Header Ads



கலைஞன் ஐயா ஜெயபாலனுக்கு, தம்பி ஹரீஸின் கடிதம்

நான் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிர்ச்சி தந்ததாக கூறியுள்ளீர்கள். எங்கள் சமூகத்தின் தலைவர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத அலையில் எங்கள் சமூகம் மூழ்கி இறந்து விடும் எனும் அச்சத்தின் உச்சத்தால் கூட்டு இராஜினாமா எனும் முடிவை நான் வழிமொழிய எல்லோரும் ஆமோதித்து அந்த முடிவை இறுதிமுடிவாக எட்டினோம். அத்தகைய நிலைபாடு அன்று அவசரமாக எடுக்காமல் விட்டிருந்தால் இன்று எமது நாடு மீண்டும் உதிரம் எழுதிய காவியமாக மாறியிருக்கும்.

எனது முடிவால் எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் கறையாகி விடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள் என கேட்டுள்ளீர்கள். பாலகனாக இருந்த நாள் முதல் இன்றுவரை ஒன்றாக பிணைந்து ஒரே வீதியில் உறவாடி தமிழ் உறவுகளை மதித்து பழகியவன் நான். எனது அமைச்சரவை நிதி ஒதுக்கீடு முதல் என் பிரதேச அரசியல் உரிமை வரை சகோதர தமிழ் மக்களின் பங்குகளை சரியாக பிரித்து, புரிந்துணர்வு கலந்து வழங்கிய ஏடுகள் இன்றும் ஆதாரமாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அண்ணன் காத்தமுத்துவை பிரதி மேயராக்கிய சம்பவம் முதல் இந்த வருடம் செய்து முடிக்கப்பட்ட நவீன மின்விளக்கு அலங்காரம் வரை அதன் தொடர்ச்சியாகவே எஞ்சியுள்ளது.


நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள். என்கிறீர்கள் அதனை நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் எனது சமூகத்தை அடகுவைத்து என்னை அமைச்சராக அலங்கரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என நினைக்கிறேன். அமைச்சர் பதவி எடுப்பதை விட போராட்ட  களத்தில் திடமாக போராடி உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறேன். 

அமைச்சை விட பாதிக்கப்பட்டு அநாதரவாக இருக்கும் என் சமூகம் கனதியானது. எனது சக்தியினால் முடிந்த பல சேவைகளை தொடர்ந்தும் நான் செய்துகொண்டே இருக்கிறேன்.எனது பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் ஒளிமயமாக்க சிறிய தடைகள் பெரிதாகி நிற்கிறதாக உணர்ந்தாலும் அது விரைவில் நீங்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும்  இணைந்து முன்செல்லுங்கள். என்கிறீர்கள். எனது இந்த விடுதலை இயக்கம் முஸ்லிங்களின் உரிமைகளை போராடி வெல்ல உருவானது. சறுக்கல்கள் இருக்கிறது என்பதனால் அதுவே உண்மையாகிடாது. காலம் கனிந்து விடியல் உதிக்கும். ஆறுதலினால் சாதிக்க முடியும் என்பது ஜாம்பவான்கள் நிரூபித்து சென்ற பாதை. அதில் என் பாதங்களை ஊன்றி பதித்துள்ளேன். தலைவர் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் நான் எப்போதும் நேராகவே பயணிக்கிறேன். எனது ஆலோசனைகள், கருத்துக்களை பிரதித்தலைவராக எப்போதும் முன்வைப்பதில் நான் பின் நிற்பதில்லை. 

பெரும் தலைவர் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் எங்களை சரியாக புரிந்து புடம் போட்டுள்ளார் என நம்புகிறேன்.  கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து ஏனைய முஸ்லிம் கட்சிகளுடனும் பேசி கட்சியை  முஸ்லிம் கூட்டமைப்பாக மேம்படுத்த உழையுங்கள் எனும் உங்கள் ஆலோசனையே என் மக்களின் கனவும், தாகமுமாக இருக்கிறது. அது மெய்ப்படும்  நாள் அண்மித்து வருவதாக உணர்கிறேன். கடந்த கால சம்பவங்களின் பின்னர் முஸ்லிம்  தலைமைகள் ஒற்றுமை எனும் குடையின் கீழ் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் அது நீடித்து உங்கள் ஆசை மட்டுமல்ல எமது நாட்டு முஸ்லிங்களின் கனவும் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கையாக மலர்ந்துள்ளது. அதுவே இப்போதைய தேவையாகவும் உள்ளது.
.
கல்முனைத் தாயின் மூன்று பிள்ளைகளான கல்முனை,  சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் கல்முனை  வடக்கு தமிழர்களுடனும் சமரசம் செய்து கொள்ளுங்கள் என்கிறீர்கள் நான்  அவர்களுடன் தோழமையுடன் பழகும் ஒருவன். தொப்புள்கொடி உறவுகளுடன் சண்டையிட்டு ஆனபலன் எதுவுமில்லை. சிறந்த வர்த்தகர்களின்  ஒருவராக இருந்த என் தந்தை என்னை சட்டத்தரணியாக அழகு பார்த்துள்ளார். அரசியலுக்கு நான் உழைக்க வரவில்லை.  என்னுடைய கல்முனை மக்களுக்கும், இலங்கை முஸ்லிங்களுக்கும் பாதிக்கப்படும் தமிழ் மற்றும் மலையக மக்களுடைய
உரிமைக்குரலாகவே நான் என்னுடைய அரசியல் பயணத்தை வழிநடத்தி செல்கிறேன். 

