Header Ads



ஜம்மிய்யதுல் உலமா, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா..?

- Rislan Farook 

எடுத்ததற்கெல்லாம் உலமா சபையை விமர்சிக்கக் கூடாது எனவும் மற்றைய மதத்தலைவர்களை அவ்வாறு யாரும் விமர்சிப்பதில்லை எனவும் ஒருகருத்து நிலவுகிறது. முதற்கண்  இஸ்லாத்தை ஏனைய மதங்களுடனும், உலமாக்களை ஏனைய மத குருக்களுடனும் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும். . இங்கே எழுதப்பட்டுள்ளவைகள் ஜம்மியத்துல் உலமாசபையை விமர்சிக்கும் நோக்கிலோ அல்லது அதனது மதிப்பை குறைக்கும் நோக்கிலோ எழுதப்பட்டவை அல்ல, மாற்றமாக எமது சமூகத்தின் தலைமை என்றவகையில் காலவோட்டத்தில் அதன் வகிபாகம் எப்படி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டதே.  எனவே நடுநிலையான மனநிலையுடன் வாசிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாம் மதமும் கிடையாது, உலமாக்கள் என்பவர்கள், முனிவர்களோ அல்லது துறவிகளோ கிடையாது, இஸ்லாம் என்பது ஒரு பூரண சமூக  வாழ்க்கைத்திட்டம். ஆலிம்கள் என்பவர்கள் கற்றறிந்தவர்கள். கல்வியில் எல்லாம் மிக மேலானது அல்லாஹ்வினால் அருளப்பட்ட கல்வி அதுவே அல் குரானும், தூதரின் சுன்னாவும் எனவேதான் ஒரு கணக்காளரை, பொறியியலாளரை உலமா என்று சொல்லாத நாம், மார்க்கத்தைப் படித்தவரை உலமா என்று சொல்கிறோம். உண்மையில் மூவரும் உலமாக்களே.

இப்போது நாம் ஜம்மிய்யதுல் உலமாவின் விடயத்துக்கு வருவோம். கடந்த 90க்கு மேற்பட்ட வருடங்களாக இலங்கை முஸ்லிம்களின் மார்க்கம் சார்ந்த விடயங்களில் ஜம்மிய்யதுல் உலமா பெரும் பணியாற்றி வருகிறது,  இதற்கு யாரெல்லாம் உழைத்தார்களோ, உழைத்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் பாராட்டுக்குரியவர்களே அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் காலமாற்றத்திற்க்கேற்ப ஜம்மிய்யதுல் உலமா ஆரோக்கியமான மாற்றங்களை தன்னில் கொண்டுவந்துள்ளதா அல்லது காலவோட்டத்தில் அது பின்னோக்கி செல்கிறதா என்று கேட்டால், அதன் கடந்தகால செயற்பாடுகள்,  ஜம்மிய்யதுல் உலமாவை பின்னோக்கியே கொண்டு செல்கிறது என்றே  கூறவேண்டும்.

கடந்த சில வருடங்களாக இலங்கை முஸ்லிம்களைப்பற்றி அதிகம் பேசப்பட்ட விடயங்களாக பின்வரும் விடயங்களை இலங்கை பிரதான மீடியாக்களில் பரீட்சயம் உள்ளவர்கள் அறிவர்.

1.முஸ்லீம் தனியார் சட்டமும் அதன் பரிணாமமாக - ஒருநாடு ஒரு சட்டம் என்ற புதிய முழக்கமும்.

2.இலங்கை முஸ்லிம்களின் ஆணாதிக்க போக்கும் - பொது இடங்களில் அதிகரித்துவரும் முகத்திரை அணியும் பெண்களும்.

3. மார்க்கத்தின் பெயரால் தோன்றும் புதிய மருத்துவர்களும் அவர்களின் அடாவடித்தனத்தால் பாதிப்பிற்குள்ளானவர்களும். இதுபற்றிய அரச, பெருன்பான்மை வைத்தியர்களின் கேலிகளும்.

முஸ்லீம் தனியார் சட்டமும் அதன் பரிணாமமாக - ஒருநாடு ஒரு சட்டம் என்ற புதிய முழக்கமும்.

மிக நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்ட இவ்விடயம் சம்பந்தமாக, இலங்கை முஸ்லிம்களை வழிகாட்டும் பொறுப்பை சுமந்த ஜம்மியத்துல் உலமா, காத்திரமான பங்களிப்பை குறித்தநேரத்தில் வழங்கத்தவறியதன் விளைவையே நாங்கள் இன்று கண்டுகொண்டிருக்கிறோம். இதுவரை காலமும், இதுபற்றி பெண்ணிலை வாதிகளும், பெரும்பான்மை மத தீவிர போக்காளர்களுமே போர்க்கொடி தூக்கியிருந்தனர்.  ஆனால் தற்பொழுது நடுநிலை வாதிகள் என தங்களை அறிமுகப்படுத்துவோர் மாத்திரமன்றி இடதுசாரிகளும் ஒருநாடு ஒரு சட்டம் என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர். இது மிச்சம் சொச்சம் இருக்கின்ற முஸ்லீம் தனியார் சட்டத்திற்கு முற்றிலும் ஆப்புவைக்கின்ற ஒரு நிலையை நோக்கி நகர்த்தப்படுவதனை கண்கூடாக காணமுடிகின்றது. இந்தப்பிரச்சினைக்கு மத்ஹபுகளை தாண்டி நாம் பெரும்பான்மைக்கு மத்தியில் வாழும் சிறுபான்மை என்ற யதார்த்தத்தை புரிந்து ஜம்மியத்துல் உலமா ஒரு தீர்வை நோக்கி நகர்ந்திருக்குமென்றால் தற்பொழுது இருக்கின்ற இக்கட்டான நிலையில் இருந்து நாம் எப்பொழுதோ மீண்டிருக்கலாம் அல்லவா?

இலங்கை முஸ்லிம்களின் ஆணாதிக்க போக்கும் - பொது இடங்களில் அதிகரித்துவரும் முகத்திரை அணியும் பெண்களும் (இது உண்மை இல்லை எனினும்). ஆடை என்பது மனித சுதந்திரம் எனவேதான் மனிதர்களை, மனிதர்களின் நலவுகளை பாதுகாக்க வந்த இஸ்லாம் மார்க்கம் ஒரு குறித்த ஆடை ஒழுங்கை போதிக்காமல் மறைப்பதற்கான நிபந்தனைகளை போதித்திருக்கின்றது. மனிதர்களின் கால, சூழல், நாகரீகம், விருப்பு வெறுப்புக்களால் மாறுபடுகின்ற விடயங்களில்,  இம்மார்க்கம் இந்தப் பரந்த போக்கை கையாண்டிருப்பதனை ஷரீயாவின் அடிப்படைகளை அறிந்த யாவரும் அறிவார்கள். ஆனால் மனித நலன்களை பாதுகாப்பதற்காக அருளப்பட்ட அல்லாஹ்வின் அற்புதமான இந்த வழிகாட்டல் பொக்கிஷம், இன்று இலங்கையில் குற்றவாளிக்கூண்டில் வைக்கப்பட்டுள்ளது ..ஷரீஆ கொடூரமானது, இந்தகாலத்துக்கு பொருத்தமற்றது, பெண்களின் உரிமைகளை மறுக்கிறது என்றெல்லாம் அது எள்ளி நகையாடப்படுகின்றது.  21 உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதலில் எவரும் புர்கா அணிந்திருக்கவில்லை எனினும் புர்காவின் தடை, முஸ்லீம் அல்லாதவர்கள் மத்தியில் எவ்வளவு கொண்டாடப்பட்டது என்பதனையும் அதன் அடுத்தகட்டமாக அபாயாவையே கழட்டச் சொல்லுமளவுக்கு அது தற்பொழுது பரிணாமம் அடைந்துள்ளது என்பதனையும் அவதானிக்க முடிகின்றது. எனவே மார்க்கத்தில் புலமை வாய்ந்தவர்களின் சபை இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், இலங்கைக்கு பொருத்தமானதாக மார்க்கத்தை சொல்லியிருந்தால், இப்பிரச்சினை இந்தளவு தூரம் வளர்ந்திருக்காதல்லவா? எனவே மார்க்கத்தில் இவ்விவகாரம் பற்றிய நடுநிலைப்போக்குள்ளவர்கள் உலமா சபையிலும் இருக்கிறார்கள் என்றாலும், சிலரின் ஆதிக்கப்போக்கும், தான் சார் அணியினரை திருப்திப்படுத்த துடிக்கும் வாக்கு வேட்கையும் காரணமாக இருக்குமோ  என்று மக்கள் கருதுகிறார்கள்.கலாச்சார மாற்றம் என்பது, எல்லா சமூகத்திலும் இடம் பெறுவதுதான்.  பெரும்பான்மையினர் மேற்கத்திய மோகத்தில் அலைகிறார்கள் என்ற யதார்தத்தையாவது பேசியிருக்கலாம் அல்லவா.

