இலங்கையிலிருந்து ஹஜ் செல்ல 100 பேர் பின்வாங்கினர்
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களையடுத்து நாட்டில் அசாதாரண நிலைமை உருவாகியுள்ளதால் இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு உறுதி செய்திருந்த விண்ணப்பதாரிகளில் இதுவரை சுமார் 100 பேர் தங்கள் ஹஜ் யாத்திரையை இவ்வருடம் இரத்துச் செய்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
இவ்வருட ஹஜ் யாத்திரையை இரத்துச் செய்துள்ளமையையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ள, ஏற்கனவே இவ்வருட ஹஜ் பயணத்திற்கு தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். எனவே 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தியுள்ள இவ்வருட ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்படாத ஹஜ் விண்ணப்பதாரிகள் உடனடியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அவ்வாறு தொடர்புகொள்ளும் விண்ணப்பதாரிகள் வெற்றிடங்களுள்ள ஹஜ் முகவர்களுடனே இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு முன்வரும் ஹஜ் விண்ணப்பதாரிகள் வெற்றிடங்களுள்ள முகவர் நிலையங்களின் விபரங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாடுகளில் கடமை புரியும் இலங்கையரில் ஒரு தொகையினரும் தங்களது ஹஜ் பயணத்தை இவ்வருடம் நிறுத்தி வைக்குமாறு கோரியுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து இங்கிருந்தே ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தவர்களாவர்.
இறுதி நேரத்தில் எத்தகைய சிக்கல்கள் உருவாகினாலும் ஹஜ் ஏற்பாடுகளை எவ்வித குறைகளுமின்றி நிறைவேற்றுவதற்கு ஹஜ் குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment