Header Ads



காத்தான்குடி மக்கள் பயங்கரவாதிகளா...?

- எம்.எஸ்.எம்.நூர்தீன் -

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக பார்க்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஸஹ்றான் காசிமும் அவரின் சகாக்கள் சிலரும் செய்த மிகவும் மிலேச்சத்தனமான செயலினால் இவ்வாறு பார்க்கப்பட்டு வருகின்றது. கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடாத்திய ஸஹ்றானும் அவரின் ஒரு சில சகாக்களும் காத்தான்குடி என்பதால் காத்தான்குடி மீதான வீச்சு அதிகரித்துள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு என்பது 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக்; கொண்டதாகும். இங்கு 13000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 57000 பேர் வசிக்கின்றனர். வர்த்தகத்துறைக்கு பிரசித்தி பெற்ற நகரான காத்தான்குடியைச் சேர்ந்த பலரும் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.

வர்த்தக ரீதியாக இலங்கையில் பல இடங்களிலும் தமது தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் சன அடர்த்தியாக வாழும் ஒரு நகரமாகவும் இஸ்லாமிய கலாசார விழுமியங்களைக் கொண்ட நகராகவும் காத்தான்குடி எப்போதுமே திகழ்ந்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் நகரமாக திகழும் காத்தான்குடியையும் காத்தான்குடி மக்களையும் தேசியத்திலும் சர்வதேசத்திலும் பலராலும் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்ற ஒரு நிலை இன்று உருவாகியிருப்பதானது காத்தான்குடி மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
பிரயாணத்தில் காத்தான்குடி என்றால் ஒரு முறைக்கு பல முறை தேசிய அடையாள அட்டைகளை பரிசோதனை செய்வதும் காத்தான்குடி முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நடவடிக்;கைகளை திட்டமிட்டு முடக்க அல்லது மலினப்படுத்த முற்படுவதும் காத்தான்குடியின் பெயரை கலங்கப்படுத்த முயற்சிப்பதும் இதன் மூலம் இன்று அரங்கேறி வருகின்றன.

காத்தான்குடி மக்கள் நாட்டின் பிரிவினைக்கு எதிரான யுத்தத்தில் பங்காற்றியுள்ளார்கள் . கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது காத்தான்குடி முஸ்லிம் மக்கள் இந்த தேசியத்தின் பக்கம் தமது ஆதரவை வழங்கி வந்தார்கள்.

இந்த 30 வருடகால யுத்த காலத்தின் போது கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியின் இருப்பு என்பது முழு கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கும் ஒரு முக்கிய விடயமாக காணப்பட்டது.
காத்தான்குடி முஸ்லிம்கள் கடந்த யுத்த காலங்களில் மிக இக்கட்டான, துன்பகரமான நிலைகளின் போதும் கூட இந்த நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். அன்று காத்தான்குடி முஸ்லிம் மக்களை எழுப்பி அனுப்ப முற்பட்ட போதெல்லாம் பல்வேறு நெருக்கடியான சவால்களை காத்தான்குடி சந்தித்துள்ளது.

இந்த வகையில் தான் 03.08.1990 அன்று காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டவர்களை தமிழீழ விடுதலைப்புலிப்பயங்கரவாதிகள் துப்பாக்கித்தாக்குதல் நடாத்தி படுகொலை செய்தார்கள்.

இதில் 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 60க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதே போன்று காத்தான்குடியைச் சேர்;ந்த பலரும் பல இடங்களிலும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். 1990ம் ஆண்டு புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பும் போது குருக்கள் மடத்தில் வைத்து நூற்றுக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு காத்தான்குடி மக்கள் தமது உயிரை இழந்து இந்த தேசத்தின் விடிவுக்காக உழைத்துள்ளார்கள் பிரிவினை வாதத்துக்கு எதிராக செயற்பட்டுள்ளார்கள் என்ற வரலாற்றை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தேசிய நல்லிணக்கத்துக்காகவும் தேசிய பாதுகாப்புக்காகவும் தேசத்தின் இறைமைக்காகவும் காத்தான்குடி மக்கள் உழைத்தே வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஸஹ்றான் எனும் பயங்கரவாதியின் தலைமையில் இலங்கையின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னர் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் மீது சிலர் பயங்கரவாத முத்திரை குத்துகின்றனர்.
உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் ஸஹ்றானை காத்தான்குடியிலுள்ள முழு மக்களுக்கும் தெரியாது.
ஸஹ்றான் காசீம் 2012ம் ஆண்டு காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பை தோற்றுவித்து இஸ்லாமிய மார்;க்க பிரச்சார நடவடிக்கைகளிலே ஈடுபட்டு வந்தார்.
ஸஹ்றான் தனக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்லது தனது கொள்கைக்கு ஆட்களை அணி திரட்டுவதற்காக காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மார்க்க முறண்பாட்டாளர்கள் என்;று கூறப்படுகின்றவர்களை விமர்சனம் செய்வதையும் தனக்கு பிடிக்காத தன்னுடைய கொள்கைக்கு ஆதரவில்லாதவர்களையும் பகிரங்கமாக மேடை போட்டு விமர்சித்தும் வந்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி என்பவரையும் அவரது மார்க்க ரீதியான கருத்துக்கள் தொடர்பிலும் அதிகமாக விமர்சித்து வந்ததுடன் சஊதி அரேபியாவில் மார்க்க கல்வி கற்ற காத்தான்குடி உலமாக்கள் உட்பட பல உலமாக்களையும் விமர்சித்து வந்ததுடன் சில சமூகப் பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்பவற்றையும் விமர்சனம் செய்து வந்தார்.

