கல்முனை பிரச்சினைக்கு, 2 தினங்களில் தீர்வு காணப்படும் - வஜிர அபேவர்த்தன
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இனவாத ரீதியில் அன்றி இலங்கை தேசியத்தை அடிப்டையாகக் கொண்டு இதற்கு இன்னும் ஓர் இரு தினங்களில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
முந்தைய ஜனாதிபதிகளின் காலத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இதற்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று -08- பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சுமூகமான ரீதியில் இலங்கை தேசியத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டிய இந்த பிரச்சினை இனவாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
கல்முனை வடக்கிற்கு உட்பட்டதாக 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உண்டு. இதே போன்று கல்முனை தெற்கிற்கு உட்பட்டதாக 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உண்டு. இதற்கு மேலதிகமாக 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளன. இவற்றை எந்த பகுதியுடன் இணைப்பதுதான் தற்பொழுது உள்ள பிரச்சினை ஆகும்.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணும் பொருட்டு நேற்று இரவு சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் தீர்வை எட்டமுடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ, பிரதமர் ஆலோசகர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment