கோத்தாவை அறிவிக்குமாறு, மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், கட்சிக்குள் பலத்த போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான- எதிரான அணிகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், அதிபர் வேட்பாளர் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில், வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அதிபர் வேட்பாளரை தான் அறிவிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச நேற்று உறுதிப்படுத்தினார்.
எனினும் கோத்தாபய ராஜபக்ச தான் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.
கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில், மாவட்ட அடிப்படையில் அவரை வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கம்பகா மாவட்ட பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ச எமது அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்தோம்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் சிறந்த வேட்பாளர் என்பது எங்கள் ஒருமித்த முடிவு.
ஓகஸ்ட் 11ஆம் நாள் நடைபெறும் கட்சி மாநாட்டில் எமது அதிபர் வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார். நாங்கள் சொல்வதை அவர் கேட்பார் என்று நம்புகிறோம்” எனவும் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
Post a Comment