தேரர்களின் அரசியல் போட்டியில், சிக்கித் தவிக்கும் முஸ்லிம் சமூகம்
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை இலக்கு வைத்த அரசியல் மற்றும் இனவாத நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் கூட ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காகக் கொண்டே திட்டமிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அச் சம்பவத்தின் பின்னரான நகர்வுகள் அமைந்துள்ளன.
ஏப்ரல் தாக்குதலின் பின்னரான நாட்டு மக்களின் உணர்வலைகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி அதனை அடுத்து வரும் தேர்தல்களில் வாக்குகளாக சம்பாதித்துக் கொள்ளும் மொத்த வியாபாரம் ஒன்றே இப்போது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் மற்றும் இனவாத ஊடகங்கள் என மூன்று தரப்பினரும் இணைந்து இந்த மொத்த வியாபாரத்தை கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தினமும் அரசியல் தலைவர்கள் பலரும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற நிலையில் அதற்கு ஒத்தூதுவது போன்று பிக்குகள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வழக்கம்போல ஞானசார தேரரும் அத்துரலியே ரத்ன தேரரும் இனவாதக் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்ற நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். சர்வதேச ரீதியாக பிரபல்யம் வாய்ந்த பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கூட மகாநாயக்க தேரரின் கருத்தை கண்டிக்குமளவுக்கு இந்தக் கருத்து கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது.
இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் பொது பல சேனாவினால் நடாத்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய ஞானசார தேரரும் கடும் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் அங்கு வெளியிட்ட கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே ஒவ்வாதவையாகும்.
அதேபோன்று அதுரலியே ரத்ன தேரரும் பாராளுமன்றம் முதல் பத்திரிகையாளர் மாநாடு வரை இனவாதத்தைக் கக்கி வருகிறார். டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என குற்றப் புலனாய்வுப் பிரிவே ஆதாரங்களுடன் நீதிமன்றில் நிரூபித்திருக்கின்ற நிலையில் தேரர் மாத்திரம் தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து தினம் தினம் புதிய புதிய கட்டுக் கதைகளை அவிழ்த்து வருகிறார். நேற்றுக் கூட பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் பயங்கரவாதத் தாக்குதலை விடப் பயங்கரமானது எனதும் கருத்தை வெளியிட்டிருந்தார்.
உண்மையில் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சியிலேயே இந்தத் தேரர்கள் ஈடுபட்டிருப்பது புலனாகிறது. ஒட்டுமொத்த இலங்கைக்குமே அச்சுறுத்தலாக அமைந்துள்ள பயங்கரவாத சக்திகளை முஸ்லிம்களோடு கைகோர்த்து அழிப்பதற்குப் பதிலாக தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தத் தேரர்கள் பாடுபடுவது வரலாற்றில் மிகமோசமானதொரு நகர்வாகவே பதியப்படும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் மாகாண சபைத் தேர்தலும் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் ஏப்ரல் 21 தாக்குதலின் உணர்வலைகளை இனவாதத்தின் ஊடாக வாக்குகளாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவே தற்போதைய அரசியல் நாடகங்கள் அமைந்துள்ளன. அரசியல்வாதிகளின் இந்த நாடகத்தில் ஞானசார தேரரும் அதுரலியே ரத்ன தேரரும் பிரதான பாத்திரமேற்று நடிக்கின்றனர். ஆனால் இதில் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகமேயாகும்.
இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் உண்மையாகவே தேசத்தை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த இனவாத தேரர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட வேண்டும். கைகளுக்கு கட்டுப் போட வேண்டும். ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்தவர்களைக் கூட தமது கட்சி அரசியல் நலனுக்காக வெளியில் விட்டு வேடிக்கை பார்க்கின்ற அரசியல் தலைவர்கள் உள்ள நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனமே அன்றி வேறில்லை.
vidivelli
Post a Comment