ஞானசாரரின் பொது மன்னிப்புக்கு எதிரான, மனு செப்டெம்பரில் விசாரணை
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மூன்று நீதிபதிகளடங்கிய குழு இந்த வழக்கை செப்டம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ள தீர்மானித்துள்ளது.
நேற்று இம்மனுவை பரிசீலணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகளான புவனேக்க அளுவிஹார, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோர் இவ்வழக்கு சந்தியா எக்னலிகொடவின் வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்தனர்.
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக ஞானசார தேரருக்கு ஆறு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து ஞானசார தேரர் கடந்த மே 23ஆம் திகதியன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அதற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. சரவணமுத்து தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு அரசியலமைப்பின் 12(1) சரத்தை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவும் சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ணவும் கலந்து கொண்டனர்.
லக்மால் சூரியகொட
Post a Comment