மைத்திரி ஏமாற்றிவிட்டார் -அவரது சகாவும் கடும் விமர்சனம்
முன்னைய அரச தலைவர்களான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் போன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபாலவும் மக்களை ஏமாற்றிவிட்டதாக மஹிந்த அமரவீர விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, நிறைவேற்று அதிகாரமுடைய ஆட்சி முறையை இல்லாதொழிப்பதாகக் கூறிய தனது தலைவரான ஜனாதிபதி சிறிசேனவும் தற்போது அந்த விடயத்தில் மௌனம் காத்து வருவதாக விமர்சனம் வெளியிட்டார்.
“ஜே.வி.பியினரால் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதிலும் இப்போது ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் சத்தமில்லாது அமைதியாக இருக்கின்றன. நான் என்றால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க விருப்பம் தெரிவிக்கின்றேன். அந்த முறை காரணமாக அரச நிதியே அழிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச மட்டுமன்றி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்கூட இந்த நிறைவேற்றதிகார முறையை இல்லாதொழிப்பதாகவே அறிவித்திருந்தார்கள். ஆனால் இப்போதுகூட ஜனாதிபதி மௌனமாகவே இருக்கின்றார். நாட்டுக்கும் அரச நிதிக்கும் கேடு விளைவிக்கின்ற இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும்”
Post a Comment