தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய உண்மைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றது - மெல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய உண்மைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் தகவல்களை உதாசீனம் செய்த காரணத்தினால் இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தாக்குதல் தொடர்பில் பாரதூரமான பொறுப்பு துறப்பில் ஈடுபட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனித பாப்பாண்டவரை சந்திப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக கர்தினால் இந்த கருத்துக்களை ஊடகத்திற்கு வெளியிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தின் பொறுப்பு யாருடையது என்பதனை அறிந்து கொண்டே தற்பொழுது அரசாங்கம் பல்வேறு குழுக்களையும் ஆணைக்குழுக்களையும் நிறுவி விசாரணை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி முதல் தடவையாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் பற்றி எச்சரித்திருந்தனர் எனவும், இறுதியாக சம்பவம் இடம்பெற்ற தினத்தில் காலை 6.45 மணிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல் எச்சரிக்கை குறித்து எந்தவொரு தரப்பினரும் உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒவ்வொரு தரப்பினரும் தங்களது பக்கம் தவறு இல்லை என்பதனை நிரூபிக்கவே முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல் தொடர்பிலான காணொளியொன்றை பாப்பாண்டவருக்கு கர்தினால் சமர்ப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment