முஸ்லிம் சமூகம், மீண்டும் தலைநிமிர வேண்டுமா..? ஒரேயொரு வழிதான் உள்ளது...!
“காகம் பறக்காத ஊருமில்லை காத்தான்குடியான் வாழாத இடமுமில்லை” என்ற ஒரு பேச்சுவழக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகின்றது. சஹ்ரான் என்ற ஒரு மனிதன் அங்கு மக்கள் இருப்பை இன்று கேள்விக்குறியாக்கி விட்டான்.
இந்த நாட்டில் முஸ்லிம்களின் செல்வாக்குமிக்க நகர் காத்தான்குடி. அங்கு வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும் மரண பயத்தில் உறைந்து போய் நிற்கின்றான். குட்டி சவூதி என்ற அந்த மண் இன்று குப்புற வீழ்ந்து கிடக்கின்றது. மொத்தத்தில் நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்கள் நிலையும் இதுதான் இன்று.
இந்தக் கட்டுரை ஊடாக நாம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இஸ்லாமிய பிரசையையும் தனிமனிதன், பிள்ளைகள், பெற்றோர், மஹல்லா, ஜமாஅத், சமூக அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் தலைமைகள், பிரதேச, தேசிய மட்டங்கள் என்ற வகையில் சில செய்திகளை வழங்க முற்படுகின்றோம்.
அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது நடாத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் இன்று நமது நாட்டை மட்டுமல்ல முழு உலகத்தையும் ஆட்டிப் போட்டிருக்கின்றது. அதன் தலைவன் பக்தாதி தமது இஸ்லாமிய சாம்ராஜ்யம் தோற்கடிக்கப்பட்டதால் அதற்குப் பழிவாங்கவே தாம் இலங்கையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் வீடியோவில் முழு உலகிற்கும் தகவல் கொடுத்திருக்கின்றான். இதனால் அவன் இன்னும் உயிருடன் இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இவனது இந்த அறிவிப்பு மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப்போடுகின்ற கதை என்பது மிகவும் தெளிவாகின்றது. அவர்களது அரசு தோற்கடிக்கப்பட்டதற்கு இந்த நாட்டிலுள்ள மக்களை பழிவாங்குவது என்ன நியாயம் என்று கேட்பதைவிட இந்த ISIS பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் இலக்கும் மிகத் தெளிவாக மீண்டும் ஒருமுறை உலகிற்குத் தெரிய வந்திருக்கின்றது.
இதனை இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல, முழு உலகளாவிய முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான ஓர் அமைப்பு. இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டிருப்போர் எல்லாம் முஸ்லிம்களுமல்ல, இஸ்லாத்தின் பெயரில் இயங்குகின்ற அமைப்புக்கள் எல்லாம் இஸ்லாமிய அமைப்புகளுமல்ல.
முஸ்லிம்கள் அல்லாத ஜே.வி.பி. மற்றும் விமல் வீரவன்ச தரப்பினர்கூட இது அமெரிக்காவின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே தாக்குதலைப் பாவித்து இலங்கையில் அமெரிக்கா காலூன்ற முனைகின்றது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
நமது நாட்டில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு ஊடாக இந்த ISIS ஊடுருவி இருக்கின்றது என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது.
இவ்வாறான இயக்கங்களை இவர்கள் பணத்தால் விலைக்கு வாங்கியிருக்கின்றார்கள். எனவேதான் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சஹ்ரானின் குடும்பத்தினர் சாய்ந்தமருதுவில் கொல்லப்பட்ட போது அவர்களிடம் பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தது.
படைத்தரப்பு சுற்றிவளைத்த பின்னர் இனியும் நாம் தப்ப முடியாது என்று தெளிவாக உணர்ந்து கொண்ட சஹ்ரானின் சகோதரர்கள், “நாய்களே உங்களுக்காகத் தான் போராடுகின்றோம். உயிரைக் கொடுக்கின்றோம். இந்தாங்கள் இந்தப் பணத்தை சாப்பிடுங்கள” என்று 5000 ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக வீசி எறிந்தார்கள் என்று பிரதேசத் தகவல்கள் சொல்லி இருந்தன.
எப்படி இவர்களிடம் இந்தளவு தொகையான பணம் வந்திருக்க வேண்டும். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. தாக்குதலில் சம்பந்தமுடையவர்கள் தமது குடும்பத்தினர், மனைவிமார் பெயரில் பல வாகனங்களைக் கொள்வனவு செய்து பதிந்திருக்கின்றார்கள். எனவே இவை எல்லாம் எப்படிச் சாத்தியம். இவர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யாரெல்லாம் இதனால் போஷிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல்கள் விரைவில் தெரியவரக்கூடும்.
