சஜித்தும், கோத்தபாயவும் போட்டியிடுவதில் நிச்சயமற்ற நிலைமை
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படும் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட உள்ளதாக பேசப்படும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
சஜித் பிரேமதாச தான் போட்டியிடுவதாக உறுதியாக தனது ஆதரவாளர்களிடம் இதுவரை கூறவில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற முடியாது என்ற காரணமும் இந்த நிச்சயமற்ற நிலைமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் யோசனை ஒன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் தலைமையில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
சஜித் பிரேமதாச போட்டியிடுவது நிச்சயமில்லை என்ற காரணத்தினால், யோசனை முன்வைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பான கடிதத்தை அமெரிக்கா இதுவரை அனுப்பி வைக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் இலங்கையில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பது, அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளரை விரைவாக அறிவிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள், மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோத்தபாயவின் நிச்சயமற்ற நிலைமை காரணமாக வேட்பாளரை அறிவிக்கும் திகதியும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் அவரது அணியின் முக்கியஸ்தர் ஒருவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை சஜித் பிரேமதாச மரண தண்டனையை ஆதரித்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மரண தண்டனையை எதிர்க்கின்றனர்.
அத்துடன் சஜித், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளார். இவையும் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அணி வலுவாக காரணமாக அமைந்துள்ளதாக பேசப்படுகிறது எனவும் ராவய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
Post a Comment