சவால்களை எதிர்கொள்வதில், சிக்கித் திணறும் முஸ்லிம் சமூகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் சமூகத்திற்குள் ஒளித்துக் கொண்டிருந்த தீவிரவாதமிக்க சிந்தனைக்கு ஆட்பட்ட சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பதை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அறிந்துவைத்துள்ள விடயம். இத்தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சவால்கள், நெருக்கடிகள் உட்பட பல நகர்வுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் அமைந்திருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்நாட்டில் இரண்டாவது சிறுபான்மையினமாக வாழும் முஸ்லிம் சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுப்பதில் திக்கித் திணறி நிற்கின்றது. இப்பின்னணியில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, அரசியல் பலம், கலாசாரம், சமய பண்பாட்டு அம்சங்கள், சமூக நிலைப்பாடுகள் என்பவற்றை முன்னிறுத்தி தலைமைத்துவங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு சமூகம் வந்துள்ளது.
இந்நாட்டில் பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களை வாழ முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பகிரங்கமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சமூகத்தின் வாழ்வொழுங்கு, மார்க்க அநுஷ்டானங்கள், இருப்பு, உடை, கலாசாரம், பண்பாடுகள், கல்வி, ஒழுக்க விழுமியங்கள் என்று சகல விடயங்கள் தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் வர்தத்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இப்பகிஷ்கரிப்பு பல இடங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சந்தைகளில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதை தடுத்து நிறுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால், முஸ்லிம்களின் வர்த்தகங்கள் நாளுக்கு நாள் சரிவுகளைக் கண்டு வருகின்றன.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புரிந்துகொள்ளும் நன்நோக்கில் வழங்கப்பட்ட புனித அல்குர்ஆனை முன்னிறுத்தி சமூகத்தையும் மார்க்கத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்கு கடும்போக்கு சக்திகள் முற்பட்டு வருகின்றன. இதில், அல்குர்ஆன் அருளப்பட்ட காலப்பகுதியையும் பின்னணியையும் தெளிவுபடுத்தாமல் அல்குர்ஆனை நேரடியாக புரிதலுக்கு வழங்கியதன் அவசரத்தன்மை மற்றும் நேர்மைத்தன்மை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சமூகத் தலைமைகளை பலப்படுத்துவதும் அதனூடாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம் என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம் சமூகத்திற்குள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு அரசியல் தலைமைகளும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஆற்றிவரும் பங்களிப்புக்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இருப்பினும், இத்தலைமைகளின்பால் சமூகத்திற்குள் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அன்று முதல் இரு தலைமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதில் ஒன்று அரசியல் தலைமைகள் மற்றையது மார்க்க தலைமையாகும்.
முஸ்லிம் சமூகம் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளில் சமூகத்தின் பாதுகாப்புக் கவசமாக அரசியல் பலம் காணப்படுகின்றது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே முஸ்லிம் சமூகம் அரசியல் பிரதிநிதிகளை தமது தலைமைகளாக ஏற்றுக் கொண்டு பின்பற்றி வந்துள்ளன. இன்றும், இத்தலைமைத்துவங்களின் மீது சமூகம் எதுவித குறைகளுமின்றி நம்பிக்கை வைத்து செயற்பட்டு வருகின்றது. இதற்கு, சமாந்திரமாக இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் சமூகம், சமய தலைமைத்துவங்கள் என்ற அடிப்படையில் உலமாக்களை தலைமைகளாக அங்கீகரித்து வந்துள்ளது. மார்க்க ரீதியான தலைமைத்துவ வகிபாகத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றி வருகின்றது.
சமூகத்தின் ஒற்றுமை தலைமைத்துவத்தின் ஆளுமைகள், தலைமைத்துவத்தின் ஆற்றல்கள் மற்றும் தனிமனிதர்களின் தலைமைத்துவம் மீதான கட்டுப்பாடு என்பவற்றில் தங்கியுள்ளது. எனவே சமூக ஒற்றுமையில் தலைமைகளுக்கும் சமூகத்தில் வாழும் தனிமனிதர்களுக்கும் பங்குண்டு.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் ஆரம்ப காலங்களில் தேசிய கட்சிகளை சார்ந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் அரசியலாக இருந்து வந்தது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம். எம்.எச்.எம். அஷ்ரப் முன்னெடுத்த அரசியல் விழிப்புணர்ச்சியின் காரணமாக குறிப்பாக வட கிழக்கில் முஸ்லிம்கள் தனித்துவ அரசியலில் நாட்டம் கொண்டனர். இத்தனித்துவ அரசியல் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தியதுடன் நின்று விடாது சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
முஸ்லிம்களின் அரசியல் போக்கு தற்போது தனித்துவ அரசியல் மற்றும் தேசிய கட்சிகள்சார் அரசியலாகக் காணப்படுன்றது. இப்பின்னணியில், இன்று இனவாத பொறிக்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் மீது பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. இதுகாலம் வரை, கட்சி ரீதியான அரசியலில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள் தற்போது கட்சிகளுக்கு அப்பால் நின்று சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள் பற்றி சிந்தித்து வருகின்றனர்.
