நியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்கள் ஹஜ் செய்ய ஏற்பாடு
கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற இரட்டை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சவூதி அரேபியா ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அந் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தித் தாபனம் கடந்த புதன்கிழமை தெரிவித்தது.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் வெளியிட்டுள்ள நிறைவேற்றுக் கட்டளைக்கு அமைவாக அவர்கள் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற முடியும் என சவூதி ஊடக முகவரகம் தெரிவித்துள்ளது.
துன்பத்தால் வருந்திக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான சவூதி அரேபியாவின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடக முகவரகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 மார்ச் மாதம் 15 ஆம் திகதி பிரன்டன் டரன்ட் என்ற பயங்கரவாதி கிரிஸ்ட்சேர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது மேற்கொண்ட தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதோடு 49 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli
Post a Comment