சகோதரப் பத்திரிகையொன்றிற்கு எழுதிய கட்டுரையில் நாம் இப்படி ஒரு தகவலை சொல்லி இருந்தோம். சஹ்ரான் இதன் தலைவனாக இருந்தால் முதல் தாக்குதலிலே அந்த இயக்கம் அவனைப் பலி கொடுக்காது என்றும் இதற்கு வேறு தலைவன் ஒருவன் இருக்கக் கூடும் என்று சொல்லி இருந்தோம்.
ஆனால் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித எமது கருத்தை கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்து சஹ்ரான் உண்மையான தலைவன் அல்ல. இதற்கு வேறு ஒருவனே தலைமை தாங்கி இருக்கின்றான். நல்ல வேளை அவன் தற்போது கைதாகி இருக்கின்றான் என்றும் சொல்லி இருந்தார். தலைவர் கைதாகி இருந்தால் இன்னும் புதிய பல தகவல்கள் வெளியில் வரும்.
எவரெல்லாம் இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தார்கள் என்று தெரிய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பிற சமூகத்தினர் தம்மை சந்தேகிப்பது எப்படிப் போனாலும் இன்று ஒரு முஸ்லிமுக்கு அடுத்த முஸ்லிமில் நம்பிக்கையில்லை. அடுத்த வீட்டுக்காரனை நம்பமுடியாது. தந்தைக்குத் தனது பிள்ளைகளை நம்ப முடியாது. பிள்ளைக்குத் தனது தாயை தந்தையை நம்ப முடியாது. வருகின்ற தகவல்களின்படி தாய், தந்தையர்களே தமது பச்சிளம் பாலகர்களை வெடிகுண்டு வைத்துச் சிதைத்திருக்கின்றார்கள்.
குழந்தைகள் உடம்பில் கூட வெடிகுண்டுகளை கட்டி இஸ்லாத்தின்பேரால் அவர்களைத் தியாகிகளாகப் பார்க்கின்ற ஒரு கொடிய மனநிலைதான் இவர்களுக்கு இருந்திருக்கின்றது. மதத்தின் பேரால் இவ்வாறான கொலை சம்பவங்களை நாம் இதற்கு முன்னர் நமது நாட்டில் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கின்றோமா என்பதனை முஸ்லிம் சமூகம் யோசிக்க வேண்டும்.
கொலையாளிகள் இலங்கையை ஏன் தெரிவு செய்தார்கள் என்பதற்கு அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் அமெரிக்காவுக்கு கதவுகளைத் திறந்து கொடுக்கின்ற வேலைதான் இது என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.
ஆனால் எம்மைப் பொறுத்தவரை அந்த வாதங்களை முற்றாக எதிர்க்க முடியாவிட்டாலும் உலக ரீதியில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதும் கிறிஸ்தவ – முஸ்லிம் உறவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதும் முஸ்லிம்களின் இருப்பை உலக ரீதியில் கேள்விக்குறியாக்குவதும் இவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரலில் அடங்குகின்றது என்பது எமது வாதம்.
நமது சமயத் தலைமைகள் ISIS பயங்கரவாதிகளின் ஊடுருவலை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருந்தார்கள் என்று தெரியாது. அவர்கள் தமது சொல்லைக் கேட்காது முரண்டுபிடிக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் பொதுவாக ஒட்டுமொத்த தவ்ஹீத் அமைப்புக்களையும் நோக்கினார்கள் என்பது எமது கருத்து.
சர்வதேசப் பயங்கரவாதிகள் தேசிய தவ்ஹீத் அமைப்பு ஊடாக இந்த நாட்டில் கால்பதித்திருக்கின்றார்கள் என்பதனை ஒரு போதும் நமது மதத் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் தவ்ஹீத் அமைப்புக்களை முரண்டு பிடிப்பவர்களாக மட்டுமே பார்த்து வந்திருக்கின்றார்கள்.
இவர்கள் பற்றித் தெரிந்திருந்தால் இந்த நாட்டு முஸ்லிம்களை இவர்கள் தமது ஜும்ஆ பிரசங்கங்களின்போது எப்போதாவது விமர்சித்திருக்கின்றார்களா?.
ISIS ஒரு கொலைகார இயக்கம் என்று எந்த ஜும்ஆ பேருரைகளிலாவது சொல்லப்பட்டிருந்தது என்று கேட்கத் தோன்றுகின்றது. எனவே எல்லா இடங்களிலும் அரசு, பாதுகாப்புத் தரப்பு உட்பட நிறையவே தவறுகளும், ஓட்டைகளும் விடப்பட்டிருக்கின்றன. எனவே இதன்பிறகாவது இந்தக் கொலைகாரர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
நமது தலைமைகள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் இப்படி ஒரு கருத்தைக் கூறி இருந்தார். முஸ்லிம் தலைமைகள் மத்தியில் ஒற்றுமையில்லை என்பது அவரது கருத்தாக இருந்தது.
முஸ்லிம் சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத்தலைமைகளுக்கு போதிய தெளிவு இல்லாவிட்டாலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச இஸ்லாமிய சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார் என்பது எனது கணிப்பு. பேராயர் முஸ்லிம் தலைமைகள் பற்றிச் சொன்னதைத்தான் நாமும் எப்போதுமே சொல்லி வருகின்றோம்.
இதற்கு நல்லதொரு உதாரணத்தை ஈஸ்டர் தாக்குதலின் பின் எம்மால் பார்க்க முடிந்தது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இமாம் இந்த நெருக்கடியான ஜும்ஆவை தவிர்த்து முஸ்லிம்கள் வீடுகளிலே லுஹர் தொழுகையை மேற்கொள்ளுங்கள் என்று வானொலியில் முஸ்லிம்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அதே நேரம் இஸ்லாமிய கலாசார அமைச்சர் ஹலீமும் இதே நிலைப்பாட்டில் பேசினார்.
ஆனால், முஸ்லிம்கள் இப்படி எல்லாம் கோழைகளாக வாழ முடியாது. ஜும்ஆ தொழுகையை பள்ளிவாசல்களில் நடாத்துங்கள் என்று ஊடகங்களில் சொல்லி இருந்தார் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.
ஜும்ஆவை 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேறு சொல்லப்பட்டது. ஆனால் பொறுப்பு வாய்ந்தவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் வழக்கம்போல் ஜும்ஆ பிரசங்கத்தை நேரடியாகப் பணம் கொடுத்து வானொலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்ததுடன், தாக்குதலை ஜே.வி.பி. கிளர்ச்சியுடனும் புலிகளின் போராட்டத்துடனும் ஒப்பிட்டு தனது பிரசாரத்தில் அவருடைய அறிவை வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே, இந்த நெருக்கடியான நேரத்தில்கூட ஒரு பொதுத் தீர்மானத்திற்கு இவர்களினால் வரமுடியவிலை என்பது ஈகோ பிரச்சினை. நாங்கள்தான் பெரியவர்கள், பொறுப்பானவர்கள் எங்களை கேட்காமல் எப்படி முடிவு எடுக்க முடியும் என்ற கதைதான் இது.
அத்துடன் கிறிஸ்தவர்கள் கேட்டுக் கொண்டதற்காகத்தான் இந்த ஜும்ஆ பிரசங்கமும் தொழுகையும் என்று வேறு விளக்கம் சொல்லப்பட்டது. நாம் சொல்கின்ற இந்த கதையின் உண்மைத் தன்மையை கடந்த வெள்ளி நேரடி வானெலி ஒலிபரப்பை எவர் வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிக் கேட்க முடியும். இந்த முரண்பாட்டுக்குக் காரணம் நல்ல வழிகாட்டலின்மையும் அறிவு சார்பற்ற விடயமும் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் குற்றவாளிகளாக படம் பிடித்து காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்தைக் காக்க வேண்டிய இந்த நேரத்தில் தம்மை எப்படிக் காத்துக் கொள்வது என்றுதான் அவர்கள் இன்று பார்க்கின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது.
நிலைமை எந்தளவுக்குக் கொடூரமாகப்போய் இருக்கின்றது என்றால் அரபு எழுத்துக்கள், புத்தகங்கள், சமயப் பிரசுரங்கள் பயங்கரவாதப் பிரசுரங்களாகப் பார்க்கப்பட்டிருக்கின்றன.
வீடுகளில் அன்றாடத் தேவைகளுக்கான கத்தி, பொல்லு போன்ற உபகரணங்களைகூட முஸ்லிம்கள் இன்று குழிதோண்டிப் புதைக்கின்ற நிலை தோன்றி இருக்கின்றது. இந்த அனைத்துக் கொடுமைகளுக்கும் பதில் சொல்வது யார்? எனவே முஸ்லிம்களே இந்த ISIS நமது நாட்டின் இயல்பு நிலையையும் முஸ்லிம்களின் இருப்பையும் கலாசாரத்தையும் குழிதோண்டிப் புதைக்கின்ற காரியத்தைதான் சர்வதேச மட்டங்களில் செய்கின்றார்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
எனவே, தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் மீதும் ஏனையோர் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை நம்ப முடியாது. பிள்ளைகளுக்கு பெற்றோரை நம்ப முடியாது என்பதனைப் புரிந்து செயற்படுங்கள்.
