நவம்பர் அல்லது டிசம்பரில் நீங்கள் சரியான தீர்மானத்தினை எடுப்பீர்களாக இருந்தால்...!
எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் நீங்கள் சரியான தீர்மானத்தினை எடுப்பீர்களாக இருந்தால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதொரு அபிவிருத்தியையும், நல்லதொரு தேசியப் பாதுகாப்பு, சமாதானத்தினையும் ஏற்படுத்தித்தருவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், இன்று பாவநாசபுரம், தொல்காப்பியநகர் ஆகிய வீடமைப்பு திட்டங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாசாவினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய நகர் 226ஆவது கிராமமாகும். இங்கு 28 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பிய நகரில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உண்மையில் அபிவிருத்தி என்றால் என்ன? தொழில் சாலைகளை நிர்மாணிக்க வேண்டும். கல்வி முறைகளை உருவாக்க வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டம்.
வீடுகளை மக்களுக்கு வழங்க வேண்டும். கடல்தொழில் அபிவிருத்தி விவசாயத்துறை மேம்பாடு, சிறுவர்கள் சம்பந்தமான போசாக்கு முறைகளை ஏற்படுத்தல், இலங்கையின் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
வீதிகளை அபிவிருத்தி செய்யவேண்டும். இவைதான் அபிவிருத்திகள், இவற்றைத்தான் நாட்டிலுள்ள அரசாங்கம் செய்து முடிக்க வேண்டும். கடந்த காலங்களில் தங்களது அரசியலுக்காக இனவாதத்தைத் தோற்றுவித்தார்கள்.
மதவாதம், மொழிவாதத்தைத் தோற்றுவித்தார்கள். இப்படிச் செய்துவிட்டு அவர்கள் தங்களும் மதவாதிகளாக மாறி ஆன்மீகத்தலங்களை அழிக்க முற்பட்டார்கள். மக்களை அடித்துத் துன்புறுத்தினார்கள்.
எந்த மதத்திலும் ஆன்மீகத் தலங்களை இடிக்கவேண்டும், அழிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. குண்டை கட்டிக்கொண்டு பாயவேண்டும் என்று, எந்த மதத்திலும் சொல்லவில்லை. அப்படிச் செய்துவிட்டு அவர்கள் எனது, இனத்துக்காக, மதத்துக்காகத்தான் செய்தேன் என்று கூறுகிறார்கள்.
எனவே எந்த மதமும் மக்களைக் கொன்று குவிக்கக்கூடிய கோட்பாடுகளைச் சொல்லவில்லை. எனவே இப்படியாக இனவாதத்தை, மதவாதத்தை தூண்டி பிரச்சினைகளை உறுவாக்குபவர்களின் அரசியலுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவர்களுக்கு நாம் இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வுகளில், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மக்ருப், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஸா, பிரதேச செயலாளர்களான ஜே.எஸ்.அருள்ராஜ், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சஜித்தை நம்பலாம்,ஆனால் ரனில் அவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பாரா என்பதில்தான் சந்தேகம்.
ReplyDelete