தோப்பூர் உப பிரதேச, செயலகத்தையும் தரமுயர்த்து - வலுவடையும் முஸ்லிம்களின் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தின், தோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை 24.அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி அப்பிரதேச மக்கள் பலமுறை அரசியல் ரீதியாக மட்டுமன்றி அஹிம்சை போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
முஸ்லிம்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தின் செல்வநகர் பகுதி, சேருவில பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட பகுதியாகும்.
இதன் காரணமாக கடந்த காலங்களில் அப்பகுதிக்குள் இருக்கும் நீநாகேணி முஸ்லிம்களின் காணி பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையிலும், காணி உறுதிப் பத்திரம் வழக்கப்படாத நிலையிலும் பல அநியாயங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
புராதன பூமி என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமையே இங்கு காணப்படுகின்றது.
மக்களின் நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அது காலதாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
நிலத்தொடர்போடு காணப்படும் அதிகாரபூர்வமான தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான கோரிக்கை இந்த தருணத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் அதனை நிறைவேற்றுவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்றி இன வேறுபாடின்றி முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
2
திருகோணமலை - தோப்பூர் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேச முஸ்லிம்களின் பிரதேசங்கள் கடந்த அரசாங்கங்களின் ஊடாக பலவந்தமாக பிடிக்கப்பட்டு சேருவில பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் பிரதேசங்களுக்கென உப செயலகம் ஒன்றே உள்ளது. இந்த உப செயலகத்துக்கு காணி அதிகாரம் இல்லாமை காரணமாக முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
தற்போதுள்ள தோப்பூர் உப செயலகம் என்பது கல்முனையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலங்களை கையகப்படுத்தியுள்ள கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் போன்றதல்ல. மாறாக தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பிரதேசங்களை தவிர்த்து முஸ்லிம்களின் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் சேருவலயுடனும் இணைக்கப்பட்டுள்ளன.
தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அம்மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு அதனை வழங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
உடனடியாக இதுதொடர்பில் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர்களிடம் முறையிடும் போது இப்பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ReplyDelete