ஹிஸ்புல்லாவின் முயற்சியில் உருவான, பல்கலைக்கழகத்தை சுவீகரிக்க ரணில் எதிர்ப்பு
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் அதனை தனியார் பல்கலைக்கழகமாகவே இயங்கவைத்து மூவின மாணவர்களையும் கல்வி கற்பதற்கு அனுமதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் பாராளுமன்ற மேற்பார்வை குழு சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பேராசிரியர் ஆசு மாரசிங்க தலைமையிலான பாராளுமன்ற கல்விசார் மேற்பார்வைக்குழு மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் நேரடியாக களவிஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் பரிந்துரைகள் உள்ளடக்கிய அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தது.
இந்த அறிக்கையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் சுவீகரித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த பல்கலைக்கழகமானது வெளிநாட்டு முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது இதனை அரசாங்கம் சுவீகரிக்குமானால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி வழங்கப்படும். இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதகமான நிலைமை ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து கருத்த தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிநாட்டு முதலீடுகள் என்றால் அது குறித்து சிந்திக்க முடியும் ஆனால் இந்த பல்கலைக்கழகத்திற்கான முதலீடு என்பது அரசியல் ரீதியிலான முதலீடாகவே காணப்படுகின்றது. எனவே இதனைக் கையகப்படுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படவேண்டும். இதன் மூலமாகவே அனைத்து இன மக்களையும் திருப்திபடுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனாலும் இந்தப் பல்கலைக்கழகத்தை தனியார் கல்வி நிறுவனமாகவே வைத்துக்கொண்டு அனைத்து இன மாணவர்களையும் அங்கு பயிலும் வகையிலும் நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஆனாலும் தனியார் பல்கலைக்கழகமாக வைத்துக்கொண்டு எவ்வாறு அனைத்து மாணவர்களையும் இங்கு கல்வி கற்பிக்க முடியும் என்று அமைச்சர்கள் சிலர் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இவ்விடயம் தொடர்பிலும் இறுதித் தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
Post a Comment