Header Ads



முஸ்லிம் என்ற காரணத்திற்காக Dr ஷாபியை பழிவாங்க வேண்டாம் - ரிஷாத்


குருநாகல், டாக்டர் ஷாபி தொடர்பாக இன்று பேசப்படுகின்றது. அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நிதிக்குற்றம் தொடர்பில் அவரை கைது செய்துவிட்டு, அதன் பின்னர் ஊடகங்களில் இவரது சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் முறையிடுங்கள் என்று கோரப்படுகின்றது. நிதிக்குற்றம் தொடர்பாக வைத்தியர் ஒருவரை கைது செய்து விட்டு அவர் மருத்துவத்தில் தவறு இழைத்துள்ளார் என அறிவிப்பதும்  முறைப்படுங்கள் என  ஊடகங்களில் மூலம் வேண்டுகோள் விடுப்பதும் எந்த நாட்டில் இருக்கின்றது என கேட்க விரும்புகின்றேன்.

பாராளுமன்றில் நேற்று  (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ;

டாக்டர் ஷாபியால், இவ்வாறான தனியான சத்திர சிகிச்சை ஒன்றை ஒருபோதும் செய்ய முடியுமா? இவ்வாறான சத்திர சிகிச்சை ஒன்றில்  சுமார் 12 பேர் சம்பந்தப்படுகின்றனர். அதுவும் மகப்பேற்று வைத்தியர் ஒருவரும், அறுவைசிகிச்சை வைத்தியர், அவருக்கு உதவியாக இன்னொரு வைத்தியர், மயக்க மருந்து வைத்தியர் , தாதிகள் இருவர், அத்துடன்  ஆண் பெண் என்ற இரு கண்காணிப்பாளர்கள். அத்துடன்  அதி உயர் வெளிச்சம் கொண்ட பிரகாசமான ஒளித்திரையும் அந்த சத்திர சிகிச்சையின் போது சம்பந்தப்படுகின்றது. இந்த மருத்துவ நடைமுறையிலயே மருத்துவர் ஷாபியினால் 8000 பேருக்கு இவர்கள் கூறும் சத்திர சிகிச்சையை தனித்து செய்ய முடியுமா?அவர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென வேண்டுகின்றேன். 

இலங்கையில் புகுந்த பயங்கரவாதம் இந் நாட்டிலயே இரண்டு மாதங்களாக இனங்களுக்கு இடையில் பாரிய பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் மாத்திரமின்றி மக்களின் இயல்பு வாழ்வும் சீரழிந்துள்ளது. எந்தக்காலத்திலும் இவ்வாறான கொடிய பயங்கரவாதம் ஒன்று இந்த நாட்டிலே வந்துவிடக்கூடாது என நாம் பிரார்த்திக்கின்றேன். 

நாட்டிலுள்ள அத்தனை பேரும் ஒரே குடும்பம் போல் இணைந்து, பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே குரூர  பயங்கரவாத்தை துடைத்தெறிய முடியும், அத்துடன் இனங்களுக்கிடையே சுமூக உறவை ஏற்படுத்த முடியும். 

பயங்கரவாத்ததோடு அப்பாவி முஸ்லிம்களை தொடர்புபடுத்தி அவர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து காட்டுவதற்கு சிலர் பிரயத்தனம் செய்கின்றனர். வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவும் அற்ப அரசியலுக்காகவுமே இனவாத விஷத்தைக் கக்கி அவர்கள் செயற்படுகின்றனர். தினமும் ஊடகங்களுக்கு வந்து சில அரசியல்வாதிகளும், சில மதகுருமாரும் முஸ்லிம்கள் தொடர்பிலும் அவர்களின் வாழ்க்கை முறை தொடர்பிலும் நஞ்சை கக்குகின்றனர். 

உலக பயங்கரவாதம் இந்த நாட்டுக்குள் ஊடுருவிய போது அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு உலமா சபை, சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மிகவும் துல்லியமாக தகவல் வழங்கினர். எனினும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று உயிர்கள் பலியாகும் வரை பொறுப்பானவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். கொலை செய்தவர்களும் இவ்வாறு நடைபெறும் என தெரிந்தும் வாளாவிருந்தவர்களும்,  தண்டிக்கப்பட வேண்டும். இதனை விடுத்து பாதிக்கப்பட்டு வேதனையுடன் இருக்கும் மக்களை ஆத்திரமூட்டும் வகையிலும், சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கும் வகையிலும் சில அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். 2009யில் யுத்தம் முடிந்த பின்னர் இன்னுமொரு கலவரத்தை ஏற்படுத்துவதற்காக காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்திருந்த விட்டது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் சரிவர பயன்படுத்துகின்றனர். அப்பாவி மக்களின் துன்பத்தில் அவர்கள் அரசியல் குளிர்காய்கின்றனர். 

சில அரசியல்வாதிகளும், மதகுருமார்களும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு திரிகின்றனர்.  தாங்கள் தான் பொலிஸ் போலவும் சண்டியர் போலவும் ஆட்சியாளர் போலவும் பாதுகாப்பு தரப்பினர் போலவும் நீதிபதி போலவும் செயற்படுகின்றனர். அதுவும் இந்த நாட்டிலயே அமுலில் உள்ள அவசரகால சட்டத்திற்கு மத்தியிலே தான் இத்தனை கைங்கரியங்களையும் அவர்கள் செய்துவருகின்ற்னர். இதுவே எமக்கு வேதனை தருகின்றது. என்றார் 

1 comment:

  1. This country has gone to dogs with yellow robes

    ReplyDelete

Powered by Blogger.