமதாசவின் இணக்கப்பாட்டின்மையுடனும், மத்திய செயற்குழுவின் அனுமதியின்றியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான யாப்பு அமைக்கப்பட்டமையின் காரணத்தால் தான் அவர் பொதுச்செயலாளர் பதவியைக் கோரியிருந்தார்.
பொறுப்புக்கூறுவதிலிருந்து விலகிநிற்கும் தனியொரு நபருக்கு அதிகாரங்கள் வழங்குவது தவறானது என்ற ஜனநாயகச் சிந்தனையுடன் தான் அவ்வாறானதொரு நிபந்தனையை சஜித் விதித்திருந்தார்.
தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வினை பிற்போட்டுள்ளதோடு யப்பினையும் மறுசீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவும் புதிய கூட்டணியில் பங்கேற்கும் தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். ஆகவே அந்த நிபந்தனை தற்போது அவசியமில்லை.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுகின்றபோது, புதிய கூட்டணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நபர் ஒருவருக்கே பொதுச்செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment