ISIS பயங்கரவாத செயற்பாடுகளை, இந்நாட்டு முஸ்லிம்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
நாட்டில் அண்மையில் இடம் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களின் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினை வன்மையாக கண்டிப்பதாக திருகோணமலை மாவட்ட முஸ்லீம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கிண்ணியா பொது நூலக மண்டப கேட்போர் கூடத்தில் இன்று (04) இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. கிண்ணியா உலமா சபை, சூரா சபை, பள்ளி சம்மேளனங்கள் ஒன்றினைந்து நடாத்தப்பட்ட குறித்த சந்திப்பில் இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றதோடு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது.
குறித்த மிலேசத்தனமான தாக்குதலில் உயிரிழந்த சகோதர உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்து துயரிற்றிருக்கும் அனைவரினதும் உடல், உள ஆரோக்கியத்திற்கும் இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறோம்.
மனித குலத்திற்கெதிரான இக்கொடூர தாக்குதலினை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது மதங்களும் அதன் போதனைகளும் கொலைகளையும், தற்கொலைகளையும் ஒருபோதும் ஆதரிப்பதில்லை இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவரது நோக்கம், மதம் இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கி உள்ளங்களை மாசுபடுத்தி விடுவதாகும் . இந்நோக்கத்தினை அடையமுடியாதவாறு அனைத்து இனங்களும் ஒன்றினைந்து நாட்டைக் கட்டியெழுப்பவதன் மூலமே பயங்கரவாதிகளின் இவ்விலக்கினை தோற்கடிக்க முடியும்
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக வல்லரசுகளினதும் ஏகாதிபத்திய சக்திகளினதும் இரானுவ பொருளாதார ஆதிக்கப்போட்டி நிமித்தம் தமது செல்வாக்கினை நிலை நிறுத்துவதற்கு நமது தாய் நாட்டை ஆடுகளமாக பயன்படுத்த முனைந்து நிற்பதனை இத்தாக்குதல் புலப்படுத்துகின்றது எனவே நாம் ஒவ்வொருவரும் இலங்கை பிரஜை என்ற வகையில் இதற்கு இடமளிக்க முடியாது.
இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் , போதனைகளுக்கும் மாற்றமான முறையில் இஸ்லாமிய அடையாளங்களோடு ISIS பயங்கரவாத அமைப்பினரது செயற்பாடுகளை இந்நாட்டு முஸ்லிம்கள் ஒரு போதும் அங்கீகரிக்கப்போவதில்லை " எவர் ஒரு உயிரை கொலை செய்கின்றாறோ அவர் முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்தவராவார் " என்ற அல்குர்ஆனின் போதனைக்கும் "ஒரு பூனையை கட்டி வைத்து ஆகாரமின்றி வேதனைப்படுத்தியதனால் ஒரு பெண் நரகம் செல்வால்" என்ற நபியவர்களின் எச்சரிக்கைக்கும் முற்றிலும் எதிரான இம்மிலேசத்தனமான தாக்குதலினை மேற்கொள்வதற்கு துனைபோனவர்களை இனங்கண்டு ஒழிப்பதற்கான ஒத்துழைப்புக்களை நாம் மேலும் வழங்குதல் வேண்டும். எமது மக்கள் இவ்விடயத்தில் மிகுந்த தெளிவோடு உறுதியோடும் இப்பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர். இவ் ஒத்துழைப்பினை இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் சாதகமான முறையில் அரசும் பாதுகாப்புப் பிரிவும் பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறோம் மாற்றமாக குறித்த ஒரு சமூகத்தின் சமய கலாசார பண்பாடுகளையும் உரிமைகளையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் இவ்விடயம் அனுகப்படுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.ஒரு சமூகத்தின் இனத்தின் அடையாளத்தோடு ஒரு சிறு குழுவினர் மேற்கொள்ளும் செயற்பாட்டினை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் பணியினை நாம் ஏற்க முடியாது .
தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சமய அரசியல் சமூக தலைமைகள் பாதுகாப்பு தரப்பினர் ஊடகவியலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் மிகப் பெரும் பொறுப்பு உள்ளது இதன் போது உண்மைகளை கண்டு பிடித்து வெளிக்கொணருதல் பக்கச்சார்பின்றி செயற்படுதல் சமூக ஒற்றுமையையும் நாட்டில் அமைதியையும் உருவாக்குதல் பொறுப்பு வாய்ந்த நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்
இவ்வாறான பல கசப்பான அனுபவங்களை கடந்த காலங்களிலும் நாம் கடந்து வந்துள்ளோம் தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலைமையையும் தாண்டி இனங்களுக்கிடையில் ஒற்றுமைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் இறைவனிடம் பிரார்த்திப்போம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment