ஸர்மிளாவையும், ரிஸ்வின் இஸ்மதையும் கொல்வதற்கு திட்டமிட்ட சஹ்ரான் குழு
கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு வந்திருந்தனர். எனக்கு எதிராக இலங்கை ISIS பயங்கரவாதிகள் மேற்கொண்ட படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை வழங்கியதுடன் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வரும்படி கேட்டிருந்தனர். அங்கு சென்றதும் முழுமையான தகவல்களை அறிந்துகொண்டேன்.
2014 ஆம் ஆண்டு முதல் நான் இஸ்லாம் குறித்த சிந்தனையை தூண்டும் விதமான விமர்சனங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் மூலம் முன்வைத்து வரும் நிலையில், எனது பேஸ்புக் பதிவுகளை இலங்கை ISIS இனர் மற்றும் அதன் தலைவன் மெளலவி சஹ்ரான் ஹாஷீம் ஆகியோரும் வாசித்து வந்துள்ளனர். சஹ்ரான் என்னை பன்றி என்று அழைத்து வந்துள்ளான். எனது இருப்பிடம் மற்றும் நடமாட்டங்களை கண்டுபிடிப்பதற்கு முயன்ற பொழுதும் சஹ்ரான் இற்கும், இஸ்லாமிய பயன்கரவாதிகளிற்கும் அது முடியாமல் போயிருக்கின்றது.
இந்நிலையில் தாருன் நுஸ்ரா அநாதை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட்ட விவகாரம் தொடர்பான செயற்பாடுகளின் ஓர் அம்சமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பான எனது பேஸ்புக் பதிவை கண்ட சஹ்ரான், “அந்த பன்றியை கொல்லுங்கள்” என்று கூறி நான்கு பேரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அனுப்பி இருக்கின்றான்.
கைதுசெய்யப்பட பயங்கரவாதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் என்னை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி மற்றும், ஸர்மிளா ஸெய்யித் அவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்களை அறிந்துகொண்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவற்றை எனக்கும், ஸர்மிளாவிற்கும் தனித்தனியாக தெரிவித்து இருந்தார்கள்.
கபூர் மாமா என அறியப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பை, மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ் ஹக் மற்றும் மட்டக்குளியை சேர்ந்த காலித் ஆகிய நால்வரே என்னை கொலை செய்வதற்காக வந்துள்ளனர். இதில் கபூர் மாமா மற்றும் மில்ஹான் ஆகியோர் வவுணதீவில் இரண்டு போலீசார் கொலை செய்யப்பட்டமை மற்றும் மாவனல்லையில் அமைச்சர் கபீர் ஹாசிமின் இணைப்பாளர் தஸ்லீம் சுடப்பட்டமை ஆகியவற்றில் தொடர்புடையவர்கள். சாதிக் அப்துல்லாஹ் ஹக் மாவனல்லை பகுதி புத்தர் சிலை உடைப்புடன் நேரடியாக தொடர்பு பட்டவர். காலித் குறித்து எனக்கு அதிகம் தெரியவில்லை. மில்ஹான் சவூதி அரேபியாவிலும், மற்ற மூவரும் இலங்கையிலும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிவடைந்து நானும், சக செயற்பாட்டாளர்களும் நண்பர்களின் கார்களில் ஸர்மிளா ஸெய்யித் உடைய மந்த்ரா நிலையத்திற்கு தேநீர் அருந்துவதற்காகச் சென்றோம். நாம் சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் அங்கே பல விடயங்களையும் கலந்துரையாடிக் கொண்டு இருந்தோம். ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களில் எம்மைப் பின்தொடர்ந்து வந்த பயங்கரவாதிகள் நான் வரும்வரை காத்திருந்திருக்கின்றனர். நான் வெளியில் வராததால், மில்ஹானும், காலிதும் உள்ளே வந்து இருக்கின்றனர். அப்பொழுதுதான் நாமும் வெளியே வருகின்றோம். நான் ஷூவை அணிவதற்காக அங்கே அமர்ந்த நேரத்தில் இருவர் ஸர்மிளாவிடம் வந்து எதோ பேசியதை அவதானித்தேன், எனினும் அதனை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் சென்றதும் ஸர்மிளா அவர்கள் குறித்து என்னிடம் சந்தேகம் வெளியிட்டார், எனினும் நான் அதனை அப்பொழுது பெரிதாக பொருட்படுத்தவில்லை.