இச்சிந்தனையின் வெளிப்பாடு அரசியல் தலைமைகளையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றுபட்டு அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தமை என்பதில் கருத்து முரண்பாடுகளில்லை. முஸ்லிம் சமூகம் கடும்போக்கு சக்திகளால் அடைந்துவரும் நெருக்கடிகள் முடிவடையும் வரை தீவிர கட்சி அரசியலில் பெரிதும் நாட்டம் கொள்வர்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அரசியல் தலைமைகள் சமூகத்தின் துயரைத் துடைத்து இனவாதப் பொறியிலிருந்து சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு முழு முஸ்லிம் சமூகத்திடமும் வலுவடைந்துள்ளது. முஸ்லிம் சமூகமானது பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்பதால் மட்டும் மகிழ்ச்சியடையப் போவதில்லை.
முஸ்லிம்களை சந்தேகத்துடன் பிறசமூகங்கள் பார்க்கும் நிலை மாற்றமடைய வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இனவாத, வெறுப்பு பிரசாரங்கள் தொடர இடமளிக்கக்கூடாது. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாடுபட வேண்டும் என்பதில்தான் அக்கறை கொண்டுள்ளது. இப்பொறுப்பை அரசியல் தலைமைகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதன் மூலம் அல்லது ஏற்காமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். இந்நெருக்கடி நிலைமை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க நிலையாகும்.
முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தும் மற்றுமொரு தலைமைத்துவமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இருந்து வருகின்றது. இச்சபை முழுக்க முழுக்க உலமாக்களைக் கொண்ட சபையாகும். கொள்கை ரீதியாகவும் இயக்க ரீதியிலும் பிளவுபட்ட முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சபையாக இது இருந்து வருவதில் மகிழ்ச்சிக்குரியதாகும்.
உலமா சபையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக சமூகத்திற்குள் விமர்சனங்கள் ஏராளம். இதற்கு மத்தியில், உலமா சபை தற்போது பகிரங்க தளங்களில் கடும் விமர்சனத்திற்குட்படத் தொடங்கியுள்ளது.
இன்று கடும்போக்காளர்களால் இலக்கு வைக்கப்படும் இஸ்லாமிய நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக உலமா சபை காணப்படுகின்றது. இவ்விமர்சனங்களால் சில வேளைகளில் பெரும்பான்மை சமூகத்திற்குள் உலமா சபை மீதான பிழையான பார்வை வலுவடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். பெரும்பான்மை சமூகம் பொதுத்தளத்தில் உலமா சபையை புறக்கணிக்கும் நிலைகூட ஏற்படலாம். அப்படியொரு நிலைமை ஏற்படுவது அபாயகரமானதாகும். எனவே, இப்பகிரங்க விமர்சனங்களின் பரிணாமம் சமூகத்திற்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தலையாய கடமை உலமா சபையின் மீது சுமத்தப்பட்டுள்ளது. \
இந்நாட்டில் இஸ்லாம் தொடர்பாகவும் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு தொடர்பாகவும் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தெளிவுகளை வழங்கும் ஆற்றலை உலமா சபை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பிறைப் பிரச்சினைகள் போல் இன்றைய நெருக்கடிகளைக் கருதிவிட முடியாது.
இன்று, முஸ்லிம் தனியார் சட்டம், மக்தப், மத்ரஸாக்கள், காதி நீதிமன்றம் முதலானவை தொடர்பாக பிழையான அர்த்தங்கள் கற்பிக்கப்படுவதுடன் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கான தெளிவுகளை முன்வைப்பது அவசியம். கடந்த காலங்களில் ஏற்பட்ட ஹலால் விவகாரம் மற்றும் அதுசார் விளைவுகள் பற்றி மீள் சிந்தனைக்குட்படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.
எதிர்வரும் வருடங்கள் நிச்சயம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு சவால்மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இச்சவால்களை எதிர்கொள்வதற்குரிய பொறி முறைகளை முன்னெடுக்கத்தக்கதாக துறைசார் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளத்தக்க கட்டமைப்பு மாற்றங்களை கொண்டதாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அரசியல் தலைமைகளும் மார்க்கத் தலைமைகளும் சிந்தித்து சமூகத்தின் தலைமைத்துவத்தை முன்னெடுத்து நல்லிணக்கத்துடனான ஐக்கியத்தை கட்டியெழுப்ப உழைப்பது அவசியம். vidivelli
Post a Comment