ஐதேக வேட்பாளரின் பெயரை அறிவித்ததும், ராஜபக்ஷ சகோதரர்களுக்கு ஓடவேண்டி வரும்
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கம்பளை மாவில தோட்டத்தில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து அவர், மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தினால் இந்த நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஜனாதிபதி கருதுகிறார்.
உலகம் இன்று முன்நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனவே, நாம் பின்நோக்கி பயணித்து பல வருடங்களுக்கு முன்பிருந்த பழைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. எனவே, ஜனாதிபதியின் இந்த தீர்மானம் பொருத்தமான தீர்மானமாக அமையவில்லை.
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படும்.
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். அவரின் பெயரை அறிவித்ததும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களுக்கு ஓடவேண்டிய நிலைமையே ஏற்படும்.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சட்டமே 18 ஆவது திருத்தச்சட்டமாகும். மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் நீடித்திருந்தால் நாட்டுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
எனினும், 19 ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். அரச பொறிமுறை மற்றும் நிர்வாகத்தில் சுயாதீனத்தன்மை நீடிக்கின்றது.
ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி அதை நாம் முறியடித்தோம்.
எனவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் ஆட்சியைக்கவிழக்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலையில்தான் ஜனாதிபதி இப்படி 19 இற்கு எதிராக திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கண்டி நிருபர் ராஜ்)
Post a Comment