அங்கிருந்து சென்ற மில்ஹான், தாம் கண்டது ஸர்மிளா ஸெய்யித் என்றும், அவர் ஒரு முன்னாள் முஸ்லிம், கொல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் உள்ளவர், அவர் நமக்கு கிடைத்துவிட்டார் என்றும் சொல்லி இருக்கின்றான்.
வந்தவர்கள் ஸர்மிளாவிடம் மஞ்சள் தூள் கேட்டு இருக்கின்றனர், ஸர்மிளாவின் மந்த்ரா நிலையத்தில் 50, 200 கிராம் எடைகளில் மட்டுமே மஞ்சள் தூள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தனது சகோதரி மந்த்ரா தயாரிப்பையே பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, தான் ஒரு கிலோ வாங்கிச் செல்ல வந்ததாகவே மில்ஹான் சொல்லி உள்ளார், இதுவே ஸர்மிளா வந்தவர்கள் குறித்து சந்தேகம் கொள்ள காரணமாக அமைந்திருந்தது. எனினும் அவர்கள் கைதாகி, விசாரணைகளில் இதனை தெரிவிக்கும் வரை ஸர்மிளாவிற்கோ, எனக்கோ வந்தவர்கள் யார் என்பது தெரிந்து இருக்கவில்லை.
மந்த்ராவில் இருந்து நாம் கார்களில் வெளியேறிய பொழுது அவர்களயும் எம்மை பின் தொடர்ந்து இருக்கின்றார்கள். ஒரு இடத்தில் காரில் இருந்து தனியாக இறங்கி, நான் பஸ்ஸில் ஏறினேன், அவர்களில் மில்ஹாஹும், சாதிக் அப்துல்லாஹ் ஹக்கும் பஸ்ஸில் எனக்கு முன்னும் பின்னும் ஏறி உள்ளனர். கபூர் மாமாவும், காலிதும் மோட்டார் சைக்கிள்களில் பஸ்ஸை பின்தொடர்ந்து உள்ளனர். பஸ்ஸில் இருந்து இறங்கி நான் உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு அன்று சென்று இருக்கின்றேன், அந்த வீடு வரை நால்வரும் என்னை பின்தொடர்ந்து இருக்கின்றார்கள். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து உறவினர் வீடு வந்து சேரும்வரை எல்லா இடங்களிலும் அதிக மக்கள் நடமாட்டம் இருந்த காரணத்தால் அவர்களால் என்னை கொலை செய்ய முடியாமல் போயுள்ளது. வவுனதிவில் இரண்டு போலிஸ் அதிகாரிகளை கொலை செய்தமை, மாவனல்லையில் தஸ்லீம் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியமை ஆகியவற்றை எவ்வித தடயங்களும் இல்லாமல் செய்தது போன்றே என்னையும் கொலை செய்ய முயன்று இருக்கின்றார்கள், எனினும் அது அன்றைய தினம் சாத்தியப்படாமல் போயுள்ளது.
உறவினரது வீட்டை எனது வீடு என்று அவர்கள் கருதியதால் மீண்டும் ஒரு முறை அவர்களால் என்னை தனிமையில் கண்டுகொள்ள முடியாமல் போயுள்ளது. இந்த விடயத்தை குறித்த உறவினருக்கு தெரிவித்த பொழுது, கடந்த வருட இறுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் தலைக்கவசத்தை கழட்டாமல், கையில் பொருள் ஒன்றுடன் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் பெற்றுக்கொண்ட விடயங்கள், ஸர்மிளாவிடம் உறுதிப்படுத்திய நிகழ்வு மற்றும் குறித்த தினத்தில் எனது செயற்பாடு குறித்த ஞாபகங்கள் ஆகியவற்றில் இருந்து தொகுத்து இதனை எழுதி இருக்கின்றேன்.
- றிஷ்வின் இஸ்மத்- June 04, 2019
Post a Comment