Header Ads



ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் - ஐ.நா. ஆணையாளரிடம் மகஜரும் கையளிப்பு (வீடியோ)


(Anzir)

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் 27 ஆம் திகதி, திங்கட்கிழமை அன்று அன்று ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள்  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை கண்டித்தும், ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கண்டிப்பதற்காகவுமே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் பெண்களும் பங்கேற்றிருந்தனர்

ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை, சுவிசில் இயங்கும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் விடுத்திருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிற்சர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றிருந்தனர்.

புனித நோன்பை நேற்றவர்களாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இவர்கள், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய், நீதியை நிலைநாட்டு, பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல,  ஜனாதிபதியே ஞானசாரரை விடுதலை செய்தது ஏன்..? வன்முறையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடி நஸ்டஈடு வழங்கு, ஐ.நா.வே விழித்தெழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவே இலங்கை முஸ்லிம்களை கண்திறந்து பார், கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு மதிப்பளிக்கிறோம் போன்ற கோசங்களை எழுப்பினர்

அத்துடன் பல்வேறு அர்த்தங்களை அடங்கிய, நீண்ட பதாதைகளையும்  தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கைக் கொடியுடன் தாம் வசிக்கும் நாடுகளின் கொடிகளை தாங்கியிருந்ததுடன், சுவிற்சர்லாந்தில் பணியாற்றும் இலங்கைத் தூதரக அதிகாரிகள்   2 பேர் வந்து, ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்த பதாதைகளையும் படமெடுத்தனர்.

நண்பகல் 1 மணிக்கும் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விமானம், புகையிரதங்கள், சொந்த வாகனங்கள் மூலம் ஐரோப்பாவின் பல்வேறு தேசங்களில் இருந்தும் தாம் இலங்கை முஸ்லிம்கள் என்ற உணர்வினால் உந்தப்பட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஆர்ப்பாட்ட இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதன் ஆணையாளரிடம் (Michelle Bachelet Jeria)  கையளிப்பதற்காக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் ஹனீப் மொஹமட்டினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

இந்த மகஜரில் குருநாகல், கம்பஹா, மற்றும் புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குறித்தும், அவர்களின் சொத்து இழப்புக்கள், தாக்கப்பட்ட பள்ளிவாசல்களின் விபரங்கள் ஆகியன உள்ளடங்கியிருந்தமையுடன் இவ்விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் ஆர்ப்பாட்டம் முடிவுறும் நேரத்தில், ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்தவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, அவர்களும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




3 comments:

Powered by Blogger.