Header Ads



"அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக, தங்களது பெற்றோரையும் விற்பனை செய்கின்ற சிந்தனை"

அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செய்யவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலங்களில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை திருத்தவே முயற்சி இடம்பெறுவதாக கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர், “குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முயற்சித்தனர்.

எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்காவை முன்நிறுத்தி மக்களை அச்சப்படுத்தி வருகின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் சமூகத்தில் ஒதுங்கியிருந்த சிலர் இப்போது நாடாளுமன்றத்திற்குள் வர எத்தணிக்கின்றனர்.

இதற்காக பல இடங்களில் தற்போது நிதி திரட்டுவதோடு வெளிநாடுகளிலும் நிதி திரட்டி வருகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை வைத்து இன்று பலரும் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.

அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தமானது சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலமான 1994ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். எமது அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை என்பதோடு மாற்றியமைக்கவும் இல்லை.

அதுபற்றி கலந்துரையாடலையே நடத்துகின்றது. விசேடமாக இங்கே அமெரிக்கப் பிரஜை குற்றம் செய்தால் அதனை அமெரிக்காவில் விசாரிப்பது குறித்த திருத்தத்திற்கு நாங்கள் உடன்படவில்லை.

அமெரிக்காவின் சோபா ஒப்பந்தம் குறித்து அதீத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் எமக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் தொடர்பே இல்லை.

எக்ஸா ஒப்பந்தமானது 2007ம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான அமெரிக்கப் பிரஜை கோட்டாபய ராஜபக்சவும் - அப்போதைய அமெரிக்கத் தூதுவரான ரொபர்ட் ஓ பிளேக்கும் இணைந்து கைச்சாத்திட்ட ஒன்று.

அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் அன்று இலங்கை தொடர்பான ஒப்பந்தத்தை செய்தபோது எவரும் வாய்த்திறக்கவில்லை. இப்போது திருத்தத்தை மேற்கொள்ளவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

இன்று நடிகர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என சிலர் இந்த ஒப்பந்தங்கள் குறித்து தவறாக சித்தரிக்கின்றனர். அடுத்ததாக மில்லேனியம் செலேஞ்ஜ் கோர்பரேஷன் என்கிற ஒப்பந்தத்தின் ஊடாக 480 மில்லியன் டொலர் நன்கொடை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இந்த அனைத்து விடயத்தையும் வைத்து நாட்டை விற்கின்ற குழுவாக எம்மை இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக தங்களது பெற்றோரையும் விற்பனை செய்கின்ற சிந்தனை அவர்களுக்கு இருப்பதாலேயே இவ்வாறு எமக்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.