Header Ads



மருத்துவர் ஷாபி மீது பொய் குற்றச்சாட்டு - பொலிஸ் உயர் அதிகாரிகள் பற்றி விசாரணை

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரை கைது செய்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.

நான்காயிரம் சிங்கள தாய்மாருக்கு மலட்டு தன்மையை ஏற்படுத்தியதாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர் எனவும், மோசடியான முறையில் சொத்துக்களை சேர்த்தார் எனவும் மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக மருத்துவர் சிங்கள தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என்ற கதை ஊடாக நாட்டில் இனவாத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த அதிகாரிகள் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பன நேற்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன் இறுதியில் மருத்துவர் ஷாபியை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.

எவ்விதமான சாட்சியங்களோ, அடிப்படைகளோ இன்றி, வேறு தரப்பினருடன் இணைந்து தவறான நோக்கத்தில், மருத்துவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அதனூடாக நாட்டில் இனவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், குருணாகல் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த திஸாநாயக்க மற்றும் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

இவர்கள் அடுத்த வாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

Powered by Blogger.