'அடையாளங்களை' இழந்து, கேள்விக்குறியாகும் இலங்கை முஸ்லிம்ககளின் எதிர்காலம்..!
பாரம்பரியத்தினூடு இன்றைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்ட இன, மத, கலாசார அடையாளங்களை இழப்பதானது நமது வரலாற்றின் பக்கங்களை நாமே கிழித்தெறிவதைப் போன்றதாகும். இலங்கை முஸ்லிம்கள் நிகழ்காலத்தில் அவ்வாறான ஒரு நெருக்கடி நிலையையே எதிர்கொண்டிருக்கின்றனர்.
தனித்துவ அடையாளங்களைக் கொண்ட இஸ்லாமியனாகவோ அல்லது முஸ்லிமாகவோ அன்றி, ‘இரண்டும்கெட்டான’ நிலைக்குள்ளான ஒரு ‘கலப்பு சமூக விலங்காக’ வாழ்வதற்கான நிர்ப்பந்தங்கள், தெட்டத் தெளிவாக முஸ்லிம்கள் மீது தவணை அடிப்படையில் பிரயோகிக்கப்படுகின்றன.
ஒப்பீட்டளவில் நோக்கினால் ஒரு சாதாரண விடயமான துருக்கித் தொப்பிக்காக முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் போராடிய ஒரு இனக்குழுமம் இன்று பள்ளிவாசல்களுக்காக, ஹலால் உணவுக்காக, முஸ்லிம் பெண்களின் ஆடைக்காக, அரபுமொழிப் பயன்பாட்டுக்காக மற்றும் இன்னபிற அடையாளங்களுக்காக குரல்கொடுக்கத் திராணியற்ற ஒரு இனக் குழுமமாக ஆக்கப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்களின் பொறுமையின் மீதும் விட்டுக்கொடுப்பின் மீதும் இனவாத மற்றும் பெருந்தேசிய சக்திகள் யாகம் வளர்க்கின்றன. இஸ்லாத்தின் பெயர்தாங்கிய பயங்கரவாதத்தினை எதிர்கொள்ளல் என்ற தோரணையில் திரைக்குப் பின்னால் கடும்போக்கு சக்திகள் குறிப்பிட்ட பணித்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இணைந்து பணியாற்றுகின்றன.
காவி அரசியல்
இவை எல்லாவற்றுக்கும் பின்னால் பெரும் அரசியல் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்பாவித்தனமான முகத்தை காட்டுகின்ற, ஒன்றுமறியாத அம்மாஞ்சியாக தென்படுகின்ற நவீன அநகாரிக தர்மபாலக்களும் பண்டாரநாயக்ககளும் நம்மிடையே இருக்கின்றார்கள். கடும்போக்கு இனவாதத்தை விட மென் இனவாதம் அதலபாதளம் வரை பாய்ந்து செல்கின்றது என்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மல்யுத்தம் பார்த்து ரசிப்பவர்களைப் போல புதினம் பார்த்துக் கொண்டிருக்க, மறைமுகமாக பௌத்த துறவிகளே இப்போது நிழல் ஆட்சியை நடத்துகின்றார்களா என்ற வினா எழுந்துள்ளது. முஸ்லிம்கள் மீது காவிகள் ஏவி விடப்படுவதை காண முடிகின்ற சமகாலத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான எல்லா நகர்வுகளிலும் பௌத்த பிக்குமார் மூக்கை நுழைக்கின்றனர் அல்லது அந்த நகர்வுகளுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மறுபக்கத்தில், பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்களாகவும் அவர்களுக்கு சாமரசம் வீசுபவர்களாகவும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் பலமிழந்து நிற்கின்றது. வழக்கம் போல, எதிலோ மழைபெய்வது போல என்ன நடந்தாலும் கணக்கெடுக் காமல் அல்லது யாராவது பார்த்துக் கொள்ளட்டும் நமக்கேன் வீண்வம்பு என்று தமது வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகம் எதையெல்லாம் இழக்குமோ, அதையெல்லாம் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
துருக்கி தொப்பி எழுச்சி
1905ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த சீ.பி. லெயாட் ஒருநாள் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்லிம் சட்டத்தரணியான எம்.சி.ஏ. காதர், துருக்கித் தொப்பி அணிந்தவராக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சார்பாக வாதிட எழுந்தார். அதைக் கண்ட நீதிபதி, துருக்கித் தொப்பி யணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகுவதன் மூலம் நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறிய நீதிபதி, அவ்விதம் வாதாடுவதை ஆட்சேபித்தார்.
