18, 19 யும் ரத்துச்செய்ய வேண்டும் - பிரதமரும், நானும் இழுபறிப்படுவதாக பெரிய குற்றச்சாட்டு உள்ளது
நாட்டை சிறந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு 18 மற்றும் 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது மேலும் உரையாற்றுகையில்,
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டும். தற்போதைய அரசாங்கம் பழுதடைய பிரதான காரணம் 19வது திருத்தச் சட்டம். அந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால், அரசாங்கம் சிறப்பாக இருந்திருக்கும்.
பிரதமர் அவர்களே, தேசிய வீடமைப்பு அதிகார சபை 40வது ஆண்டை கொண்டாடுவது போல், எமது அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துள்ளது. தேர்தலுக்கு செல்ல இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்றன.
இதனால், இந்த நான்கரை ஆண்டுகளில் அரசாங்கம் என்ற வகையில் நாம் செய்தவை சரியா தவறா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய நேரம் வந்துள்ளது.
பிரதமரும் நானும் இரண்டு பக்கத்திற்கு இழுபறிப்படுவதாக நாட்டு மக்கள் மத்தியில் பெரிய குற்றச்சாட்டு உள்ளது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே இந்த இழுபறி நிலைமை உருவானது.
18வது திருத்தச் சட்டம் முழுமையான சர்வாதிகாரம் கொண்டது. அது பொருத்தமற்றது. 18வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவே நாங்கள் ஆட்சியமைத்தோம்.
எனினும் 19வது திருத்தச் சட்டம் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. ஒரு தலைவர் இல்லாத நிலைமை உருவானது. இந்த திருத்தச் சட்டத்தினால், ஜனாதிபதியும் பிரதமரும் இழுபறிப்படும் நிலைமை ஏற்பட்டது. இதனால், நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. 18வது திருத்தச் சட்டம் சர்வாதிகாரம் கொண்டது என்பது போல் 19வது திருத்தச் சட்டம் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.
19வது திருத்தச் சட்டம் காரணமாக ஏற்பட்ட நிலைமை காரணமாக நாடு அராஜக நிலைமைக்கு சென்றுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். 19வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால், இந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதனை வெற்றிகளை பெற்றிருக்க முடியும்.
எது எப்படி இருந்த போதிலும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அந்த திருத்தச் சட்டத்தை பாராட்டி பேசினார்.
அத்துடன் தான் நிறைவேற்று அதிகாரங்களை விட்டு கொடுத்ததை பெருமையாக கூறினார். இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை தன்னால் ஸ்தாபிக்க முடிந்தது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
Post a Comment