இலங்கையில் வன்முறையைத் தூண்டுகின்ற பௌத்தர்களுக்கு தண்டனை அளிக்கப்படுவதில்லை -ஐ.நா.
சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான மக்களின் விருப்பத்தை சிறிலங்காவின் அரசியல் தலைவர்களை நிராகரிக்கக் கூடாது என, சுதந்திரமான ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் வூல் தெரிவித்துள்ளார்.
ஒன்பது நாட்கள் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்த அவர் இன்று தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் உள்ள ஐ.நா செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.
“சிறிலங்காவின் அரசியலமைப்பு அமைதியாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகிய உரிமைகளைப் பாதுகாக்கிறது.
இருப்பினும், தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகள், ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களின் பயன்பாடு, இந்த உரிமைகளை பாதிப்பதாக உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டமை, நில உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் வளங்களை அணுகல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக, ஒன்றிணைக்கும் நபர்களுக்கு எதிராக, இந்த சட்டங்கள் பெரும்பாலும் பாரபட்சமான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்று எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது,
ஏப்ரல் 21தாக்குதலுக்குப் பின்னர்- நாட்டில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வெறுக்கத்தக்க பேச்சை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போதும், அந்தச் சட்டம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
பாரபட்சமாக செயற்படும், வன்முறையைத் தூண்டுகின்ற பெரும்பான்மையின சமூகத்தினருக்கு தண்டனை அளிக்கப்படுவதில்லை.
வெறுப்பின் நெருப்புகளை தூண்டுவதற்கும் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் நிலைமை மோசமடைகிறது.
இது சமூகத்தில் மரியாதைக்குரிய மற்றும் அமைதியான உரையாடலின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்,
சிறந்த நடைமுறைகளை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் உதவி கோரினால், உதவுவதற்கு எனது செயலகம் தயாராக உள்ளது.
சிவில் சமூக ஆர்வலர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை, பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கோணத்தில், காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் பார்ப்பதை கவனிக்க முடிந்தது.
போருக்குப் பிந்திய சூழலில், பல நாடுகளின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உள்ள பொதுவான பிரச்சினை இதுவாகும்.
எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்தன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர் தனது அறிக்கையை 2020 ஜூன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
சூப்பர் அறிக்கை, நன்ரி உங்களுக்கு
ReplyDeleteதுறவறம் பூண்டவர்களுக்கு மத ஸ்தலங்கள் எல்லாமே ஒன்றாகத் தெரியும். உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றெல்லாம் சண்டையிருக்காது. இங்கே வேறு என்னமோ நடக்குது அறிந்து கொள்ளுங்கள் பெரியவரே.
ReplyDelete