ஆனால், துருக்கித் தொப்பியணிந்து ஆஜராகுவதன் மூலம், எதுவித அவமதிப்பையும் புரிவதற்கு நான் எண்ணவில்லை. இது எனது மதத்துக்கமைய பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும் என்று சட்டத்தரணி காதர் விளக்கமளித்தார். அத்துடன் இதனை அணிவது தனது உரிமை என்று கூறி தொப்பியை கழற்ற மறுத்ததால் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்தே வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தொப்பிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அறிஞர் அஸீஸ் போன்றோர் இதற்காக முன்னின்றதுடன் மாக்கான் மாக்கார் உள்ளிட்ட 21 முஸ்லிம் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய துருக்கித் தொப்பி போராட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டதுடன், சுமார் 30 நகரங்களில் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த சாத்வீகப் போராட்டத்தின் இறுதிக் கூட்டமும் பேரணியும் மருதானை சாஹிரா கல்லூரி மற்றும் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது. இதன் வெற்றியாக, முஸ்லிம் சட்டத்தரணிகள் தொப்பியணிந்து மன்றில் ஆஜராக முடியும் என்ற விடயம் சட்டமாக்கப்பட்டது.
இவ்வாறுதான் முஸ்லிம்களின் கலாசார அடையாளங்களும், இன மத உரிமைகளும் தக்கவைக்கப்பட்டன. சாத்வீக, ஜனநாயக முன்னெடுப்புக்கள் மூலமே குறைந்த இழப்புக்களுடன் உரிமைகளை பெற முடியுமே தவிர, சஹ்ரான் கும்பல் மேற்கொண்டது போன்ற முட்டாள்தனமான குண்டுத்தாக்குதல்களால், வன்முறையால் அதைச் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அக்காலத்தில் துருக்கித் தொப்பி அணிவது என்பது ஒரு சாதாரண விடயமாக பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று முஸ்லிம் பெரியார்கள் அதை அவ்விதம் பார்க்கவில்லை. ஏனெனில் உண்மையில் இது தொப்பிக்கான போராட்டம் அல்ல. முஸ்லிம்களின் மத அடையாளத்தையும் அடிப்படை உரிமையையும் உறுதிப்படுத்துவதற்கான மக்கள் கிளர்ச்சியாகவே அமைந்தது.
இப்போது தொப்பியை இழக்க சம்மதித்தால், நாளை இன்னுமொரு அடையாளத்தை, உரிமையை பறிப்பதற்கான சூழல் கட்டமைக்கப்பட்டு விடும் என்ற யதார்த்தத்தை அன்றைய முஸ்லிம் தலைமைகள் தெளிவாக விளங்கிக் கொண்டார்கள். ஆனால், இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது? முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்கள் எவ்வாறு பறித்தெடுக்கப்படுகின்றன?
பின்புலக் காரணங்கள்
இலங்கை முஸ்லிம்கள் முற்காலத்தில் இருந்து நாட்டுப் பற்றாளர்களாகவும் ஆட்சியாளர்களுக்கு துணை நிற்பவர்களாகவும் இருந்தமை உள்ளிட்ட பல பின்புலக் காரணங்களால், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கணிசமான வரப்பிரசாதங்கள் கிடைத்தன என்பதை மறுதலிக்க முடியாது. தமது இனத்துவ நெருக்கடிகள், சிவில் யுத்தம் என பல சவால்கள் ஏற்பட்டாலும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றவும், இன, மத அடையாளத்தை வெளிப்படுத்தவும் இந்நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தனித்தியங்கிய இனவாதமானது பின்னர் அரசியலுக்குள் இரண்டறக் கலந்தது. உள்நாட்டு இனவாத சக்திகளுடன் பிராந்திய கடும்போக்கு அமைப்புக்களும் முஸ்லிம்களின் பரம விரோதிகளும் கைகோர்த்தனர். சேவைகளையும் கொள்கைகளையும் மட்டும் காண்பித்து சிங்கள வாக்குகளை பெற முடியாத, ஆனால் முஸ்லிம் வாக்குகளை கிள்ளுக்கீரையாக பயன்படுத்துகின்ற வங்குரோத்து பெருந்தேசியக் கட்சிகளை ஆட்டுவிக்கும் மந்திரமாக இன்று இனவாதம் உருவெடுத்திருக்கின்றது.
மறுபுறத்தில், முஸ்லிம்களுக்குள் புதுப்புது இயக்கங்கள், மார்க்கக் கொள்கைகள், அமைப்புக்கள் முளைத்திருப்பதுடன் இவற்றுள் ஒருசில அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் பல்லின நாடொன்றுக்கு பொருத்தமற்ற நடைமுறைகளை இறக்குமதி செய்துள்ளன. இதனால் சில முஸ்லிம்களின் செயற்பாடுகள் ஒரு அரபு தேசத்திலான நடவடிக்கை போல பிறரால் அவதானிக்கப்படுகின்றது.
