இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் உலகம் முழுவதும், அப்பாவி முஸ்லிம்களே பாதிக்கப்பட்டுள்ளனர் - சபாநாயகர்
அடிப்படைவாத தேவைகளுக்காக செயற்படும் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத திருமணங்களை தடுக்கவும் சட்டங்களை கொண்டு வர நாடாளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -28- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாம் எந்த இனம், மதம் மற்றும் கலாசாரத்திற்குரியவர்களாக இருந்தாலும் அனைவரும் நாட்டின் பொது சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்.
எவரும் மதம் மற்றும் இனத்தின் போர்வையில் சட்டத்தை மீற முடியாது. அடிப்படைவாதிகள் சிலர் காரணமாக முழு முஸ்லிம் மக்கள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதத்திற்கு எதிராக எழுச்சி பெற தயாராக இருக்கின்றனர். இலங்கைக்குரிய ஆடை அல்லாத புர்கா போன்ற ஆடைகளை நீக்க முஸ்லிம் சமூகம் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூன்று வாரம் கழிந்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடிப்படைவாத தாக்குதலை நாகரீகமான மனிதர்கள் கண்டிக்க வேண்டும்.
சுதந்திரம் பெறும் போது இலங்கை, ஜப்பானுக்கு இணையான நிலைமையில் இருந்தது. தற்போது பின்தங்கிய நிலைமையில் உள்ளது.
நாட்டின் அமைதியான பயணத்திற்கு தடையாக இருந்த சக்திகள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இதற்கான பிரதான பொறுப்பை, அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும்.
நாட்டை மூலதர்ம வாதத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அடிப்படைவாதிகள் கனவு மட்டுமே காண்கின்றனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமாக உலகம் முழுவதும் அப்பாவி முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment