IS பயங்கரவாதியின் கராத்தே குரு துவான் மாஸ்டர் - இலங்கையில் தொடரும் கைதுகள்
(எம்.எப்.எம்.பஸீர்)
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து சிரியாவில் பயிற்சிகளை முன்னெடுத்திருந்த போது 2015 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மொஹம்மட் ஷப்ராஸ் நிலாம் அஹமட் என்பவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தார் எனக் கூறப்படும் சர்வதேச கராத்தே சங்கம் ஒன்றின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஒருவரை 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய உளவுத்துறை வழங்கிய தகவல்களுக்கமைய கொழும்பு 5, டொரிங்டன் மாவத்தையைச் சேர்ந்த துவான் மாஸ்டர் என அறியப்படும் துவான் அசார்தீன் சாலிஹீன் சல்தீன் என்பவரே நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இவ்வாறு 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டவராவார்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்த அனுமதி கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேராவுக்கு நேற்று நாரஹேன்பிட்டி பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவரை மீள ஆகஸ்ட் நான்காம் திகதி மேற்பார்வைக்காக முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
துவான் மாஸ்டருடன் சேர்த்து மற்றொரு நபரும் தேசிய உளவுத்துறை ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலின் கீழ் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் தடுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாத ஆதரவு பிரசாரங்களை செய்ததாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் ஷங்ரி -லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொலைபேசியில் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறி பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் முபாரக் முப்ஷல் எனும் சந்தேக நபரையும் 90 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட தெஹிவளை ட்ரொபிகல் இன் தங்குவிடுதி தற்கொலை குண்டுதாரியான அப்துல் லதீப் ஜமேல் மொஹம்மட்டின் மாமனார் முறையிலான சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.
துவான் மாஸ்டரின் கைது:ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த முதலாவது இலங்கையர் என தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ள மொஹம்மட் முஷின் இஷாக் அஹமட், மொஹம்மட் ஷப்ராஸ் நிலாம் அஹமட் ஆகிய சகோதரர்களில், ஷப்ராஸ் நிலாம் அஹமட் சிரியாவில் வைத்து அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்ட குறித்த பயங்கரவாதிக்கு இந்நாட்டில் வைத்து கராத்தே கலையை ‘ சென்சே துவான் மாஸ்டர் ‘ என்பவர் பயிற்றுவித்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பயங்கரவாதி ஷப்ராஸின் மகனுக்கு குறித்த துவான் மாஸ்டர் கராத்தே கற்றுக் கொடுத்துள்ளதாகவும் இதன்போதே ஷப்ராஸ் தனக்கும் கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி இதனை 2008 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டுள்ளதாக அந்த தகவல்களில் உறுதியாகியுள்ளது. இந்த கராத்தே பயிற்றுவிப்பு நடவடிக்கைகள் தெமட்டகொடை பகுதியில் உள்ள தெளஹீத் பள்ளிவாசல் ஒன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
அப்போது பயங்கரவாதி ஷப்ராஸ் நிலாம் அஹமட் கொலன்னாவ பகுதியில் சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபராக செயற்பட்டுள்ளதுடன் சட்டத்தரணியான அவர் பல வழக்குகள் தொடர்பில் நீதிமன்றிலும் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய கராத்தே பயிற்றுவிப்பாளர் துவான் மாஸ்டரை நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை துவான் மாஸ்டரின் இரு மகன்மாரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றமையும்
சுட்டிக்காட்டத்தக்கது.
பம்பலப்பிட்டி கைது:
பம்பலப்பிட்டி பகுதியில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் முபாரக் முப்ஷல் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஷங்ரி -லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹம்மட் சஹ்ரான் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது தொலைபேசியிலிருந்து சில புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேராவுக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந் நிலையில் சந்தேக நபரை மீள ஜூலை 22 ஆம் திகதி மேற்பார்வைக்காக நீதிமன்றில் ஆஜர் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
ஷேக் பாஹிம் நிசாமின் கைது:
கொஹிலவத்தை – அங்கொட பகுதியைச் சேர்ந்த ஷேக் பாஹிம் நிசாம் எனும் குறித்த நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொலைபேசி வாயிலாக மிக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய சந்தேக நபரின் தொலைபேசி விபரக் கொத்தைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது.
அத்துடன் குறித்த சந்தேக நபரான ஷேக் பாஹிம் நிசாமின் முதல் திருமணத்தில் கிடைத்த மகளே தெஹிவளை ட்ரொபிகல் இன் தங்குவிடுதியில் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியான அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்டின் மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவரிடமும் விசாரணைகள் தொடரும் நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
For Arresting Muslims using Emergency Law.
ReplyDeleteFor Arresting Sinhalese Buddhist Racist/Terrors.. using normal law.
.... Shit Law and Order..
End Of Peaceful SriLanka.