முஸ்லிம்களின் கனவான அகண்ட தென்கிழக்கு மாகாணத்துக்கான போராட்டத்தை முன்னெடுங்கள். நாங்களும் தமிழர்களை திரட்டி துணை வருகிறோம். எனும் உங்கள் செய்தி இனிமையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. இப்படியான செய்திகளை உங்களை போன்ற புத்திஜீவிகள் முன்வந்து முன்மொழிவதில் சந்தோசமாக இருந்தாலும் சில அரசியல் அனாதைகளின் நிலைப்பாடுகள் கவலை தருகிறது. 

இன்ஸா அல்லாஹ் அந்த பயணத்தில் எப்போதும் உறுதியுடன் பயணிப்போம் உங்களை போன்றவர்களின் உதவியுடன்.

நன்றி

உங்கள் தம்பி 

சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் (பா.உ.)

பிரதி தலைவர்,
ஸ்ரீ.ல.மு.க.
19.07.2019

6 comments:

  1. திரு.ஜெயபாலன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்த நடு நிலை போக்கு இப்போது அவரிடம் இல்லை.எப்போ கல்முனை வடக்குக்காக உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் பட்டதோ அப்போதே ஜெயபாலன் அவர்களும் சற்று இனம் எனும் சுற்று வட்டப் பாதையில் இனைந்து விட்டார்.ஆனால் கல்முனை வடக்கு பிரிய வேண்டும் என மிகப் பெரும் ஆவலுடன் உள்ள ஜெயபாலன் அவர்கள் எவ்வாறு அகண்ட தென்கிழக்கு மாகான போராட்டதை ஆதரிக்க போகிறார்.எல்லாமே ஒரு பேச்சுக்கு பேசுகிரார்.ஜெயபாலன் அவர்களுக்கு முடியுமா வடக்கும்,கிழக்கும் இனைய கூடாது எனச் சொல்ல.அவரால் முடியாது அவ்வாறு சொல்ல,ஏனெனில் அவருக்கும் அதுதான் மிகப் பெரும் கனவு.எனவே இந்த லட்சனத்தில் ஜெயபாலன் அவர்களின் பேச்செல்லாம் ஒரு கானல் நீர் போல பேச்சுக்களும் தன்னை ஒரு நடு நிலைவாதியாய் காட்ட முனையும் ஒரு நாடகம்.அய்யா ஜெயபாலன் அவர்களே அகண்ட தென் கிழக்கை கோரினால் அப்போ நீங்கள் சொல்லுவீர்கல் அதற்குள்லும் தமிழ் மக்களும் தமிழ் ஊர்களும் உள்ளன என்பீர்கல்.

    ReplyDelete
  2. இந்தக்கடிதம் குறிப்பாக ஜெயபாலன் ஐயாவுக்கு தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தாலும் இது தம்பி ஹரீஸ் அவர்களின் உள்வேட்கையை (Interior Thought) பறைசாற்றும் பட்டோலையாக (Golden Charter) அனைத்து முஸ்லிம் தமிழ் உறவுகளுக்கும் விஷேடமாக அர்ப்பணித்து எழுதப்பட்டுள்ள செய்தியாகும். கிழக்கின் முஸ்லிம் தலைவராக முஸ்லிம்கள் ஹரீஸ் அவர்களை அடையாளப்படுத்துதல் மிக முக்கியமாகும். இதற்கான முயற்சிகள் அனைத்தையும் ஆற்ற வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவர்மீதும் சாட்டப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கட்டும்.

    ReplyDelete
  3. இப்போதாவது நமது தமிழ் உறவுகள் புரிவர்களா காவிகளின் கபட நாடகத்தை ! இனியாவது நாம் தமிழர் என்று இணைத்து சொல்வோம் & செயட்படுவோம் !! நன்றி ஐயா ஜெயபாலன் & ஹரீஸ் !

