118 இலங்கையர்களுக்கு சிவப்பு நோட்டிசு
குற்றப் புலனாய்வுப் பிரிவில் மட்டும் தற்போது 10 ஆயிரத்து 379 விடயங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் உள்ள 34 விசேட அறைகள் அல்லது கிளைகள் ஊடாக இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அந்நடவடிக்கைகளில் 600 வரையிலான சி.ஐ.டி.யினர் பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று (08) பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவுடன் அச்சு ஊடகங்களின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இதனை வெளியிட்டார்.
இந்த விசாரணைகளில் அதிகமான விசாரணைகள், சி.ஐ.டி.யின் நிதிக் குற்றம் தொடர்பிலான ஐந்து விசாரணை அறைகளால் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இலங்கையின் கோரிக்கைக்கு அமைய இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் 118 பேருக்கு தற்போது சிவப்பு அறிவித்தல் (ரெட் நோட்டிஸ்) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 78 பேருக்கு நீல அறிவித்தல் (புளூ நோட்டிஸ்) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கூறினார் (எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment