சஹ்ரானின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பான, மில்ஹானைத் தேடி வேட்டை
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த கொடூர தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு உயர்மட்ட தகவல்கள் கேசரிக்கு வெளிப்படுத்தின.
மில்ஹான் எனும் குறித்த நபர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு உம்ராவுக்காக சென்றுள்ளதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவர் மீள இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் அவரது பயணப் பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன. அதன்படி மில்ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர், யுத்த காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை ஆயுதப் படைகளில் இருந்தவர் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுணதீவு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலையினையும் அவரே நெறிப்படுத்தியுள்ளதாகவும் தகவ்ல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியன அவை தொடர்பில் சுமார் 68 பேரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றன . அவர்களில் குறித்த தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றை நெறிப்படுத்திய பிரதான சந்தேக நபர்கள் 8 பேர் அடங்குவதாக உயர்மட்ட விசாரணை தகவல்கள் ஊடாக தெரியவருகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு - மன்முனைப் பற்று , ஒல்லிக்குளம் பகுதியில் தேசிய தெளஹீத் ஜமா அத் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரான சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட ரில்வானின் கீழ் இயங்கியதாக கூறப்படும் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர்கள் கொண்ட விசாலமான இடப்பரப்பைக் கொண்ட இந்த இடம் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் சிறப்புக் குழுவினரால் சுற்றிவலைக்கப்பட்டது. இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹசிமின் மைத்துனர் என கூறப்படும் மெலளானா ரிலா, மற்றும் அவரது சகாவாக கருதப்படும் ஷஹ்னவாஜ் எனும் நபர் ஆகியோர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் இந்த செய்தி வெ ளியிடப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல் பிரகாரம் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கும் நாட்டிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment