என்னை சிறையிலடைத்தது போன்று, முஸ்லிம்கள் சகலரையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளி விடாதீர்கள் - ஜனாதிபதி
முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளி விடாதீர்கள் என்று இத்தகையவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்கின்றேன். நாட்டிற்குத் தேசிய நல்லிணக்கம் அவசியமாகும். இந்தப் பகுதியில் பயங்கரவாதிகளில்லை என படை வீரர்களும், புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்துள்ளார்கள். எந்தக் குற்றத்தோடும் தொடர்பில்லாதவர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதே வேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள். குற்றம் செய்தவர்களே தண்டனை பெற வேண்டும். குற்றம் செய்யாதவர்கள் தண்டனையை அனுபவிக்க முடியாது. குற்றம் செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டால் சாதாரண முஸ்லிம்களின் மனம் புண்படும். அந்த வேதனையை வாயால் பேச முடியாது. நாம் முஸ்லிம்களின் மனங்களை வெல்ல வேண்டும். பயங்கரவாதிகள் யார் என்று அடையாளம் காண வேண்டும்.
இவ்வாறு நேற்று சாய்ந்தமருது லீமெரிடேரியன் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து 26ஆம் திகதி இங்கு நடைபெற்ற சம்பவத்தின் பின்னர் உங்களை சந்திக்க வேண்டுமென்பதற்காக இங்கு வருகை தந்துள்ளேன். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினால் 30 வருடங்கள் கஷ்டப்பட்டோம். பல்லாயிரம் உயிர்களை இழந்தோம். பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டோம். யுத்தகாலத்தில் புலிகளினால் ஐந்து முறை இலக்கு வைக்கப்பட்டு தப்பியுள்ளேன். அந்த இலக்குகளில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். என்னைக் கொலை செய்வதற்கு முயற்சிகளை எடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரை நான் மன்னித்து விடுதலை செய்தேன்.
பயங்கரவாதம் என்பது நல்லதொரு விடயமல்ல. நாட்டு மக்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் தேவை. அப்போதுதான் நிம்மதியாக வாழலாம். பயங்கரவாதம் இவைகளை இல்லாமல் செய்யும் ஒன்றாக இருக்கின்றது. வாலிபர்கள் சுதந்திரத்தையும், நிம்மதியையுமே விரும்புகின்றார்கள். இங்கு சமுகம் தந்துள்ள அனைத்து இளைஞர்களையும் எனது பிள்ளைகளைப் போலவே எண்ணுகின்றேன். உங்களைப் போலவே எனக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஆதலால், இளைஞர்களாகிய நீங்கள் தவறான வழிகளில் செல்வதனை நான் விரும்பவில்லை.
சில ஊடகங்கள் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று காட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தீர்கள். அதைப் பற்றியே பேச வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள் யாரும் முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் என்று பார்க்க வேண்டாமென்று பல இடங்களில் சொல்லிக் கொண்டு வருகின்றேன். விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது அவர்களோடு ஒரு சிறு குழுவே இருந்தது. ஆனால், தமிழர்களை அனைவரையும் பயங்கரவாதிகளாக கருதிச் செயற்பட்டதனால்தான் விடுதலைப் புலிகளோடு தமிழர்கள் பலரும் இணைந்து கொண்டார்கள். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்தின் போது தமிழர்களின் வீடுகள், வியாபாரம் போன்றவற்றை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனால்தான் தமிழர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள். ஆயினும் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளல்லர். புலிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் படையினர் வருகை தந்தார்கள். ஆனால், முடியவில்லை. இறுதியில் எமது நாட்டுப் படையினரே புலிகளை அழித்தார்கள்.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்ற சம்பவங்களில் ஒரு சிறு குழுவினரே சம்பந்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் சுமார் 150இற்கும் குறைவானவர்கள். இவர்களைத் தவிர முஸ்லிம்கள் யாரும் பயங்கரவாதிகளல்லர். இதனைப் புரிந்துகொள்ளாத சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
ஆதலால், முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளி விடாதீர்கள் என்று இத்தகையவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்கின்றேன். நாட்டிற்கு தேசிய நல்லிணக்கம் அவசியமாகும். இந்தப் பகுதியில் பயங்கரவாதிகளில்லை என படை வீரர்களும், புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்துள்ளார்கள்.
எந்தக் குற்றத்தோடும் தொடர்பில்லாதவர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள். குற்றம் செய்தவர்களே தண்டனை பெறவேண்டும். குற்றம் செய்யாதவர்கள் தண்டனையை அனுபவிக்க முடியாது. குற்றம் செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டால் சாதாரண முஸ்லிம்களின் மனம் புண்படும். அந்த வேதனையை வாயால் பேச முடியாது. நாம் முஸ்லிம்களின் மனங்களை வெல்ல வேண்டும். பயங்கரவாதிகள் யார் என்று அடையாளங் காண வேண்டும். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு வேண்டும். பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குங்கள். அது நீங்கள் நாட்டிற்கு செய்யும் உயர்ந்த காரியமாகும்.
1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு இருந்தேன். அப்போது சேகுவேரா கிளர்ச்சி ஏற்பட்டது. நான் பாடசாலைக் காலத்தில் பல சேட்டைகளை செய்வேன். பாடசாலையில் மாணவர்களைக் கொண்டு ஒரு சங்கம் அமைத்தேன். அதனை பாடசாலையின் அதிபர் விரும்பவில்லை. இதனால், அதிபருக்கும், எனக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் அதிபர் என்னை பயங்கரவாதி என்று பொலிஸாருக்கு தகவல்களைக் கொடுத்தார். ஆனால், நான் ஜே.வி.பியின் எந்த வகுப்புக்களிலும் பங்குபற்றவில்லை. பொலிஸார் என்னைக் கைது செய்து துன்புறுத்தினார்கள். இருட்டறையில் போட்டார்கள். என்னோடு 06 பேர் அந்த அறையில் இருந்தார்கள். எதற்காக என்னை இவ்வாறு இருட்டறையில் அடைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு வேறு அறைகளில்லை என்று பொலிஸார் தெரிவித்தார்கள். இவ்வாறு 03 மாதங்கள் இருட்டறையில் அடைத்தார்கள். மட்டக்களப்பு சிறையிலும் அடைக்கப்பட்டேன். சிறையில் இருக்கும்போது படித்துக் கொண்டிருந்தேன். அம்பாறை உகன மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சை எழுதுவதற்காக கைவிலங்குடன் கொண்டு செல்லப்பட்டேன். என்னோடு இன்னும் சிலர் வந்திருந்தார்கள். பரீட்சை எழுதுவதற்காக கைவிலங்கை கழற்றினார்கள். கையில் போடப்பட்ட விலங்கால் கையில் புண் ஏற்பட்டிருந்தது. எந்தக் குற்றமும் செய்யாத எனக்கு ஏன் தண்டனை என்று கண்ணீர் வடித்தேன். அந்தக் கண்ணீர் விடைத்தாளில் விழுந்தது. அத்தோடு கையில் இருந்த புண்ணிலிருந்து இரத்தம் வடிந்தது. அந்த இரத்தமும் விடைத்தாளில் பட்டது.
பரீட்சை முடிந்தவுடன் என்னை பொலன்னறுவையிலுள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். என்னை முழங்காலில் நிற்க வைத்தார்கள். அவர்கள் என்னை சுடப் போகின்றார்கள் என்று நினைத்தேன். பின்னர் என்னை எழும்புமாறு பணித்தார்கள். அன்று நான் சுடப்பட்டிருந்தால் ஒரு ஜனாதிபதியே சுடப்பட்டிருப்பார். எந்தக் குற்றமும் செய்யாமல் ஒன்றரை வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளேன்.
எனது கதையை ஏன் சொல்லுகின்றேன் என்றால், இளைஞர்களை யாரும் தவறாக நோக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். இப்போதுள்ள அதிபர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகின்றேன். இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இளைஞர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இங்கு கருத்துக்களை முன்வைக்கும்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்புகள் இருக்கின்றதா என்று கேட்டீர்கள். பயங்கரவாதிகளுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கின்றன. சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புகள் இருக்கின்றன.
பெண்களின் முகத்தை மூடும் விடயத்தில் அரசியல் தலைவர்கள், உலமாக்கள் ஆகியோர்களுடன் கலந்து பேசியே முடிவுகளை எடுத்துள்ளோம். அதனை அவசரகால சட்டத்தின் கீழேயே செய்துள்ளோம். இது விடயத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள், உலமாக்கள் ஆகியோர்களுடன் கலந்து பேசி முடிவுகளை எடுப்போம்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பலரும் பாராட்டி பேசினார்கள். போதைப்பொருள் வியாபாரத்திற்கும், சர்வதேச பயங்கரவாதத்திற்கும் தொடர்புகள் இருக்கின்றன. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் இடை நிறுத்தமாட்டேன். வெளிநாடுகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது பற்றியும் விசாரணைகள் நடைபெறுகின்றன. எப்படியாக இருந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தோடு தொடர்புடையவர்களுக்கு நிச்சயமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் கல்வி அமைச்சினதும், உயர்கல்வி அமைச்சினதும் மூலமாக சகல இனத்தவர்களுக்குமுரிய தனியார் பல்கலைக் கழகமாக செயற்படுவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம். இங்கு எவ்வாறான பாடங்கள் கற்பிக்கப்பட இருக்கின்றதென்ற தெளிவு இல்லாத நிலையில் பலவிதமாக பேசுகின்றார்கள். எவ்வாறான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றதென்று தெரிய வரும்போது பிரச்சினைகள் இல்லாமல் போகுமென்று நம்புகின்றேன்.
குர்ஆனை தவறாக புரிந்தவர்கள் சோதனை நடவடிக்கைகளின் போது வேறு விதமாக நடந்திருக்கலாம். அது இப்பிரதேசத்தில் நடைபெறவில்லை. வேறு பிரதேசங்களில் நடைபெற்றுள்ளன. ஆயினும், இனிமேல் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. பாடசாலைகளில் மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பிள்ளைகளின் வரவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை மாணவர்களின் நலனுக்காகவே செய்யப்படுகின்றன. இது பற்றி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடசாலைகள் விளக்கம் கொடுக்க வேண்டும். நாமும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.
சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபை பற்றியும் பேசப்பட்டது. இதனை செய்வதற்கு நானும் விருப்பம் கொண்டுள்ளேன். இது விடயத்தில் உங்களில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால்தான் இது தாமதமாகியுள்ளது. அதே வேளை, இதனை உள்ளூராட்சி அமைச்சரே வர்த்தமானி மூலமாக அறிவிக்க வேண்டும். ஆதலால், தலைவர்களுடனும், உள்ளூராட்சி அமைச்சருடனும் இதுபற்றி பேசி நடவடிக்கைகளை எடுப்பேன்.
-Vidivelli
Post a Comment