சமகாலத்தில், அத்துடன் இஸ்லாமோபோபியா தாக்கத்திற்குள்ளாகியுள்ள மனநோயாளி தேசங்கள் சில இலங்கை முஸ்லிம்கள் மீதும் ஒருகண் வைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இந்த மாற்றங்களே இலங்கையின் நிகழ்கால முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள புதுப்புது நெருக்கடிகளுக்கு வித்திட்டுள்ளது. கண்கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முஸ்லிம் அரசியல், சமய, சமூகத் தலைவர்கள் பிரயாசைப்படுவதால், முஸ்லிம்களின் உரிமைகள், அடையாளங்கள் இழக்கப்படுவதை தடுக்க முடியாது போயுள்ளது.
ஹலால் முதல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஹலால் உணவுக்கு எதிராக கடும்போக்கு இயக்கங்கள் போர்க்கொடி
தூக்கின. ஹலால் என்பது (இஸ்லாத்தின் பார்வையில்) தூய்மையான உணவு என்று இருக்கையில், எமக்கு எதற்காக ஹலால் உணவு என்று விதண்டாவாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் ஹலால் சான்றிதழ் விநியோக முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதுடன், முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு கிடைப்பதற்கான உரிமையையும் பகுதியளவில் இழந்திருக்கின்றனர் என்றே கூற வேண்டும்.
பின்னர் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கி தீ வைக்கப்பட்டன. முஸ்லிம் பெரியார்களின் அடக்கஸ்தலங்களில் வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது என்ற கடுப்பில், உள்ளக மாற்றுக் கருத்தாளர்களாலும் அதேபோல் வெளிப்புறச் சக்திகளாலும், வரலாற்று தொன்மையைக் கூறும் அடையாளங்களான இவ்விடங்கள் சிதைக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன.
பிறகு அபாயா பிரச்சினை மேலெழுந்தது. ஆரம்பத்தில் திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா எனும் கலாசார அடையாளத்தையுடைய ஆடையை அணிந்துவர அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவ்விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், முஸ்லிம் பெயர்தாங்கிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து நெருக்கடிகள் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. முஸ்லிம்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்களே என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. முஸ்லிம்களின் வேறுபல அடையாளங்களையும், புதுப்புது கோணங்களில் இருந்து பறித்தெடுக்க பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதைக் காண முடிகின்றது.
அந்தவகையில் முஸ்லிம் பெண்கள் தலையுட்பட முழு உடம்பையும் மறைத்து அணியும் நிகாப் மற்றும் புர்காவுக்கு எதிரான தடை கொண்டு வரப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் யாரை நம்புவது என்ற ஐயப்பாடு ஏற்பட்டிருந்த சூழலில் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் புர்கா, நிகாப் தடை கொண்டு வரப்பட்டமை அவசியமானதே.
அதன்பிறகு, அரபு எழுத்துக்கள் பற்றிய அச்சமொன்று ஊட்டப்பட்டு வருகின்றது. அரபு என்பது உலகிலுள்ள 6500 மொழிகளில் ஒன்று என்று கருதாமல், சில பயங்கரவாதிகளின் மொழியும் அரபாக இருக்கின்ற காரணத்தினால் கிட்டத்தட்ட அரபு பயங்க ரவாதத்தின் மொழி போல பார்க்கப்படுகின்ற பிற்போக்குத்தனம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களும் அல்லர். கணிசமானோருக்கு அது தாய் மொழியும் இல்லை. எனவே அன்றாட வாழ்வுக்கு அரபு அத்தியாவசியம் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அரபுதான் இஸ்லாத்தின் போதனை மொழி என்ற அடிப்படையில் அதுவும் முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளமாகும். ஆனால், இன்று அவ்வடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றோம்.
இலங்கையில், மும்மொழிக் கொள்கை அமுலில் உள்ளது. அதற்காக தனியான அமைச்சும் உள்ளது. ஆனால், இன்றும் முக்கிய அரச அலுவலகங்களில் உயர் பதவியில் இருப்போருக்கு தமிழ் தெரியாது. எனவே, இன்றும் கூட தேசிய அடையாள அட்டை போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது ஒருசில ஆவணங்களின் மொழி பெயர்ப்பை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனையெல்லாம் சீர்செய்யாது, சம்பந்தப்பட்டோர் அரபு மொழியை நீக்குவதற்கு நேரம் செலவழிப்பது விநோதமானதே.
