ஐ.தே.க. துண்டுதுண்டாகச் சிதறப்போகிறதா..? பலமடையப் போகிறதா..??
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன, தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வந்து விட்ட நிலையிலும், ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்து விட்டார். அதற்குப் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயும், ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயும் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இந்த எதிர்ப்புகளால் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியில் நிறுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரைவில், நிலைமைகள் அவ்வாறில்லை. அங்கு, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப் போவது யார் என்பது குறித்த, எந்தத் தெளிவான சமிக்ஞையும் வெளிப்படவில்லை.
ஒன்றிணைந்த எதிரணி, பொதுஜன பெரமுனவில் இருப்பவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருப்பது போல, ஐ.தே.கவில் நிலைமைகள் இல்லை. அங்கு, ரணில் விக்கிரமசிங்க அந்தளவுக்கு உறுதியான, பலமான தலைவராக அடையாளம் காணப்படவில்லை.
ஐ.தே.கவின் நீண்டகாலத் தலைவராக அவர் விளங்கினாலும் உட்பூசல்களைத் திறமையுடன் கையாளும் ஒருவராக அடையாளம் காணப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், அவர் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை.
ஏனென்றால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக, அவரையும் ஒரு தரப்பு முன்னிறுத்த முனைகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், ஐ.தே.கவுக்குள் இப்போதுள்ள சிக்கலைப் போன்ற சூழல், ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த போதும், ஏற்பட்டது.
1988ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, அடுத்தமுறை போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார் ஜே.ஆர். எனவே, கட்சித் தலைவர் என்ற வகையில், பொருத்தமான வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலையில் இருந்தார்.
தனது செல்லப்பிள்ளையாக, அடுத்த தலைவராக வளர்த்த காமினி திஸநாயக்கவை வேட்பாளராக நிறுத்தவே ஜே.ஆர் விரும்பினார். ஆனால், கட்சிக்குள் செல்வாக்குப் பெற்று விட்ட ரணசிங்க பிரேமதாஸவை எதிர்த்துக் கொண்டு, அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. பிரேமதாஸவின் மிரட்டலுக்கு, அவர் அடங்கிப் போக வேண்டியிருந்தது.
இப்போது, ரணில் விக்கிரமசிங்கவின் நிலையும் அதுதான். ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். ஜே.ஆர் மீண்டும் போட்டியிட முடியாத நிலையில் தான், காமினி திஸநாயக்கவை முன்னிறுத்த முற்பட்டார்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதியைக் கொண்டிருக்கும் நிலையில் கூட, அவருடன் முட்டி மோதக் கூடிய நிலையில், சஜித் பிரேமதாஸ வளர்ந்திருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க, இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், அவரைப் போட்டியில் நிறுத்துவதற்கு ஆதரவாக, ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், வெளிப்படையாகவே கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அவர்களின் வாயை அடக்க, ரணில் விக்கிரமசிங்க தவறியுள்ளதால், அவரும் அந்தக் கருத்துகளை விரும்புகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இன்னொரு பக்கத்தில், தான் களமிறங்காவிடின், கரு ஜெயசூரியவைக் களத்தில் இறக்கும் எண்ணமும் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருக்கிறது. கரு ஜெயசூரியவுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிடும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
அதேவேளை, கட்சி ஒருமித்த நிலைப்பாட்டுடன், தன்னைப் போட்டியில் நிறுத்த முடிவு செய்தால், அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று, கரு ஜெயசூரிய வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதன் மூலம், ஐ.தே.கவில் தானும் ஒரு போட்டியாளர் என்பதை அவர் அறிவித்திருக்கிறார்.
மற்றொரு புறத்தில், ஐ.தே.கவின் நம்பிக்கைச் சின்னமாக பார்க்கப்படுபவர் சஜித் பிரேமதாஸ. அவரும் கூட போட்டியில் நிற்கத் தயார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரை முன்னிறுத்த வேண்டும் என்ற அணியில், மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் மாத்திரமன்றி, ஐ.தே.கவில் இல்லாத, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களும் வலியுறுத்துகின்றனர்.
இப்போது ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முடிவு செய்தால், கரு ஜெயசூரிய அணி, அதற்கு எதிராக நிற்காது என்றாலும், சஜித் அணி நிச்சயம் முரண்படும். அதுபோலவே, கரு ஜெயசூரியவை நிறுத்த, ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்தாலும் கூட, சஜித் தரப்பு மல்லுக்கட்டக் கூடும்.
ஆக, ஐ.தே.கவுக்குள் இப்போதைக்கு மூன்று போட்டியாளர்கள் இருந்தாலும், அது பெரும்பாலும் இருமுனைப் போட்டியாகவே அமையக் கூடும்.
ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில், எப்போதுமே இரண்டு அணிகள் காணப்பட்டு வந்திருக்கின்றன.
