இம்முறை 4000 பேர் ஹஜ் பயணம், நேற்றுவரை 2500 பேர் சவூதியை சென்றடைவு
இலங்கையிலிருந்து நேற்றைய தினம்வரை 2500 பேர் ஹஜ் கடமைக்காக சவூதிக்கு பயணமாகியுள்ளனர். அத்துடன் இரண்டு அதிகாரிகளும் இரண்டு வைத்தியர்களும் மக்கா சென்றுள்ளதாக அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் பாஹிம் ஹாசிம் தெரிவித்தார். இம்முறை ஹஜ் பயணத்தில் சிக்கல்கள் ஏற்படாதவகையில் பல்வேறு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலும் தெரிவித்த ஹஜ் குழு உறுப்பினர், இம்முறை இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைத்தது. இதற்கு மேலதிகமாக 500 கோட்டா இறுதி சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெற்றது. இறுதியாகக் கிடைத்த கோட்டாவை நாம் முகவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளித்தோம். அதற்கான ஏற்பாடுகளுக்கு ஒருமாதகால அவகாசம் பெறப்பட்டது. மேலதிக கோட்டாவில் ஹஜ் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கான ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன. அத்துடன், ஹஜ் பயண நடவடிக்கைகளுக்காக 7 அதிகாரிகள் சவூதிக்கு செல்லவுள்ளனர். மேலும் 5 வைத்தியர்கள் கொண்ட குழுவினரும் அங்கு செல்வர்.
இலங்கையின் முதல் ஹஜ் குழு கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியாவை சென்றடைந்தது. அத்துடன் நேற்றையதினம் வரை 2500 பேர் ஹஜ் யாத்திரைக்காக சவூதிக்கு சென்றுள்ளனர். 26 ஆம் திகதி தொடர்கம் 30 ஆம் திகதிக்குள் 3200 பேர்வரை மக்கா சென்றடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சவூதி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள ஈ-ஹஜ் சேவை மூலம் ஹஜ் பயணத்துக்கான விசாக்களை விநியோகிப்பது மிகவும் இலகுவாக இருந்ததாக இலங்கையின் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் அரப் நியுஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும், மிகச்சிறப்பான முறையில் 4,000 விசாக்களை எங்களால் விநியோகிக்க முடிந்தது. அனைத்து விசாக்களும் கால தாமதமின்றி சரியான நேரத்தில் வழங்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை யாத்திரிகர்களை ஏற்றிச்செல்வதற்கான விமானப் போக்குவரத்து சேவைகளை சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பன இணைந்து செயற்படுத்துகின்றன. ஹஜ் யாத்திரைக்கான இறுதி விமானம் இலங்கையிலிருந்து ஆகஸ்ட் 7 ஆம் திகதி புறப்படவுள்ளது.
(எஸ்.என்.எம்.ஸுஹைல் , எம்.ஏ.எம்.அஹ்ஸன்)
Post a Comment