உங்கள் அனைவருக்கும் எதிர்காலத்திலே, சிறந்த ஒரு தலைமைத்துவத்தினை வழங்குவேன்
இலங்கையில் காணப்படக்கூடிய ஒவ்வொருவருடைய பிரச்சினையையும், என்னுடைய பிரச்சினையை போல் எடுத்துக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் எதிர்காலத்திலே சிறந்த ஒரு தலைமைத்துவத்தினையும், சிறந்ததொரு வழிநடத்தலையும் வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் மற்றும் ஆதவன் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அனைவரும் பேசுகின்றனர் ஐக்கிய இலங்கை, ஒன்றிணைந்த இலங்கை, தேசியப் பாதுகாப்பு என்று பேசுகின்றனர். எனவே ஐக்கிய இலங்கை, ஒன்றிணைந்த இலங்கை, அனைவரும் சமமாக இருக்கவேண்டும், நாங்கள் பிற நாடுகளுக்கு சவால் விடவேண்டும் என்று வெறும் பேச்சில் இருந்தால் மாத்திரம் காணாது.
இப்படியாக ஐக்கிய இலங்கையை நோக்கி நாங்கள் நகரவேண்டுமானால் எங்களுக்குள் நாங்கள் சில விடயங்களைக் களையவேண்டும்.
எங்களுக்குள்ளாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒற்றுமையை நோக்கி நாம் செல்லவேண்டும். சகோதரத்துவத்தை நோக்கிச் செல்லவேண்டும். எங்களுக்குள்ளாக மதங்கள், ஜாதிகள் போன்றவற்றிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
நாங்கள் அனைவரும் இலங்கையினுடைய பிரஜைகள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படவேண்டும். ஒருசிலர் நினைக்கின்றனர் முதலாம் கட்டமாக எம்மை நேசிப்பதில்லை இந்த அரசாங்கம், எங்களை இரண்டாங்கட்டமாக நேசிக்கின்றனர் என்று எண்ணுகின்றனர்.
அப்படி எண்ணுவார்களானால் அது தவறாகும். அப்படிச் சிலர் நினைக்கின்றனர். அப்படியான எண்ணங்களைச் சிலர் ஊட்டுகின்றனர். ஆனால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
ஒருசிலர் ஒன்றிணைந்த இலங்கையைப் பற்றிப் பேசுகின்றனர், தேசியப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் அங்கே இனவாதங்களை, மொழிவாதங்களை, ஜாதிவாதங்களை இங்கே தூண்டுகின்றனர்.
இலங்கையில் வாழக்கூடிய அனைவரும் மனிதர்கள், அதேபோல இலங்கையர்கள் எனவே எங்கள் அனைவர் மத்தியிலும் ஒரு மனப்பான்மை, ஒற்றுமை இருக்குமாவிருந்தால் ஐக்கிய இலங்கை தானாக உருவாகும். தேசியப் பாதுகாப்பு தானாக உருவாகும்.
மேலும் இலங்கையில் காணப்படக்கூடிய ஒவ்வொருவருடைய பிரச்சினையையும் நான் என்னுடைய பிரச்சினையைப்போல் எடுத்துக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் எதிர்காலத்திலே சிறந்த வொரு தலைமைத்துவத்தினை, சிறந்ததொரு வழிநடத்தும் தன்மையினை தருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment