Header Ads



தமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து, சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் - கல்முனை முதல்வர்

தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் பொது மக்களும் தமது அனைத்து சக்திகளையும் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;

"கன்னியா வெந்நீரூற்று என்பது பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் மதவழிபாட்டுத்தலப் பிரதேசமாக இருந்து வந்திருப்பதை வரலாற்று ரீதியாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். நாம் அறிந்த காலத்தில், எமது நேரடி தரிசனத்தின்போது கூட அப்பகுதியில் பௌத்த சின்னங்களோ சிலைகளோ இருந்திருக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்த சர்ச்சை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் திருகோணமலையை சிங்களப் பெரும்பான்மையாக மாற்றுவதற்கு பகிரங்கமாகவே திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதேவேளை  தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒன்றாகவே வெலிஓயா சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டமையும் அதற்கு பாதுகாப்பு அரணாக குரங்குபாஞ்சான் முஸ்லிம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையும் சரித்திர சான்றாகும்.

கல்லோயாத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசமான அம்பாறையில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, முஸ்லிம்களிடமிருந்து அப்பிரதேசம் கபளீகரம் செய்யப்பட்டது போன்றே திருகோணமலையும் தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கன்னியாவை ஆக்கிரமிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அண்மைய அட்டகாசங்களும் அரங்கேறியுள்ளன. இந்த வெட்கக்கேடான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

அவ்வாறே நுவரெலியாவின் கந்தப்பளை மாடசாமி இந்து ஆலயத்திலும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமீறல்கள், தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. இவை மிகவும் பௌத்த மதத்திற்கே இழுக்கான, அருவருக்கத்தக்க, பிற்போக்கான செயற்பாடுகளாகும்.

இதேபோன்று உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் கால் பதித்த பாபாத மலை எனும் பகுதி முஸ்லிம்களுக்கும் உரித்தான வரலாற்றுப் பாரம்பரிய இடமாக இருந்தும், அப்பகுதியில் ஜெயிலானி பள்ளிவாசலும் இருக்கின்ற நிலையில், தற்போது அங்கு முஸ்லிம்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாக சரித்திரமே இல்லாதபோது பாபாத மலையை புத்தருக்கான இடமாக உரிமை கோருவது எந்த வகையில் நியாயமானது.

புதைபொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் சிங்களவர்களை மாத்திரமே உத்தியோகத்தர்களாகக் கொண்ட புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களமும் சரித்திர பேராசிரியர்களும் தங்களது இனத்திற்காக, அவர்களுக்கு வேண்டிய இடங்களையெல்லாம் பௌத்த புராதான இடங்களாக பிரகடனம் செய்து வருகின்றமையானது தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பேரின சக்திகளின் பின்புலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற இவ்வாறான அடாத்தான அக்கிரமங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை என்பது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கியாள  வேண்டுமென்கின்ற பேரின வெறிச்சிந்தனையையே நாம் எதிர்க்கிறோம். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இவ்வாறான பேரின மேலாதிக்க செயற்பாடுகளை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லீம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இதன் அவசியத்தை இரு தரப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

அதேவேளை தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, தமிழினத்திற்கு துரோகமிழைத்த கருணா அம்மான், தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் ஆணைக்கு துரோகமிழைத்த வியாழேந்திரன் போன்றோர் கல்முனை வடக்கு உப செயலக விடயத்தில் பேரின வெறிபிடித்த பிக்குகளை இங்கு அழைத்து வந்து, உதவி கேட்க முடியுமானால், கன்னியா வெந்நீரூற்று போன்ற தமிழினத்தின் இதயத்தில் பேரினவாதிகள் கைவைக்கின்றபோது மௌனம் காப்பது ஏன்? இந்த சூட்சுமங்களை தமிழ் மக்கள் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்"  என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.(அஸ்லம் எஸ்.மௌலானா)

4 comments:

  1. Excellent. We have to support our fellow Tamil propel.

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய கல்முனை நகரபிதா ஏ.எம்.ரஹீப் அவர்களது தமிழ் மலையகத்தமிம் முஸ்லிம் நல்லுறவுக் குரலுக்கு நல்வாழ்த்தும் வரவேற்பும். இத்தான் இணைந்த இலங்கை தமிழ்பேசும் மக்களின் நாளை நமதே என்னும் குரல். என்றும் கல்முனை முதல்வருக்கு எங்கள் அன்பும் ஆதரவும்

    ReplyDelete
  3. அன்புள்ள தலைவா..இதுதான் தீர்க்கதரிசனம். நீங்கள் ஒரு மாண்புமிக்கவர்.

    ReplyDelete
  4. Very True Sir..
    We Muslims are also Tamils..
    Please don't separate Tamil from Muslims.
    If anyone want to write.. Write as Hindhu, Muslims,Buddhist,Cristian.. its okay and its right. But Don't write as Tamil, Muslims it not right( 95% of Muslims are Tamils then Malay few Sinhalese Muslims).

    ReplyDelete

Powered by Blogger.