தேசிய மட்டம், பிராந்திய மட்டம், கிராமிய மட்டம், மஹல்லா மட்டம், சர்வதேச மட்டம், இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியர் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகள், செல்வந்தநாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் புதிய யுக்திகளுடனும் புதிய நியாயங்களுடனும் தாக்குதல்களை மேற்கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.
செல்வாக்கான மத்தியகிழக்கு நாடுகள், மலேசியா போன்ற நாடுகளில் இவர்கள் தமது கைவரிசையைக் காட்டி அந்த நாடுகளை பொருளாதார ரீதியில் சீர்குலைக்க வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறான தாக்குதல்களுக்கு மனித குண்டுகள் மட்டுமல்ல ஊடகங்கள் மூலமாகவும் தமது இலக்கிற்காக இவர்கள் பயன்படுத்துகின்றார்கள். இப்போதும் அது நடந்து கொண்டுதான் வருகின்றது.
எமது அவதானப்படி அரசு மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடக்கின்றது, அதன் கட்டமைப்புக்கள் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை விபரமாக தெளிவு படுத்த வேண்டி தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
பொதுவாக நோக்குகின்றபோது இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள், – சோதனைகள் ஒரு கட்டுக்கோப்புக்குள்தான் போய்க் கொண்டிருக்கின்றன. அவர்கள் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைதான் இன்று நாட்டில் இருக்கின்றது.
இந்த காட்டுமிராண்டிகளை இந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதால் மட்டுமே இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் மீண்டும் தலைநிமிர முடியும். இருந்தாலும் வடுக்கள் இருக்கத்தான் செய்யும். போதை வியாபாரத்தின் பின்னால் பண ஆசை இருப்பது போல் இதன் பின்னாலும் இஸ்லாமிய விரோதிகளின் பணம் நிறையவே மூலதனமிடப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்தான் இவர்களிடம் இருக்கின்ற பணக் குவியல்.
நஜீப் பின் கபூர்
காத்தான்குடிப்பிரதேச
ReplyDeleteம் பொருளாதாரம் அர
சியல் ஏனைய துறை
சார் அபிவிருத்தியை
அடைந்து நிற்கும் நேர
த்தில் அறிவுசார் கொ
ள்கைகளுக்கு அப்பால்
பல பிரிவுகளை பிரதே
சத்தில் வளரவிட்டிருப்ப
கண்டுகொள்வதில்லை.
துறைசார் வேலைப்பழு
வினால் குறித்த பிரிவு
கள் சமூக கண்கானிப்
பிலிருந்து விடுபடுகிறது.
இப்போக்கின் ஒரு விளை
வைத்தான் அப்பிரதேசம்
இன்று எதிர்கொள்ள
வேண்டியேற்பட்டுள்ளது.
மிக முக்கியமான விவாதத்தின் ஆரம்பம். 1980 களில் வாகாபிச பரம்பலோடு ஆரம்பீத்து 2001 அல்கைடா ஒசாமா பின்லாடன் என வளர்ந்து இன்று ஐஎஸ் எஸ் வரை பற்றிக்கொள்கிற அளவுக்கு நோய்வாய்ப்பட்ட சமூக கலாசார அரசியல் சூழல் இலங்கையில் குறிப்பாக கிழக்கில் தொடற்சியாக நிலவியுள்ளதை மறந்துவிட்டு சகறானுடன் ஆரம்பித்து இந் நோயையும் அதற்கான மருந்தையும் சரியாக கண்டுகொள்ளமுடியாது.
ReplyDeleteநிச்சயமாக ஜெயபாலன் அவர்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையே.
ReplyDeleteஇதற்கான தீர்வு CIAன் உருவாக்கம்,CIA ன் வேலைகள்,தீவிரவாதத்திற்கு வித்திட்டவர், தாலிபங்களை,பின்லெடனை உருவாக்கியவர் முதல் isis ஐ உருவாக்கியவர் முதற்கொண்டு ஆராயப்பட வேண்டியதாகும் என்பதை விமல் வீரவம்ச அமைச்சர் கூட இன்றய ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
��ஆரம்பத்தில் சமூகத்தை பிரித்தவர்களே இந்தக்கட்டுரையை எழுதியிருப்பது நகச்சுவையாக இருக்கிறது������ acju a குறைசொல்வதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. ntj எல்லா tj உம் ஒரு குப்பைத்தொட்டியின் வெவ்வேறு குப்பைகள்தான். isis இற்கு பின்னால எப்படி zionism இருக்கிரதோ. wahabism இற்கு பின்னாடியும் ஒரு பெரிய history இருக்கு அதை முதல் தேடவும். சுருக்கமா சொல்ரண்டா உங்கட கதையெல்லாம் அள்ளிக்கிட்டு பளயங்.
ReplyDelete