நாட்டை நாசமாக்கியவர்கள் ஜனாதிபதி தேர்தலில், களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள் - ரணில்
சர்வதேச ரீதியில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்களும், நாட்டை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள் எனவும், அவர்களை நாட்டு மக்களும், சர்வதேச சமூகத்தினரும் விரும்பமாட்டார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலாகும்.
எனவே, இந்தத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து நின்றே எதிர்கொள்ளும். கடந்த இரு தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பொது வேட்பாளர்களையே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்தது. ஆனால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளர் களமிறங்குவார்.
வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் என்று ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பொய்யானவை - தவறானவை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரின் பெயரை கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும்.
எதிரணியில் தான் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் நிலவுகின்றன. மீண்டும் குடும்ப ஆட்சிக்காக சிலர் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றை மட்டும் நாம் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
அதாவது, சர்வதேச ரீதியில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்களும், நாட்டை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள். அவர்களை நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள் சர்வதேச சமுகத்தினரும் விரும்பமாட்டார்கள். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை. கொடூர சர்வாதிகார குடும்ப ஆட்சியிலிருந்து இந்த நாட்டை நாம் மீட்டெடுத்தோம்.
பாரிய அபிவிருத்திப் பணிகளை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாம் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
அவர்களை பாதுகாத்த உங்கள் போன்ற பாவிக்கும் படுதோல்வி நிச்சயம்
ReplyDeleteNeengalum senthuthan!
ReplyDelete