மார்க்கத்தின் பெயரால் தோன்றிய  புதிய மருத்துவர்களும், (?) அவர்களின் அடாவடித்தனத்தால் பாதிப்பிற்குள்ளானவர்களும். இதுபற்றி அரச, பெருன்பான்மை வைத்தியர்களின் கேலிகளும். இது முழு முஸ்லீம் சமூகத்தையும் காட்டுவாசிகளாக்கியது மாத்திரமன்றி  எமது அறிவுப் பாரம்பரியத்தையே கேள்விக்குறியாக்கிய செயல். துரதிஷ்டவசமாக  இந்த ஈனச்செயல் சுன்னாவின் பெயரால் அரங்கேறியது எவ்வளவு அபத்தம்.  ஜம்மியத்துல் உலமா இதுவரை மார்க்கத்தை கொச்சைப்படுத்திய முழுச் சமூகத்தையும் தலைகுனிய வைத்த இந்த விடயம் சம்பந்தமாக ஒரு வார்த்தயேனும் பேசாமல் இருப்பது எவ்வளவு துரதிஷ்டம். இங்கு பெரும்பான்மையினரால் கேள்விக்குட்படுத்தி எள்ளிநகையாடப்பட்ட வெறும் மூன்று விடயங்களை மாத்திரமே உதாரணத்துக்கு எடுத்துள்ளேன். முஸ்லீம் சமூகத்தினுள் உள்ள எத்தனையோ விடயங்கள் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன..... வருடாவருடம் வரும் பிறை தொடக்கம்  ஆயிரம் வருடங்களாக ஊர்களில் புனித அல்-குர்ஆனை இலவசமாக கற்பதற்கு இருந்த நிலை மாறி பணம் பறிக்கும் மக்தப்களாக ஆக்கப்பட்டது வரைக்கும்.

ஜம்மியத்துல் உலமாவிடம் இருந்து இலங்கை மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் எதிர்பார்ப்பது அனர்த்த நிவாரணமும், அரசியல் காய் நகர்த்தல்களும் அல்ல, மாறாக மனிதநலன்களுக்காக அருளப்பெற்ற இந்த இஸ்லாம் மார்க்கத்தை இலங்கை மண்ணுக்கும், மக்களுக்கும் அருளாக காட்டவேண்டும் அந்த அருளில் இந்த முஸ்லீம் சமூகமும் நனையவேண்டும் என்பதுவே..!

ஜம்மிய்யதுல் உலமா  வெறும் வார்த்தையால் மாத்திரம் இல்லாமல் தனது செயலாலும் அதன் புலமை, பழமையினை பறைசாற்ற வேண்டும். கற்றறிந்த அடுத்த தலைமுறைக்கு இடம் கொடுத்து முன்மாதிரிமிக்க அமைப்பாக அது தனது செயலால் சான்று பகரவேண்டும் என்பதுவே இலங்கைமுஸ்லிம்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறான ஆரோக்கியமான மாற்றத்தை ஜம்மிய்யதுல் உலமாவில் இருந்து கொண்டு எதிர்ப்பவர்கள்,  பதவிமோகம் பிடித்தவர்கள் மாத்திரமல்ல, இஸ்லாத்தினை அழிக்கத்துடிக்கும் அகீதாவில் முரண்பட்ட அணியினரும் இஸ்லாத்தின் எதிரிகளுமே. அது மாத்திரம் அன்றி கடந்த ஒரு நூற்றாண்டுகளாக நடுநிலையான முழு முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருந்த, இந்த மாபெரும் நிறுவனத்தை, ஒரு குறிப்பிட்ட அணியினரின் சொத்தாக மாற்றும் ஈனச்செயலை ஜாமிய்யாவின் தலைமை செய்யுமானால் அது வரலாற்று துரோகம் மாத்திரம் இல்லாமல் ஜாமிய்யா மீதான நம்பிக்கையையும் மக்களின் மத்தியில் இல்லாமலாக்கிவிடும். எனவே நாம் மதிக்கும் எமது தலைமை எங்களையும் நடுநிலையான எமது மார்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலைநிமிர்ந்து வாழவேண்டும் எனபதுவே எமது துஆ ...

6 comments:

  1. கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் அடங்கிய ஒரு கட்டுரை.

    ReplyDelete
  2. Masha Allah. Very good article

    ReplyDelete
  3. அழகாகச் சொன்னீர்கள். நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. A good analytical criticism of ACJU. Will they listen to this? I think that they want to follow Yazeed, and Hajja in their election to tell the Muslim community. It is OK for them to do this because, all Muslim rulers are like that..

    ReplyDelete
  5. Pls any one come and handover the acju.practically will know how is difficult.everybody can blame.

    ReplyDelete

Powered by Blogger.