Header Ads



ரஞ்சனை கைதுசெய்ய, தேரர்கள் 2 நாள் அவகாசம் - ஸ்ரீகொத்தவை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை

பௌத்த தேரர்களுக்கு அபகீர்த்தியை வகையில் காணொளியையும் கருத்துக்களையும் வெளியிட்டதாக குற்றம்சாட்டிவரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களிற்குள் அவரை கைது செய்யாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவை முற்றுகையிடுவோம் என பௌத்த பேரினவாத அமைப்புக்கள் பொலிஸார் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இலங்கையில் இனவாதத்தை பரப்பி வன்முறைகளில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் அனைவரும் சிறு வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக பௌத்த விகாரைகளிலேயே இந்த பௌத்த பிக்குகள் சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த கருத்தினால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியிருக்கும் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கள ராவய, ராவணா பலய, சிங்களே ஆகியவற்றின் தலைமைப் பிக்குகள் பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று காலை நேரில் சென்று இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தலைமையிலான அதிகாரிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே வந்து தலைமைப் பிக்குமார்களை சந்தித்து முறைப்பாட்டினை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கி, பௌத்த பேரினவாத அமைப்புக்கள் பொலிஸார் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளன.

2 comments:

  1. இனத்துவேசத்தைக் கக்கும் இந்த வெறியர்கள் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விடுக்கும் இந்த இனவெறி சார்ந்த வெறிபிடித்த வாக்குவாதங்கள், நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் வருவதில்லையா என்றபெரும் கேள்விக்குறி பொதுமக்களாகிய எமக்கு ஏற்படுகின்றது. இதற்கு அரச, சட்டம் சார்ந்த பொறுப்பானவர்கள் பதிலளிப்பார்களா?

    ReplyDelete
  2. சட்டம்,தேர்தல்,அரசு ஏதுமே தேவையில்லை பேசாமல் இவர்களிடம் ஆட்சியை வழங்கி விடுவது சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.