இவ்வாறு பிரச்சாரம் செய்து வந்த ஸஹ்றான் புதிய காத்தான்குடி 3ம் குறிச்சி கடற்கரையை அண்மித்த பகுதியில் தனக்கென ஒரு பள்ளிவாயலையும் உருவாக்கிக் கொண்டார். இவரது நடவடிக்கையில் பாரிய சந்தேகம் காணப்பட்டதால் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கவில்லை. காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இவரது விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட்டு வந்தன.

இவரோடு எந்த உறவையும் காத்தான்குடியிலுள்ள இந்த நிறுவனங்கள் வைத்துக் கொள்ளவில்லை. அதே போன்று உலமாக்கள் சமூகப் பிரமுகர்கள் எவரும் இவருடனோ அல்லது இவர் சார்;ந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடனோ தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்ப வில்லை.
இவரின் மூளைச் சலவையினால் ஒரு சில இளைஞர்கள் இவருடன் செயற்பட்டு வந்தார்கள்.

இவ்வாறு இவரது பிரச்சார நடவடிக்கைகளில் 2016ம் ஆண்டு காலப்பகுதியில் மாற்றம் ஏற்பட்டதை பலரும் அவதானித்துள்ளார்கள். இலங்கையின் தேசியத்திற்கு எதிராக பேசி இளைஞர்களை உனர்ச்சியூட்டும் வகையிலும் உரையாற்றி வந்ததுடன் ஐ.எஸ்.எஸ்க்கு ஆதரவாகவும் உரையாற்றி வந்தார்.

இதன் போதுதான் காத்தான்குடி மக்களையும் காத்தான்குடி இளைஞர்களையும் விழிப்பூட்டும் வகையில் அஹ்லுஸ் ஸுன்னா என்ற உலமாக்கள் அமைப்பினால் மௌலவி முபாறக் மதனீ தலைமையில் 03.02.2017 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஐ.எஸ்.எஸ் என்ற அமைப்பு இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டது. அது உலகத்தில் ஒரு கொலைகாரக் கூட்டம் என்ற அடிப்படையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டு அந்த மாநாட்டின் இறுதியில் பிரகடனமும் வாசித்து நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டு தீர்;மானங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டன.

இதையடுத்து 17.02.2019 சஹ்றான் ஒரு மாநாட்டை நடாத்தினார் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடாத்திய இந்த மாநாட்டில் ஸஹ்றான் ஆற்றிய உரையே அவரின் பகிரங்கமான கடைசி உரையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த உரையில் அவர் ஐ.எஸ்.எஸ் க்கு ஆதரவாக உரையாற்றியதுடன் அவரின் அந்த உரை இலங்கையின் இறைமைக்கு எதிராகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுமே இருந்துடன் ஐ.எஸ்.எஸ் என்ற அமைப்பு இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டது என ஏற்கனவே மாநாட்டை நடாத்திய உலமாக்களையும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். அவரின் இந்த உரையையடுத்து அவர் பாதுகாப்புத் துறையினரால் கைது செய்யப்படுவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அப்போது பலரிடமும் இருந்தது.

இதையடுத்து காத்தான்குடியிலுள்ள முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் புத்தி ஜீவிகள் என்போருக்கு இவர் மீதான சந்தேகங்கள் வலுப் பெறத்தொடங்கியது. இதனையடுத்து ஸஹ்றான் புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் 10.03.2017 அன்று மாலை ஒரு பகிரங்க கூட்டமொன்றை நடாத்தவிருந்த வேளை மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி தரப்பினரான சூபி முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கும் சஹ்றானின் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி வன்முறையாக வெடித்தது.

