ஐ.எஸ் தீவிரவாதிகளின் 2 வது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்
இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினர், புலனாய்ப் பிரிவு உட்பட அனைத்து பாதுகாப்பு படைப் பிரிவினரும் 24 மணிநேர அர்ப்பணிப்புடன் கூடிய சேவை காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை தடுக்க முடிந்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் இராணுவத்தினரும் இருக்கின்றனர் என்கிற உணர்வு மீண்டும் அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று-19- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், எமது அனைத்துப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் 24 மணிநேரப் பணிகளை அர்ப்பணிப்பு செய்தபடியினால்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படவிருந்த இரண்டாவது தாக்குதலை தடுக்க முடிந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதையே நாங்கள் செய்துவருகின்றோம். எமது இராணுவத்தினரை மறந்துபோகும் காலமும் ஏற்பட்டது.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் இராணுவத்தினர் இருக்கின்றனர் என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
அதேவேளை 30 வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் அங்கவீனர்களாக மாற்றப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளையும் வீட்டுத் திட்டங்களையும் வழங்குகின்ற பணிகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்க அமைய எமது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் எமது படையினருக்கான அத்தனை உதவிகளையும் நாங்கள் தொடர்ச்சியாக வழங்குவோம்” என அவர் கூறியுள்ளார்.
Post a Comment