அபாயாவுக்கு தடை
இப்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப் பெரிய நெருக்கடி அரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் தங்களது கலாசார ஆடையை அணிந்து செல்வதற்கான உரிமை மறுக்கப்படும் விதத்தில், பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய சுற்று நிரூபம் ஆகும். இதுவே இன்று முஸ்லிம் அரசியல், சமூக அரங்கில் மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
பொது நிர்வாக அமைச்சு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆடை ஒழுங்கு சம்பந்தமான புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டது. இதில், அரச அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சாரி (புடைவை) அல்லது ஒசரி வகை புடைவை அணிவது கட்டாயம் என்று 1ஆவது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உப பிரிவு 4 இவ்வாறு கூறுகின்றது.- இதற்கு மேலதிகமாக தங்களது கலாசார அடையாள ஆடையை யாராவது அணிய விரும்பினால், மேலே 1 இல் குறிப்பிடப்பட்ட ஆடையை (புடைவை அல்லது ஒசரி) அணிந்து அதற்கு மேலதிகமாக தங்களது கலாசார ஆடை ஒன்றை அணிய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி அரச அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் புடைவை உடுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அபாயா அல்லது ஸ்காப், பர்தா அணிய விரும்பினால் அதில் ஒன்றை அணிந்து கொள்ளலாம். இந்த சுற்றுநிரூபத்தின்படி, புடைவைக்கு மேலால் அபாயாவும் பர்தாவும் அணிய முடியாது என்று சட்டம் அறிந்தோர் கூறுகின்றனர். இந்நிலையில் புடைவையுடன் அபாயாவை மட்டும் அணிய முடியாது என்றபடியால் புடைவைக்கு பர்தாவும் அல்லது புடைவையும் ஸ்காபும் அணியும் நிர்ப்பந்தம் ஏற்படும்.
இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து இச் சுற்றறிக்கையை வாபஸ் பெற்று, திருத்தி சுற்றறிக்கை வெளியிடுவதாக பிரதமரும் அவரது அலுவலகமும் அறிவித்திருந்தனர். ஆனால், அதிகாரமுள்ள அதிகாரிகள் பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதாலோ அல்லது அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாலோ இன்னும் மேற்படி சுற்றறிக்கை மீளப் பெறப்படவில்லை. இந்நிலையில், புடைவையை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை அமுல்படுத்துமாறு பொதுநிர்வாக அமைச்சு பிரதேச செயலகங்களுக்கு தற்போது அறிவித்துள்ளது.
இதனால் இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரச அலுவலகங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவ அடையாளத்தை இழந்து, வேறு உடைகளை அணியும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆடை அணிவது என்பது அவரவர் உரிமையாகும். நாகரிகத்தின் வளர்ச்சி என்பது மனிதன் நிர்வாண நிலையிலிருந்து உடம்பை மறைக்க தொடங்கியதாகும். அப்படியாயின் (முகத்தை மூடாத) அபாயா போன்ற ஆடைகள் உயரிய நாகரிகத்தைக் கொண்டவையாக கருதப்பட வேண்டும். ஆனால், ஏதோ காரணத்திற்காக இன்று அரச அலுவலகங்களில் அபாயாவுக்கு தடை வருமானால், இன்னும் சில நாட்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களிலும் அபாயா உடுத்த முடியாது போகலாம் என்பதை மறந்து விடக்கூடாது.
ஏ.எல்.நிப்றாஸ்
What SLTJ and NTJ doing is to destroy Muslims historical symbol which prove the existence Muslims for thousand of years. They want to destroy all the symbol of Muslims including the wearing the cap too. TJes are not wearing the cap. For that they well paid.They are doing it in the name original Islam.
ReplyDeletethese TJes(Thaliban) in Afghanisthan angered the Buddhist world by destroying the Bamian buddha's statue.Pakistani Thaliban bombing Shrine of Islamic saint. recently they killed 35 Muslims in one the famous shrine in Pakistan. In Srilanka too they creating more problem for Muslims by joining with anti ?Muslim elements who want to destroy all the Muslims symbol.
நன்றி ஏ.எல்.நிப்றாஸ், சிறு சிறு விவாதங்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அடையாள நெருக்கடிகள்பற்றிய மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை.பொதுவாக வெளிவரும் பிரசார கட்டுரைகளைவிட இத்தகைய ஆய்வுக்கட்டுரைகள் சக இனங்களுக்கு கற்பிக்கிறதாக அமைகின்றன. வரவேறும் வாழ்த்துக்களும்
ReplyDelete