ஆரம்பத்தில் இருந்தே, டி.எஸ்.சேனநாயக்கவும் எஸ். டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவும் மோதிக் கொண்டேயிருந்தனர். ஒரு கட்டத்தில், எஸ். டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, ஐ.தே.கவில் இருந்து வெளியேறி, சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்கவுக்கும், ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் தலைமைத்துவ மோதல்கள் இருந்தன.
பின்னர், ரணசிங்க பிரேமதாஸவுக்கும் காமினி திஸநாயக்கவுக்கும் இடையில் மோதல்கள் காணப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலும் மோதல்கள் ஏற்பட்டன. கட்சி மறுசீரமைப்புகளின் மூலம், அது சற்றுத் தணிக்கப்பட்டாலும், நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இந்த விடயத்தை, ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் பற்றியெரியச் செய்யக் கூடும் என்றே தெரிகிறது.
சஜித் பிரேமதாஸவை நிறுத்தினால் வெற்றி பெறுவது சுலபம் என்று அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ள நிலையில், கரு ஜெயசூரியவை முன்னிறுத்த ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்தால், அது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
ரணில் விக்கிரமசிங்க தானே போட்டியிட முடிவு செய்தால், அந்தளவுக்குக் குழப்பங்கள் ஏற்படாவிடினும், ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, சாதகமாக அமையுமா என்ற சந்தேகம் உள்ளது.
தேர்தல் முடிவு பாதகமாக அமைந்தால், ஐ.தே.கவில் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலம் முற்றிலும் சூனியமாகப் போய் விடும்.
அதேவேளை, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் சவாலானதாகவே இருக்கப் போகிறது.
எனவே, இனிவரும் காலம் என்பது, ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.கவின் தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்ட காலமாகவே இருக்கும்.
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், ஐ.தே.க ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கத் தவறினால், அது எதிரணியின் வெற்றிக்கான வாய்ப்புகளை வலுப்படுத்தும். ஐ.தே.கவில் ஏற்படக் கூடிய பிளவுகள், முற்றிலும் எதிரணிக்கே சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறான ஒரு நிலைமையை, ஐ.தே.கவே விட்டுக் கொடுக்கப் போகிறதா என்ற கேள்வியே, இப்போது எழுந்திருக்கிறது.
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், ஐ.தே.க உட்பூசல்களால் தடுமாறுகின்ற நிலை ஏற்பட்டால், அதனுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் கட்சிகள் தயங்கக் கூடும்.
ஏனென்றால், வெற்றிபெறும் குதிரை மீதே எவரும் பந்தயம் கட்ட விரும்புவார்கள்.
ஐ.தே.கவின் மும்முனைப் போட்டியாளர்களாக இருப்பவர்களிடையே எந்தளவுக்கு போட்டி இருக்கிறது என்பதைக் கூற முடியாவிடினும் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும், ஆதரவு தெரிவிப்பவர்களும் தான் குழப்பங்களுக்குத் தூண்டுகிறார்கள்.
மூவருக்கும் பின்னால் இருந்து, பிரசாரங்களைச் செய்பவர்களும் கருத்துகளை வெளியிடுபவர்களும் ஒருவர் மீது மற்றவர் சேறு பூசத் தொடங்கியுள்ளனர். இதனால், பாதிப்பு என்னவோ ஐ.தே.கவுக்குத் தான் என்பதை, இவர்கள் உணரும் நிலையில் இல்லை.
அதைவிட, ஐ.தே.கவின் பாரம்பரிய தலைவர்களுக்கும் இடையில் வந்து கட்சியில் இணைந்து கொண்ட தலைவர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் முளைவிட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு ரவி கருணாநாயக்கவுக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாகத் தான், ஐ.தே.கவைச் சீரழிக்க, சந்திரிக்கா முனைகிறார் என்ற குற்றச்சாட்டும், ரவி கருணாநாயக்கவிடம் இருந்து வந்திருக்கிறது.
ஐ.தே.க தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்தவர்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டது. அதுவே இன்று குழப்பங்களுக்கும் காரணமாகியிருக்கிறது.
இந்தநிலையில், ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எடுக்கப் போகும் முடிவு, ஐ.தே.கவின் எதிர்காலத்தைப் பிரகாசம் ஆக்குமா அல்லது பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளது போல, ஐ.தே.கவைத் துண்டு துண்டாகச் சிதறடிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம். k. சஞ்சயன்
No unity No future.
ReplyDeleteSaith only good fighter for gotha
ReplyDeleteஇது ஒரு சரியான கணிப்பீடு என்று கருதுகிறேன், இதுதான் ரணில் விக்ரமசிங்கேக்குக் கிடைத்திருக்கும் கௌரவமாக அரசியலிலிருந்து இளைப்பாறகூடிய இறுதிசந்தர்ப்பம், அவர் தவறிழைத்தால் அதன்பாதிப்பு UNP க்கு அல்ல அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்வார்கள், அதன் உண்மையான பாதிப்பு இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம்களுக்கே, கோட்டாபய ஒரு புதியமுகமாக அரசியலுக்கு வருவதால் சஜித் தவிர எவர் வந்தாலும் அவருக்கே வெற்றிவாய்ப்பு அதிகம், சிறுபான்மைக்கட்சிகளுக்கும் UNP யின் வேட்பாளர் தெரிவில் சிறிதளவாவது அழுத்தமொன்றினைக்கொடுக்கவேண்டிய ஒரு தார்மீகக்கடமையிருக்கின்றது, அதனை மறந்துவிட்டு ஐயோ அப்படிச்செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என மரண ஒலம்விடுவதைவிட தற்போதே சிந்தித்து ரணிலை ஒத்துக்கவைப்பதே சரியான அணுகுமுறை, இதனை ரணில் கரு போன்றோரைக் காயப்படுத்தாது செய்வதன்மூலம் வெற்றிபெறமுடியும்
ReplyDeleteIf Sajith not gets his nomination, he should be an independent presidential candidate.
ReplyDeleteU N P யாரை களமிறக்குவது என்று தீவிரமாக யோசித்து வருகின்ற வேளையில் , முஸ்லிம்களோடு ,யார் இணக்கமாக நடந்து கொள்வார் என்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது .
ReplyDeleteரணிலுக்கு ,கட்சிக்குள்ளே ஆதரவு குறைந்துள்ளது , இதனால் ரணில் யாரை தெரிவு செய்வார்
, ரணிலும் சந்திரிக்கவும் , முன்னிறுத்திய மைத்ரீ யை முஸ்லிம்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தார்கள் , அதன் விளைவை முஸ்லிம்கள் மட்டுமல்ல , ரணிலும் உணர்ந்திருப்பார் .
சில இனவாத ஊடகங்களும் வேட்பாளராக சஜித் வருவதை ஆதரித்து கருத்துக்கள் முன் வைக்கின்றன . அவர் தந்தையை போலவே கடும் போக்குடையவராக இருப்பார் . என்று எதிர்பார்க்கின்றன .. அதோடு மைத்ரீ யோடு மிகவும் இணக்கமாவே நடந்து கொள்கிறார் .. இது U N P ல் பலருக்கு பிடித்து கொள்வதில்லை .
சபாநாயகர் கரு ஜெயசூர்யாவின் பெயரும் அடிபடுகிறது . இவருக்கு சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இவர் மீது ஒரு வெறுப்பு . காரணம் மைத்ரீ நடத்திய ஆட்சி மாற்ற நாடகத்தை , தனது புத்தி சாதுரியத்தால் தனித்து நின்று போராடி , மீண்டும் U N P ஆட்சியை கொண்டு வந்தது , ஜனநாயகத்தை பாதுகாத்த வர் , என்பதாலும் ,
இவருக்கு பக்கபலமாக முஸ்லீம் மந்திரிமார் இருந்தற்காகவும் ,இனவாதிகள் இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை . மைத்ரீயின் நடவடிக்கையால் ஆட்சி மாறி இருந்தால் . U NP இனி இல்லாதிருக்கும் , இனவாதிகளின் கை ஓங்கியிருக்கும் , அரசியல் சாணக்கியமுள்ளவர் , அனுபவசாலி , ஜனநாயகத்தை பாதுகாப்பவர் , முஸ்லிம்களை ஆதரிப்பவர்
ஜனாதி பதி தேர்தல்
ReplyDeleteமிக விரைவில் வர இருக்கின்ற வேலையில் , சிறுபான்மை வாக்குககளை எப்படி கவரலாம் என்று சகல கட்சிகளும் ஆராய்ந்து வருகின்றது
அவை வியூகம் வகுக்கும் போது , சிறுபான்மை மக்களும் வியூகம் அமைக்கவேண்டியுள்ளது . குறிப்பாக முஸ்லீம் வாக்குகளை எப்படி பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றலாம் என்றல்லாம் திட்டம் தீட்ட படுகிறது . ..முஸ்லிம்கள் அரசியல் தலைமைக்கு வெளியே சமூக ரீதியாக சிந்திக்கக்கூடிய அமைப்பு அவசியம்
. அது உலமா சபையாகவும் இருக்கலாம் ,ஆனால் முடிவுகள் தூர திருஷ்டி யாகவும் , ஆக்கபூர்வமாகவும் , அமைவது முக்கியம் . அவை சமூக பற்றுள்ள துறை சார் நிபுணர்களை கொண்டு பேரம் பேசும் சக்தியாக அமைய வேண்டும் . நாம் எல்லா ஜனாதிபதிகளையும் , தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறோம் , நசுக்கப்படும் சமூகமாகவும் மாறியுள்ளோம் . .ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட வீதத்துக்கு மேல் பெறவேண்டும் .....எனவே தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருப்போம் ,