இதில் ஸஹ்றானின் தந்தை சகோதரன் உட்பட தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.இதன் பிரதான சந்தேக நபராக ஸஹ்றான் காசீம் தேடப்பட்டு வந்தார்;. இதன் பின்னர் ஸஹ்றான் தலை மறைவாகினார்.

இதையடுத்து 13.03.2017 அன்று ஸஹ்றானை கைது செய்யுமாறும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தை தடை செய்யுமாறும் கோரி காத்தான்குடி முஸ்லிம் மக்கள் என்ற பதாதைகளுடன் காத்தான்குடி சூபி முஸ்லிம்கள் எனப்படுவோர் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள பூர்வீக நூதன சாலைக்கு முன்பாக ஒரு பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்ட செய்திகளும் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டன.

பின்னர் சஹ்றான் எங்கிருக்கின்றார் உள் நாட்டில் இருக்கின்றாரா அல்லது வெளி நாட்டில்; இருக்கின்றாரா என்பது பற்றியெல்லாம் காத்தான்குடி மக்களுக்கு தெரியாது. நாட்டின் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக ஸஹ்றானும்  அவரது குழுவும் அமைவதாகவும் அவரின் அத்தகைய தீவிரவாத சிந்தனையுள்ள பேச்சுக்கள் அடையாளம் காணப்பட்டபோது பாதுகப்பு அதிகாரிகளுக்கு அவை குறித்து காத்தான்குடியிலிருந்து தெரிவித்து எத்தனையோ முறைப்பாட்டு மனுக்கள் பல பொறுப்புவாய்ந்த சமூகத்தின் முக்கியஸ்தர்களால் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

21.04.2019க்கு முன்னர் ஸஹ்றானும் அவரது கும்பலும் பயங்கரவாதிகள் இவர்களை கைது செய்ய உதவுமாறு அறிவித்திருந்தால் காத்தான்குடி முஸ்லிம் மக்களோ அல்லது இலங்கை முஸ்லிம்களோ இந்த பயங்கரவாத கும்பலை பாதுகாப்புத்துறையினருக்கு பிடித்துக் கொடுத்திருப்பார்கள். அல்லது அவர்களின் வசிப்பிடங்களை அவர்களின் நடவடிக்கைகளை தேடிக்கண்டு பிடித்து பாதுகாப்புத்துறையினருக்கு அறிவித்திருப்பார்கள்.

இந்த சம்பவங்களின் பின்னர் பபயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை வழங்கியதுடன் சிலரை கைது செய்யவும் பாதுகாப்புத்துறையினருக்கு உதவினார்கள். அரசியல் வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை விசாரணைகளுக்கும் தேடுதல்களுக்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை காத்தான்குடி மக்கள் வழங்கினார்கள்.  காத்தான்குடியின் பிரதான அரசியல் வாதியான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது ஆளுநர் பதவியை துறந்தார்.

பிரதிப் பொலீஸ் மா அதிபர் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை என கூறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டிய ஒன்றாகும்.

சமூகங்களுடன் நல்லுறவை மீள ஏற்படுத் துவதில் தாமதமின்றி காத்தான்குடி சிவில் சமூக நிறுவனங்கள் செயற்பாட்டார்கள் காத்தான்குடி அதன் வரலாற்றின் எந்தக் கட்டத்திலும், எவ்வகையான தீயசக்திகளை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ இல்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக ஒரு போதும் செயற்பட்டதில்லை.

1 comment:

  1. மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பார்கள். அவர்களை வழிநடத்தும் மார்க்கங்கள் வன்முறையைப் போதிப்பது மிகவும் தவறு. உலகில் தீவிரவாதத்தை தூண்டுபவர்கள் இவர்கள், அவர்கள் என்று அடுத்தவர்கள் மேல் பழி போட்டுக் கொண்டாலும், பெரும்பான்மையாக தீவிரவாதிகளாக மாற்றப்படுபவர்கள், ஏன் இஸ்லாமியர்கள் ஆகவே இருக்கிறார்கள்? எவ்வாறு என் குர்ஆனும் ஹதீஸ்களும் மனிதர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன? ஏன் அத்தகைய செயலுக்கு அவை இடம் கொடுக்கின்றன? உண்மையிலேயே அவற்றில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் படிப்பினைகள் இருக்கின்றனவா? அப்படி இருக்குமாயின், எவ்வாறு அன்பே உருவான கடவுள் அவற்றை கொடுத்திருக்க முடியும்? என்பன போன்ற கேள்விகளுக்கு நமது காதுகளையும், கண்களையும், இதயங்களையும் மூடி கொள்வதாலேயே இத்தகையான இக்கட்டான சூழ்நிலைகள் நமக்கு ஏற்படுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.