    ReplyDelete
  4. கௌரவ ஹரீஸ் அவர்களே நீங்கள் பாராளுமன்ற உறுப்பினரானபோது முதலாவது சந்தோசப்படடவர்களில் நானுமொருத்தன், நீங்கள் எதிர்காலத்தில் தடம்புரண்டுவிடக்கூடாது என்பதில்மாத்திரமல்லாது, SLMC கல்முனைப்பிரச்சினையில் உங்களது அணுகுமுறையால் முழு இலங்கையில் வாழும் முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினையிலிருந்து தடம்புரண்டு முஸ்லிம்கள் யாருமத்தவர்களாக அரசியல் அனாதைகளாக வந்துவிடக்கூடாதுஎன்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும், {மாறாக இந்தப்பதவியால் என்னசெய்ய முடியும் இதனால் வேலைப்பளு அதிகம், எமது சமூகத்திக்கோ இந்நாடிட்கோ எதுவும் செய்யமுடியாதென்றால் அதுவேறுவிடயம்} அதேநேரம் SLMC க்குள் பிரிவினையோ அல்லது தனிநபரின் செல்வாக்குச்செலுத்தலோ அதிகரிக்கின்றபோது அக்கட்ச்சி மீண்டும்பிளபுபடும், எப்போது SLMC யும் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவமும் இந்நாட்டுக்குத் தேவைப்பட்டதென்பது எல்லோருக்கும் தெரியும், அதாவுல்லாவின் கருத்தினையோ, றிஷாத்தின் கருத்தினாயோ, ஹிஸ்புல்லாவின் கருத்தினாயோ ஏற்றுக்கொள்வதட்கு இந்நாடு தயாராக இருக்கவில்லை, தலைமைத்துவமென்பது அதுதான், நாங்கள் மக்களின் பிரதிநிதியாக அவர்கள் சொல்வதை காவுவர்களாக (representing) இருப்பது உங்களின் ஆரம்ப பாராளுமன்றக் காலங்களுக்குப் பொருந்தலாம், இப்போது இம்மக்களை வழிநடத்துபவர்களாக (leading) இருக்கவேண்டும், உணர்ச்சிவயப்பட்டு தீர்மானமெடுக்கும் காலம் மலையேறிவிட்டது, இது சிந்தித்துசெயல்படும்காலம்; இறுதியாக நன் சொல்லவிரும்புவது நீங்கள் உங்கள்அரசியலை மாத்திரம் சிந்தித்தால் இறைவன் உங்களுக்கு அதனாலதான் அழிவினைத்தருவான், மாறாக சமூகத்துக்காக இறைவனைப்பயந்து உங்கள் நடவடிக்கையினை தீர்மானித்தால் இறைவன் உங்களைப்பாதுகாப்பான், எதனையும் ஒற்றுமையூடாகச்செய்வதுதான் ஒரு சமூகத்தின் பலமாகும்

    ReplyDelete
  5. மிகவும் நன்றி இளம் தலைவா. என் விரிவான பதில் தொடர்கிறது

    ReplyDelete
  6. Rizard அவர்களே. திரு செல்வநாயகம் காலத்தில் திரு.காரியப்பர் செல்வநாயகத்துடன் நின்றிருந்தால் கிழக்கில் இன்று முஸ்லிம்களின் 1500 சதுர கிலோமீட்டர் காணிகள் பாதுகாக்கபட்டிருக்கும். செலவநாயகம் தனித்து வடகிழக்கு தமிழரசுக் கட்ச்சிக்காரர் இணைத்து போராடியிருக்காவிட்டால் இன்றுள்ள கிழக்கும் மிஞ்சி இருக்காது. மிஞ்சியிருக்காது. கிழக்கு தனித்து நிலங்களை பாதுகாக்க முடியும் என நான் நம்பவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் இருந்தபோதும் வடகிழக்கு இணைப்பை பற்றி முஸ்லிம் அலகுகளின் சுயநிர்ணய உரிமையை நான் வலியுறுத்துகிறேன். மாகானசபையை உருவாக்கிய வெளிநாடுகள் தலையீடு மீண்டும் இடம்பெற்றாலும்கூட நான் முஸ்லிம் அலகுகளின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுப்பேன். எங்களைப் போன்றவர்களது அழுத்தத்தால் கிழக்கு தமிழர்கள் யாரும் முஸ்லிம் அலகுகள் வடக்குடன் இணையவேண்டுமென கோருவதில்லை. வடக்குடன் இணையாமல் சிங்கள நிலபறிப்பில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை கிழக்கு தமிழர்கள் உறுதியாக உணர்திருக்கிறார்கள். அது அவர்களது உரிமை. முஸ்லிம்களின் உரிமைக்கும் தமிழர்கள் உரிமைக்கும் எப்பவும் நான் குரல்கொடுத்து வருகிறேன். அந்த நிலைபாடு வாழும்வரை தொடரும்.

    ReplyDelete

Powered by Blogger.