'சிறந்த பொலிஸ் அதிகாரி' விருதுகளை வென்ற, பெண் பொலிஸ் அதிகாரி குற்றவாளியான பரிதாபம்
(ரெ.கிறிஷ்ணகாந்)
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்தும் 14 வயதான சிறுமியைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரித்தமை மற்றும் அழுத்தம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிறந்த பொலிஸ் அதிகாரிக்கான விருதுகளை வென்ற, மாத்தறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமிக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தமை மற்றும் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக செலுத்துமாறும், அதற்கு மேலதிகமாக அரசாங்கத்துக்கு 50 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி நஷ்டஈட்டுத் தொகையை 12 மாதங்களுக்கு 4 தவணைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸ பிரதேச சபையின் (அப்போதைய) தலைவர் அல்லது வேறு தரப்பினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என, கடந்த 2012 ஆம் ஆண்டில், 14 வயதுடையவராக இருந்த மாத்தறை அக்குரஸ்ஸ, நில்மெனிக் கமவைச் சேர்ந்த இஷாரா அஞ்சலி என்ற சிறுமியை அவரது வீட்டில் வைத்து பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையிலான மாத்தறை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினர் கைதுசெய்தனர்.
அதன்போது, தான் எவருடனும் பாலியல் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என அச்சிறுமி தெரிவித்திருந்த போதிலும் பொலிஸார் அவரை மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பல்வேறு வகையில் அழுத்தங்களை பிரயோகித்து போலி வாக்குமூலம் பெறும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உள்ளாக்கியிருந்ததாக தெரியவந்திருந்தது. சிறுமியின் உறவினரல்லாத ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாடொன்றின் பிரகாரமே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இச் சிறுமி 4 தடவைகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும், அப்பரிசோதனைகளின் இறுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் சிறுமியை தொடர்ந்தும் பொலிஸ் சிறைக்கூடத்தில் சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்து அந்தப் பொலிஸ் அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தி வந்ததாக தெரியவந்திருந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரால் SC (FR) 677/2012 என்ற இலக்கத்தின் கீழ் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதற்கமைய, பிரதிவாதியான பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டினால் அரசியலமைப்பின் 11, 12(1), 13(1), 13(2) ஆகிய சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.
சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அதிகாரிகள், தமது அதிகாரத்தை தவறாக பிரயோகித்து பொதுமக்களை பாதிப்படைய செய்யும் பெரும்பாலான சம்பவங்கள் நாட்டில் இடம்பெறுவதாகவும், எனினும், அவ்வாறானவைகளில் சொற்பமானவையே சட்டத்துக்கு முன் கொண்டு வரப்படுகிறது. விசேடமாக சிறுவர்களை கைது செய்தல், தடுத்துவைத்தல், சிறைவைத்தல் உட்பட, சட்டம் மற்றும் அரசியலமைப்பினால் பொதுமக்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படாத வகையில் அதிகாரத்தை உபயோகிக்கும் விதம் தொடர்பான ஆலோசனைக் கோவையொன்றை உருவாக்குமாறு இவ்வழக்கின் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவேண்டும். கைதுசெய்யப்பட்டவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிவானின் அனுமதி பெறவேண்டும் என தண்டனைச் சட்டக்கோவையின் 122(21) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மனுதாரரான சிறுமி தொடர்பில் இதில் எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
இவையனைத்தும், மாத்தறை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொலிஸ் பொறுப்பதிகாரியின் அனுமதியுடனேயே நடந்துள்ளதால், குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் சிறுமியின் 12(1) அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதியரசர்கள் குழாமின் 24 பக்கத் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் வேளையில் 14 வயதுடையவராக இருந்த மனுதாரர், தற்போது திருமணமாகி குழந்தை பிரசவத்துக்கு தயார் நிலையிலுள்ள 21 வயதான யுவதியாவார்.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி,வெலிஅமுண, சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமான்னஆகியோர் ஆஜராகியிருந்த அதேவேளை, எதிர்மனுதாரர் தரப்பு சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் வருணி ஹெட்டிகே டி சில்வா ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த, 2017 ஆம் ஆண்டில் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கான விருதை வென்றதுடன் 2001 ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருதையும் வென்றார். அத்துடன், சிறுவர் மற்றும் மகளிருக்கு இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவராவார்.
இந்நிலையில்பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவுக்கு வழங்கப்பட்ட விருதுகளை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் உள்ளக விசாரணையொன்றுக்கும் முகங்கொடுப்பார் எனவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment