Header Ads



பள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்

ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்றுமாறு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் இன்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை தொடர்பில் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவரினால் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து குறித்த பிரச்சனை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பெரேரா மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் ஜயசுந்தர ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக பொலிஸாரின் குறித்த அறிவுறுத்தல் மீளப் பெறப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில்  ஏறாவூர் பள்ளிவாசல்கள்  சம்மேளனத்தினால் இன்று  சனிக்கிழமை  நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உடனடியாக பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்ட அவர் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டதுடன் , சட்டமாக்கப்படாத எந்த ஒரு விடயத்தையும் தற்துணிவின் அடிப்படையில் ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமுலாக்க முற்படுவது முறையான செயற்பாடு அல்ல எனவும் இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார் .

 அத்துடன் பள்ளிவாசல்களிலும் , வீடுகளிலும் அல் குர்ஆன் வசனங்களை வைத்திருப்பதை தடை செய்ய முற்படுவது மத நிந்தனை செயற்பாடாகவே உள்ளது , தேசிய மொழிக் கொள்கையின் பிரகாரம் அரச பொது இடங்களில் உள்ள வேற்று மொழியிலான  வாசகங்கள் அகற்றப்பட வேண்டும் என கூறப்பட்ட விடயத்தை தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை முன்னிலை படுத்தி  பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் , வாகனங்களிலும் உள்ள அல் குர்ஆன் வசனங்களை அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கும் பொலிஸாரின் செயற்பாடு முற்றாக நிறுத்தப்பட்டு இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் பள்ளிவாசல்கள் , வீடுகள் மற்றும் வாகனங்களில் காணப்படும் குர்ஆன் வசனங்களை அகற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பெரேரா மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் ஜெயசுந்தர ஆகியோரினால் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.