சவூதியினர் 172, பாகிஸ்தானியர் 936, மாலைதீவினர் 291 பேர் நாடு கடத்தப்படுகிறார்கள்
நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், சிறிலங்காவில் தங்கியுள்ள 7900 வெளிநாட்டவர்கள் பற்றிய தரவுகளை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு அலகு கண்டறிந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.
“இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா நுழைவிசைவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத் துறைகளிலும், உணவகங்கள், விவசாயப் பண்ணைகளில் பணியாற்றுவதுடன், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
நுழைவிசைவு காலாவதியான பின்னரும் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
குறிப்பாக 1,680 இந்தியர்கள், 936 பாகிஸ்தானியர்கள், 683 சீனர்கள், 291 மாலைதீவு நாட்டவர்கள், 152 பங்களாதேஷ் நாட்டவர்கள், 42 ஜப்பானியர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 157 பேரும், லெபனானை சேர்ந்த 157 பேரும், நைஜீரியாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும், நுழைவிசைவு காலாவதியான பின்னரும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment