தமிழ் சின்னத்திரை நாடகங்களில் போன்று முட்டிமோதும் மைத்திரியும் ரணிலும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமது பதவி நிலையை மறந்து, போட்டி அரசியலில் ஈடுபடுவதானது நாட்டுக்கே பேராபத்தாக அமையும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கட்சி அரசியலைக் கைவிடுத்து எஞ்சியுள்ள காலப்பகுதியிலாவது நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி இருவரும் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பப்படும் தமிழ் சின்னத்திரை நாடகங்களில் காலை முதல் மாலை வரை மாமியும், மருமகளும் முட்டிமோதிக்கொள்வார்கள்.
வீட்டின் சாவிக்கொத்தை கைப்பற்றுவதற்கு மருமகளும், அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மாமியாரும் படாதபாடு படுவார்கள். இதனால் வீட்டில் நிம்மதி நிலைக்காது.
இதுபோல்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கிடையிலான நீயா, நானா என்ற அதிகாரப் போட்டியால் நாட்டில் அரசியல் குழப்பம் தலைதூக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாலர் வகுப்பு மாணவர்போல் செயற்பட்டு வருகின்றார். பிரதமரைக் கடுப்பாக்குவதற்காக அமைச்சரவையைக் கூட்டப்போவதில்லை என்றெல்லாம் உளறி வருகின்றார்.
நாடாளுமன்றமும், அமைச்சரவையும் ஜனாதிபதியினதோ அல்லது பிரதமரினதோ குடும்பச் சொத்து கிடையாது. நான் முன்னர் கூறியதுபோல் மாமிக்கும், மருமகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டால்கூட அதனால் இரண்டு குடும்பங்கள்தான் பாதிக்கப்படும்.
ஆனால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதலானது ஒட்டுமொத்த இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்குப் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பவர்கள் முற்படக்கூடாது.
ஒக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சி, 21/4 தாக்குதல் போன்றவற்றால் இலங்கையில் இன்னும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை. இதனால் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது.
இந்தநிலையில், இரு தலைவர்களுக்கிடையிலான முறுகலானது, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை மேலும் நீடிக்கச்செய்யும்.
ஆகவே, அதிகாரப் போட்டியைக் கைவிடுத்து, நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயற்பட முன்வருமாறு இருவர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
வரலாற்றில் நான் செய்த மிகப்பெரிய தவறு , இந்த நாய்க்கி ஓட்டு போட்டது
ReplyDelete